ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

அரசியல்

ஆ.ராசாவை எம்.பி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று 20 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று (செப்டம்பர் 21) செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

“காவல்துறை வேண்டுமென்றே பொய் வழக்குகளை போட்டு பாரதிய ஜனதா தொண்டர்களை கைது செய்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட செயலாளர் உள்பட ஊட்டியைச் சேர்ந்த 8 நிர்வாகிகள் சிறையில் உள்ளனர். கோவை மாவட்டத் தலைவர் இன்று(செப்டம்பர் 21) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்பிறகு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வேறு வேறு திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் 2 பேர், கோவில்பட்டியில் 6 பேர் என ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து குரல் கொடுத்த அத்தனை பேரையும் காவல்துறை பொய்யான வழக்குகள் போட்டு கைது செய்திருக்கிறது.

காவல்துறையை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி பிணையில் வரமுடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆ.ராசா பேசிய கருத்துகளால் சமுதாயத்தில் எந்த பிளவும் ஏற்படாது என்றும், ஆனால் அதைக்கண்டித்து குரல் கொடுத்த பாஜக தலைவர்கள், தொண்டர்களால் சமூகத்தில் பிளவு ஏற்படும் என்று சொல்லி வழக்கு போட்டிருக்கிறார்கள்.

எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக மண்ணில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. சாதாரண தமிழர்கள் கூட இப்போது அரசியலையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். இது ஆளும் கட்சிக்கு ஒரு பின்னடைவு.

இதைப்பற்றி எந்த அமைச்சர்களும் கருத்து தெரிவிக்கவில்லை. ஒரு அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது காது கேட்கவில்லை என்கிறார்.

அவருக்கு புதுக்கோட்டை பாஜகவினர் காதுகேட்கும் கருவியை வாங்கி அனுப்பியிருக்கின்றனர்.

கடந்த 10 நாட்களாக திமுக அமைச்சர்கள் வெளியே வந்து பேசவே பயப்படுகிறார்கள். ஆ.ராசா சொன்னது சரிதான், சனாதன தர்மத்தில் இதெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று யாரும் அவரை ஆதரித்து பேசவில்லை.

அரசியலில் நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்வதற்காக இதுபோன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தமுறை பாஜக ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதில்லை.

அதற்கு பதில் மக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த எம்.பி வேண்டாம் என்று மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பாஜக நடத்திக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் ஆ.ராசா வேண்டாம் என்று கையெழுத்திட்டுள்ளனர்.

அதை தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம். ராசா அவர்கள் எம்பி ஆக அந்த பணியில் இருப்பதற்கு தகுதியில்லை என்று இந்தியா முழுவதும் நாடாளுமன்ற கமிட்டிக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.

2024 ல் தான் தேர்தல் நடக்க இருக்கிறது. மக்கள் அதற்குள் மறந்துவிடுவார்கள். நீங்கள் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும், பால்விலை, பேருந்து கட்டணம், மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்பது திமுகவின் மனநிலை.

பின்தங்கிய வகுப்பினரின் வாக்கு வங்கியை பெறவே திமுகவினர் இதுபோன்று சாதி ரீதியிலான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதை ஒரு மக்கள் போராட்டமாக பாஜக எடுத்துச் செல்லும்” என்றார் அண்ணாமலை.

கலை.ரா

ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

பட்ஜெட் விலையில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *