சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில், முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 30) கலந்துகொண்டார்.
ஜானகியின் சிறப்பு மலரை வெளியிட்ட பின் மேடையில் உரையாற்றிய அவர், “நான் இந்த கல்லூரியின் வழியாக காரில் செல்லும்போதெல்லாம், மாணவிகளின் உற்சாகக்குரல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடல் வலிமை எந்த அளவுக்கு முக்கியமோ, மன வலிமையும் அந்த அளவுக்கு முக்கியம்.
அது மாணவர்களிடம் அதிக அளவில் இருக்கும். அதனால்தான் கல்லூரி நிகழ்ச்சி என்றால் நான் உற்சாகமாக கிளம்பிவிடுவேன்.
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் ஜானகிதான். அவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வது பெருமை.
ஆனால் இது ஒரு சிலருக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். எம்ஜிஆர் 20 ஆண்டுகாலம் திமுகவில் இருந்தார்.
திராவிட முன்னேற்றத்தின் பொதுவுடைமை கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் உந்து சக்தியாக இருந்தார்.
ஆனால் கால சூழ்நிலையால் அவர் தனி இயக்கத்தை உருவாக்கினார். ஆனால் அதில் அவர் 15 ஆண்டுகள்தான் இருந்திருக்கிறார்.
எம்ஜிஆரே ஒரு மேடையில், தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவராக நானும், சுயமரியாதை கொள்கை பேசுபவராக கலைஞரும் இருந்தார்.
அவரை எப்படியாவது எனது கொள்கைக்கு இழுக்க நினைத்தேன். ஆனால் நான்தான் இறுதியில் திமுகவில் இணைந்தேன் என்று பேசியிருக்கிறார்.
வரலாறு தெரிந்தவர்களுக்கு நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது வியப்பாக இருக்காது. இந்த எம்ஜிஆர் ஜானகி கல்லூரி உருவாக அடித்தளமாக இருந்தவரே கலைஞர்தான்.

எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. என் மீது அளவுகடந்த அன்பும், பாசமும் கொண்டிருந்தார். பெரியப்பா என்ற முறையில் என்னை நன்றாக படிக்கச் சொன்னார்.
என் வாழ்க்கை வரலாற்றில் இதையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன். எத்தனையோ திறமைகளை கொண்டிருந்தவர், நடனம், இசை என பல்துறை ஆற்றல்களை பெற்றவர் ஜானகி.
எம்ஜிஆரும், ஜானகியும் இணைந்து நடித்த முதல் படத்திற்கும், கடைசி படத்திற்கும் கதை வசனம் எழுதியவர் கலைஞர்தான். எனவேதான் பிரிக்கமுடியாத அடிப்படையில் என்னை இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள்.
என்னுடைய வாரிசு ஜானகி என்று உயில் எழுதி வைத்தவர் எம்ஜிஆர். நான் இங்கு வருவது முதல்முறையல்ல. ஏற்கனவே மேயராக இருக்கும்போது வந்திருக்கிறேன்.
முதலமைச்சர் வருகிறார் என்றால் கோரிக்கை இல்லாமல் இருக்காது. அரசின் எண்ணப்படியே கோரிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சி.
சைகை மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் துறையை நான்தான் கையில் வைத்திருக்கிறேன். எனவே அந்தக் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று பேசினார்.
கலை.ரா
“நான் தயார்… நீங்கள் தயாரா?”: மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி சவால்!
“சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும்” –அமைச்சர் எ.வ.வேலு
Comments are closed.