சித்த பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

அரசியல்

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாம் முறையாக திருப்பி அனுப்பியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சித்  தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்,.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அத்துறையின் மானியக் கோரிக்கை மீது இன்று (ஏப்ரல் 18) பதிலுரையாற்றினார்.

அப்போது சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் பற்றிக் குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் 2-9-21 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஓர் அறிவிப்பைக் கொண்டுவந்தார்.

சித்த மருத்துவப் பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.  அறிவித்து சட்ட மசோதாவை நிறைவேற்றினார். ஆளுநருக்கு அனுப்பினார்.

ஆளுநருக்கும் சித்த மருத்துவத்துக்கும் என்ன சண்டை என்றே தெரியவில்லை. ஆளுநர் அதற்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்கள் இருப்பிலே வைத்திருந்தார். பிறகு  திருப்பி அனுப்பினார். அவர் திருப்பி அனுப்பிய பிறகு இரண்டாவது முறையாக அந்த மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இரண்டாவது முறை மசோதா நிறைவேற்றி அனுப்பியதற்குப் பிறகும் நிறைவடையாத ஆளுநர் கடந்த மாதம் மீண்டும் அதில் சில க்ளேரிஃபிகேஷன் கேட்டு அரசுக்குத்  திருப்பி அனுப்பியிருக்கிறார்.

நிச்சயம் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம்  வந்தே தீர வேண்டும் என்ற நிலையில் சமூக ஆர்வலர்கள் மட்டுமல்ல…  சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட அனைவரும் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆளுநர் அவர்கள் இதை செய்ய வேண்டும் என்று அவரை கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்” என்று பேசினார்.

பொதுவாக மாநில சட்டமன்றம் ஒரு முறை நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பலாம்.

அதே சட்ட மசோதாவை மீண்டும் அதாவது இரண்டாவது முறையாக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என்பதுதான் அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சித்த மருத்துவப் பல்கலை மசோதாவை இரண்டாவது முறையாகவும் ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார் என்று அதிர்ச்சித் தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

ஆன் லைன் சூதாட்ட மசோதாவுக்காக ஆளுநருடனான சட்டப் போராட்டம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில்… சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.

வேந்தன்

’குலசாமி’ இசை வெளியீட்டு விழா…கலந்துகொள்ளாத விமல்…வருத்தம் தெரிவித்த அமீர்

பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “சித்த பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

  1. நம்ம நாட்டை ரிஷிகளும், முனிவருங்களும்தான் உருவாக்கினாங்கனு சொல்றவரு, அவங்க கண்டுபிடிச்சதா சொல்லப்படுற சித்த மருத்துவத்தை ஏன் ஏத்துக்க மாட்டேன்றாரு.. எங்கயொ இடிக்குதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *