’’கர்நாடகாவின் முக்கிய தலைவராக நீ ஒரு நாள் வருவாய்’’ என்று சித்தராமையாவின் பாட்டி மல்லம்மா அடிக்கடி அவரிடம் கூறுவார். மல்லம்மாவின் கூற்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. ஆம் இரண்டாவது முறையாக கர்நாடகாவின் முதல்வராகியுள்ளார் சித்தராமையா.
கர்நாடக மாநிலம் மைசூரில் சித்தராமனஹுண்டி கிராமத்தில் பிறந்த சித்தராமையா சிறுவயதில் நாட்டுப்புற நடனக்கலைஞர் நஞ்சிகவுடாவிடம் பயிற்சி பெற்றார்.
கர்நாடகாவின் புகழ்பெற்ற ’வீர மக்கள குனிதா’ நாட்டுப்புற நடனத்தை சித்தராமையா முறைப்படி அவரிடம் கற்றுக்கொண்டார். கோவில் திருவிழாவில் சித்தராமையாவின் நடன திறமையை கண்டு வியந்த சுட்டார் மத் மதகுரு அவரை பாராட்டி ரூ.5 பரிசாக வழங்கினார்.
அந்த ஊருக்கு வந்த காவல்துறை அதிகாரியும் ரூ.5 பரிசுத்தொகை வழங்கியுள்ளார். சித்தராமையா இந்த பணத்தை வைத்து செம்மறி ஆட்டுக்குட்டி ஒன்றை வாங்கியுள்ளார்.
தனது பள்ளிப்பருவம் குறித்து நேர்காணல் ஒன்றில் அவர் கூறும்போது, “பத்தாம் வகுப்பு வரை நான் தான் பள்ளிக்கூடத்திற்கு காலையில் முதல் மாணவனாக செல்வேன்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் படிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வம் தெரிகிறது.
மருத்துவம் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்காததால் சட்டம் படிக்க சித்தராமையா விரும்பினார். அவரது தந்தைக்கு சட்டம் படிக்க வைக்க விருப்பமில்லை. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் சித்தராமையா கூறும்போது, “நான் சட்டம் படிக்க விரும்பினேன். தந்தை அதற்கு சம்மதிக்கவில்லை. அவரிடம் ஊர் பெரியவர்கள் குருபா சமூகத்தினர் வழக்கறிஞர் ஆக முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.
இதனால் சட்டம் படிக்கக் கூடாது என்று தந்தை கூறினார். அவருடன் விவசாய வேலை செய்ய அழைத்தார். ஊர் பெரியவர்களிடம் பேசினேன். சட்டம் படிக்க அனுமதியுங்கள் இல்லை என்றால் எனது சொத்தை பிரித்து கொடுங்கள் என்று தந்தையிடம் கூறினேன். அதன்பிறகு தான் அவர் கல்லூரியில் சேர அனுமதித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் சித்தராமையாவின் அரசியலுக்கு ஊக்கம் அளித்தவர் பேராசிரியர் நஞ்சுண்டசாமி. இவர் மைசூரில் உள்ள சட்டக்கல்லூரியில் சித்தராமையாவுக்கு பேராசிரியராக இருந்தார். நஞ்சுண்டசாமி கர்நாடக ராஜ்ய ராயத் விவசாய சங்கத்தை நடத்தி வந்தார். இந்த சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மாலை வேளையில் கூட்டங்கள் நடைபெறும்.
அதில் நடப்பு அரசியல் நிகழ்வுகள், மக்கள் பிரச்சனைகள், தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தில் சித்தராமையா தவறாமல் கலந்து கொள்வார். இது அவருக்கு அரசியல் பற்றிய புரிதலையும் அரசியலில் தீவிரமாக செயல்பட முனைப்பையும் கூட்டியது.
1979-ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட போவதாக சித்தராமையா தனது தந்தையிடம் கூறியபோது, “மக்கள் உன்னை ஏமாற்றி தோற்கடித்துவிடுவார்கள். கவனமாக இரு…தேர்தலில் போட்டியிடாதே” என்று அறிவுரை கூறியுள்ளார். தந்தையின் எதிர்ப்பையும் மீறி சித்தராமையா 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற பின்பு எங்கள் ஊரில் உள்ள டீ கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து ஊரான சோலிகா காலனியை சேர்ந்த குறி சொல்லும் நபர் என்னிடம் வந்து அரசியலில் நீ மிகப்பெரிய உச்சத்தை தொடுவாய் என்று கூறினார். நான் அந்த இடத்திலிருந்து அவரை விரட்டியடித்தேன்.
1983-ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினரானதும் சோலிகா காலனிக்கு ஒரு முறை சென்றிருந்தேன். என்னை கண்ட குறி சொல்லும் நபர் நான் முன்பே கணித்ததை போல நீ சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்கிறாய் என்றார். எனக்கு சிறிது தர்மசங்கடமாக இருந்தது. நான் அவருக்கு 25 பைசா பரிசாக வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்.
1994-ஆம் ஆண்டு ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தபோது தேவகவுடா அமைச்சரவையில் சித்தராமையா நிதியமைச்சரானார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் நிதியமைச்சராக பொறுப்பேற்றதும் கன்னட சிறுபத்திரிகை ஒன்றில் நிதித்துறையில் என்னுடைய திறனை விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தார்கள்.
அதில் 100 ஆடுகளை கூட கணக்கிட தெரியாத நபர் எப்படி ஒரு மாநிலத்தின் நிதித்துறையை கையாள்வார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். நான் அதற்காக வருத்தப்படவில்லை. அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன்.
முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக சில பொருளாதார அறிஞர்களுடன் கலந்தாலோசனை செய்து 20 நாட்களாக தயார் படுத்திக்கொண்டேன். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சில ஆங்கில பத்திரிகைகள் பட்ஜெட்டை புகழ்ந்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். இது எனது தன்னம்பிக்கையை அதிகரித்தது.
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். நான் தான் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுடன் சித்தராமையா ஏஐபிஜேடி என்ற புதிய கட்சியை தொடங்க முயற்சித்தார்.
புதிய கட்சி துவங்கும் முயற்சிகள் மேற்கொண்டது குறித்து அவர் கூறியபோது, “பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டோம். தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேட்பாளர்கள் பணம் கேட்டார்கள். அப்போது தான் பணமில்லாமல் கட்சியை நடத்துவது சுலபமானது அல்ல என்பதை உணர்ந்தேன். புதிய கட்சியை துவங்க யாரும் பண உதவி செய்ய முன்வரவில்லை. இதனால் கட்சி துவங்கும் எண்ணத்தை கைவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 2006-ஆம் ஆண்டு சோனியா காந்தி முன்னிலையில் சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
சித்தராமையா எப்போதும் வேட்டி மற்றும் நீளமான சட்டை அணிவார். இந்த உடையுடன் அவர் ஊர் திருவிழா ஒன்றில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. வேட்டி சட்டை அணிவது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு ஸ்கின் அலர்ஜி உள்ளது. இதனால் மருத்துவரின் அறிவுரைப்படி நான் வேட்டி சட்டை அணிகிறேன். பெங்களூரு அவென்யூ சாலையில் உள்ள ஒரு காதி கடையில் ஒரே நேரத்தில் 50 வேட்டி 40 சட்டைகள் வாங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் சித்தராமையா செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். அரசியலில் மிகவும் தேவைப்படுவதாக கூறப்படும் சாதி பலம் இல்லாதவர் சித்தராமையா.
இவர் சார்ந்த குருவா சமூகம் கர்நாடகாவில் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். இருப்பினும் கர்நாடகாவில் அரசியல் கணக்கை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்கும் லிங்காயத், ஒக்கலிக்கா மற்றும் பட்டியலின மக்களிடம் செல்வாக்கு பெற்ற நபராக சித்தராமையா உள்ளார். அதற்கு காரணம் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக உரிமைகளை பெற்றுத்தர அவர் நடத்தி வந்த ’அஹிண்டா இயக்கம்’ தான் காரணம் ஆகும்.
அவர்களுடைய பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் சித்தராமையா ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நன்மதிப்பை பெற்றார். இதனால் கிராமப்புற கர்நாடக மக்களிடம் சித்தராமையா வலுவான ஆதரவை பெற்றுள்ளார்.
சித்தராமையா குறித்து அவரது நண்பர்கள், “அரசியல் தாண்டி சித்தராமையா கணிதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். புள்ளிவிவரங்களை நினைவில் சரியாக வைத்திருப்பார். அவரை போல யாரும் சீட்டாட்டம் ஆட முடியாது. ரம்மி ஆடும் போது அவர் ஒரு முறை கூட தோல்வி அடைந்ததில்லை. சித்தராமையா இன்று வரை தொலைபேசி பயன்படுத்துவதில்லை. காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் கூட அவரது உதவியாளரை தொடர்பு கொண்டு தான் சித்தராமையாவிடம் பேசுவார்கள்” என்று கூறுகின்றனர்.
பள்ளி, கல்லூரி காலங்களில் சித்தராமையா சந்தித்த வறுமை தான் அவர் முதல்வரானதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 7 கிலோ அரிசி, பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்த தூண்டுதலாக அமைந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார்.
“நான் கடவுள் மறுப்பாளர் என்று சிலர் கூறுகிறார்கள். சிறு வயதில் கோவில்களில் சென்று வழிபாடு செய்துள்ளேன். இப்போதும் முக்கிய கோவில் தளங்களுக்கு செல்கிறேன். நான் மூட நம்பிக்கைக்கு எதிரானவன். ஒவ்வொரு நிகழ்வுகளையும் அறிவியல் பார்வையுடன் தான் பார்ப்பேன்” என்று தனது ஆன்மிக நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் சித்தராமையா.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் தனது தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது முறையாக சித்தராமையா முதல்வராகியிருக்கிறார்.
செல்வம்
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
பிளஸ் 1 தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!