கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இன்று (மே 20) பதவி ஏற்றனர்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் பிரம்மாண்ட ஏற்பாட்டை செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று இரவே முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
இன்று காலை டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை டி.கே.சிவக்குமார் வரவேற்றார்.
முதலில் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற அவர்கள் அங்கிருந்து கண்டீரவா ஸ்டேடியத்துக்கு வந்தடைந்தனர்.
அதுபோன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, விசிக தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்,
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, சிவசேனா எம்.பி.அனில் தேசாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலினிடம், டி.கே.சிவக்குமார் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் வருகைத் தந்த நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர்.
மேடையில் அனைத்து தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி நலம் விசாரித்து கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது சித்தராமையா அருகில் வந்த டி.கே.சிவக்குமார் அவரது கையை உயர்த்தி பிடித்து காங்கிரஸ் நிர்வாகிகளைப் பார்த்து கையசைத்தார்.
பின்னர் ராகுல் காந்தி இருவரது கையையும் உயர்த்தி பிடித்து காங்கிரஸ் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். மேடையில் பிரியங்கா காந்தியும் மெகபூபா முப்தியும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து பேசிக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழா தொடங்கியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைக்க முதல்வராக சித்தராமையா பதவி ஏற்றார்.
அவர் பதவி ஏற்கும் போது அவரது ஆதரவாளர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் கரகோஷம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களிடம் சென்று கைகொடுத்து வாழ்த்துகளை பெற்றார்.
சித்தராமையாவைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றார்.
பிரியா
டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டு வாங்க மறுப்பா?
“பாசமா எல்லாம் வேஷம்” : மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!