ஜீரோ டிராஃபிக் முறையை திரும்ப பெறுமாறு பெங்களூரு போலீசாரிடம் கேட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பொதுவாக முதலமைச்சர்கள் சாலை மார்கமாக பயணம் மேற்கொள்ளும் போது, கான்வாய் வாகனம் செல்வதற்காக போலீசார் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்வர்.
இதனால் பொதுமக்கள் சரியான நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவர். அதிலும் எந்நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பெங்களூருவில் ஜீரோ டிராஃபிக் முறை பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று பெங்களூரு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (மே 21) அவரது ட்விட்டர் பதிவில், “எனது வாகனப் போக்குவரத்துக்கான ‘ஜீரோ டிராஃபிக்’ முறையைத் திரும்பப் பெறுமாறு பெங்களூரு நகர காவல் ஆணையரிடம் கேட்டுள்ளேன்.
‘ஜீரோ டிராஃபிக்’ காரணமாக கட்டுப்பாடுகள் உள்ள பாதையில் பயணிக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜீரோ டிராஃபிப் முறையை திரும்பப் பெற வேண்டும் என சித்தராமையா கேட்டுக்கொண்டுள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (மே 22) காலை மற்றொரு ட்விட்டர் பதிவில், “தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்வுகளின் போது மரியாதை நிமித்தமாகப் பூங்கொத்து மற்றும் சால்வைகளை வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
மக்கள் தங்கள் அன்பையும் மரியாதையையும் பரிசுகளாக வெளிப்படுத்த விரும்பினால் புத்தகங்களை வழங்கலாம். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: ஆளுநரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி
பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்!