சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா?

Published On:

| By Kavi

Should only DMK contest in Chennai

சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா என்று நிர்வாகிகள் என்னிடம் கேட்பதாக சென்னையில் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர், திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு எட்டப்படாததால் பிப்ரவரி 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஜனவரி 30) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது கே.எஸ்.அழகிரி, “ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு  கிடைக்காது.

உடனே அங்கிருக்கக் கூடிய கட்சித் தொண்டர்கள், இவர்களுக்கு வேலை செய்வதுதான் எங்களுக்கு வேலையா என்று கேட்பார்கள். இது அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தும். திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தும்.

காங்கிரஸ் கட்சியிலும் பேசுவார்கள்?. ஏன் எங்களுக்கு சென்னையில் ஒரு தொகுதி வாங்கிக் கொடுக்கக் கூடாதா எனவும் கேட்பார்கள்.

சென்னையை திமுகவுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டுமா என என்னிடமே கேட்பார்கள். நானும் வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

இது பெரிய பிரச்சினை இல்லை. ஒவ்வொரு கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தொண்டருக்கும் எம்.எல்.ஏ., எம்.பி.ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும்” என கூறினார்.

முன்னதாக புதுச்சேரி மாநில திமுக மாணவரணி சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “காங்கிரசை பொறுத்த வரை சீட் பெறுவதற்காகத்தான் கட்சி நடத்துகிறார்கள். அதனால் என்ன பயன்?. உழைக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செயல்படவில்லை.

ஆனால் தேர்தல் நெருங்கும்போது காங்கிரஸ் கட்சி வந்துவிடும். சீட்டு வாங்குவதுதான் காங்கிரஸின் வேலை. இது மக்கள் மத்தியில் எடுபடாது” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“அதாவது அவருக்கும் சீட் வேண்டும். எனக்கும் சீட் வேண்டும். முடிந்தால் நீங்கள் கூட சீட் கேட்பீர்கள். அவருக்கான பதிலை திமுக தான் சொல்ல வேண்டும். எங்கள் கட்சியில் இப்படி பேசியிருந்தால் நான் பதில் சொல்லியிருப்பேன். அமைச்சரின் பேச்சுக்கு, இது கட்சி விதிகளுக்கு முரணானது. இப்படி பேசியிருக்க கூடாது என அவருடைய கட்சிதான் சொல்லியிருக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறினார் கே.எஸ்.அழகிரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

காந்தி நினைவு நாள்: பாஜகவுக்கு எதிரான அரசியல் ஆக்கிய திமுக!

சென்னை பர்மிட் ஆட்டோக்களின் எல்லை நீட்டிப்பு!