அக்டோபர் 23 ஆம் தேதி… தீபாவளிக்கு முதல் நாள் அதிகாலை கோயம்புத்தூர் மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வாசலுக்கு சற்று அருகே வெடித்துச் சிதறிய கார் தமிழகம் முழுதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த காரில் எல்பிஜி சிலிண்டர் இருந்து வெடித்தது என்றும், அந்த காரை ஓட்டிய ஜமேஷா முபின் என்ற இஸ்லாமிய இளைஞர் இந்த வெடிப்பில் கொல்லப்பட்டார் என்றும் முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின.
போலீசார், ‘சிலிண்டர் விபத்துதான்’ என்று முதலில் அறிவித்தாலும் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாதத்துக்கு எதிரான உபா சட்டத்தை பாய்ச்சினார்கள். இது டெரர் அட்டாக் என்று சொல்ல போலீஸுக்கு தயக்கம் ஏன் என்று தொடக்கம் முதல் கேட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் சம்பவம் நடந்த குறுகிய நாட்களில் இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துவிட்டது தமிழக அரசு.
கோட்டை ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த பாஜகவினர்
அரசியல் கட்சிகள் முதல் ஆளுநர் வரைக்கும் பேசுபொருளான இந்த சம்பவத்தை அடுத்து பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்து கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று… கோயில் அருகிலேயே அந்த காரை வெடிக்க வைத்து பெரும் ஆபத்தில் இருந்து கோவையை காத்தார் ஈஸ்வரன் என்று அவருக்கு நன்றி தெரிவித்து வழிபட்டார்கள்.
இதேபோல கோவை மாவட்ட ஜமாத்தை சேர்ந்த இஸ்லாமிய பெரியவர்களும் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று கோயில் நிர்வாகிகளை சந்தித்து நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி கோவையில் அமைதியை நிலைநாட்டிட தங்களது நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தினர்.
தன்னையே காத்துக் கொண்ட கோட்டை ஈஸ்வரன்
‘’நம்மையெல்லாம் காத்தது கோட்டை ஈஸ்வரன் தான்’ என்று பக்தர்கள் சொல்லிவரும் நிலையில் போலீஸாரின் விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
’கோட்டை ஈஸ்வரன் கோவை மக்களை மட்டுமல்ல தன்னையே காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த தகவல்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படும் கோட்டை மேடு சங்கமேஸ்வரர் கோயில் 1500 ஆண்டுகள் பழமை மிக்கது. சோழர் கால கல்வெட்டுகள் இந்த கோயிலைப் பற்றி உரைக்கின்றன. விஜயநகர அரசர் காலத்தில் இந்த கோயில் விரிவாக்கப்பட்டது. 1792 மூன்றாம் மைசூர் போருக்குப் பின்னர் கோவைப் பகுதியில் இருந்த கோட்டையும் சங்கமேஸ்வரர் கோயிலும் சிதைக்கப்பட்டதாகவும் பிறகு சீரமைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
அந்த சிதைவுக்குப் பின் அதாவது சுமார் 230 ஆண்டுகளுக்குப் பின் கோட்டை ஈஸ்வரன் கோயில் பெரும் அபாயத்துக்கு உள்ளாக இருந்தது நல்வினையாக தவிர்க்கப்பட்டது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
குறி வைத்ததே கோவிலுக்குத்தான்
1790 களில் கோட்டை ஈஸ்வரன் கோயில் சேதப்படுத்தப்பட்டது என்பது எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் நடந்த நிகழ்வு. ஆனால் அதை மீண்டும் இப்போது செய்ய வேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் பகல் கனவாக இருந்திருக்கிறது.
கோவைக்கு வந்து இருந்த ஆபத்தை கோட்டை ஈஸ்வரன் தன் கோயில் எதிரிலேயே வெடிக்கவிட்டு கோவையையும் மக்களையும் காப்பாற்றிவிட்டார் என்று பாஜகவினர் உள்ளிட்டோரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால்… கோட்டை ஈஸ்வரன் தன்னையே பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் போலீஸ் புலனாய்வில் கிடைத்த தகவலாக இருந்திருக்கிறது.
இதுகுறித்து விசாரணை வட்டாரத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர வைப்பவையாக இருக்கின்றன.
“பயங்கரவாதிகளின் குறி கோட்டை ஈஸ்வரன் கோயில்தான். அந்த கோயிலைக் குறிவைத்த சதித் திட்டத்தை கடந்த மூன்று மாதங்களாகவே அவர்கள் தீட்டியிருக்கிறார்கள். கோட்டை மேடு ஈஸ்வரன் கோயிலை தாக்குவதற்குப் பின்னால் பெரும் கொடூரத் திட்டம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதாவது கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலேயே இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். அடர்த்தியாக வசிக்கிறார்கள்.
கோட்டை மேடு ஈஸ்வரன் கோயிலைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் இந்துத்துவ வன்முறையாளர்கள் கோயில் அருகே இருக்கும் பகுதியிலுள்ள இஸ்லாமியர்களையும் இஸ்லாமியர்களின் உடைமைகளையும் தாக்குவார்கள். அதன் மூலம் கலவரம் கோவை முழுதும் பரவும், கடந்த 1998 ஆம் ஆண்டு பரவிய கலவரம் கோவையில் மட்டும்தான் நடந்தது. இப்போது சமூக வலைதளங்கள் மூலம் தகவலை எளிதில் பரப்ப முடியும் என்பதால் கலவரத்தை தமிழ்நாடு முழுவதிலும் கேரளாவிலும் கூட பரவச் செய்ய முடியும் என்பதுதான் பயங்கரவாதிகளின் திட்டமாக இருந்திருக்கிறது.
கோவை வெடிப்பு: 3 மாத பிளான்
அதனால் திட்டமிட்டே கோவை உக்கடம் கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட எல்பிஜி சிலிண்டரை வெடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளான் ஜமேஷா முபின். அந்தத் திட்டத்தின் நோக்கமே இந்த தாக்குதல் மூலம் கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான். இதற்காகவே ஜமேஷா முபின் கடந்த 3 மாதமாக வேலை செய்திருக்கிறான்.
அந்த சிலிண்டருக்குள் எல்பிஜி நிலையிலேயே வெடிபொருட்களையும் கலந்து சிலிண்டரின் அருகே ஆணிகளையும் கோலிகுண்டுகளையும் வைத்துள்ளான் முபின். அந்த ஆணிகளும், கோலிகுண்டுகளும் மூடப்பட்டாமல் இருந்துள்ளன. மூடப்பட்டிருந்தால்தான் அழுத்தம் அதிகமாகி அவை வேகமாக சென்று குத்திக் கிழிக்கும். ஆனால் ஏனோ அவற்றை மூடப்படாமல் விட்டுள்ளான் முபின்.
தற்கொலைத் தாக்குதல் இல்லை
மேலும் இதை தற்கொலைத் தாக்குதல் என்று சிலர் சொல்கிறார்கள். அது சரியல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோட்டைமேடு ஈஸ்வரன் கோயிலைக் குறிவைத்து திட்டமிட்டேதான் அந்த இடத்தில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்துள்ளான் முபின். மேலும் அந்தத் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட காரில் இருந்து தப்பிக்கவே அவன் முயற்சித்துள்ளான்.
ஆனால் முபின் திட்டமிட்டபடி கோவில் வாசலில் கோவிலின் பக்கமாய் பாய்ந்து வெடிக்க வேண்டிய சிலிண்டர், கோவிலுக்கு எதிர்ப்பக்கமாய் வெடித்திருக்கிறது. இதனால்தான் கோவிலுக்கு ஏற்பட இருந்த சேதம் தவிர்க்கப்பட்டது. அதோடு உயிரோடு தப்பித்திருக்க வேண்டிய முபினும் இந்த வெடிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கிறான்.
முபினின் வீட்டில் மேலும் வெடிபொருட்களை கைப்பற்றியிருக்கிறார்கள் போலீஸார். பொதுவாக தற்கொலை தாக்குதல் என்றால் தங்கள் வசம் இருக்கும் வெடிபொருட்கள் அனைத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றுவிடுவார்கள் பயங்கரவாதிகள். ஆனால் முபினோ வீட்டில் வெடிபொருட்களை ஸ்டாக் வைத்துவிட்டுத்தான் போயிருக்கிறான்.
அதனால் தற்கொலைத் தாக்குதல் என்ற திட்டத்தோடு முபின் செல்லவில்லை. கோயில் மீது தாக்குதல் நடத்திவிட்டு தான் தப்பித்துவிடுவது என்றும், அதன் மூலமாக கோவை மட்டுமல்ல தமிழகம் முழுதும் பெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்துவதுதான் முபினின் திட்டம் என்றும் கூறுகிறார்கள் விசாரணை வட்டாரத்தில்.
-மின்னம்பலம் டீம்
உளவுத் துறை உயர்நிலைக் கூட்டம்: அமித் ஷா ஆலோசனை!
சிறு, குறு நிறுவனங்கள்: மின் கட்டணத்தை குறைத்த தமிழக அரசு!
அமைதியா இருக்கும் போது பதற்றத்தை ஏற்படுதுவது மீடியா தான், நீயும் சங்கி தானோ