கட்டுரை 8. நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை
போன வாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளில் மூன்றை மட்டும் இந்த வாரத்திற்கு எடுத்துக் கொள்வோம்:
திருவாளர் பொதுஜனம் பொய் செய்திகளை உண்மையிலேயே நம்புகிறாரா?
இப்படி நம்புவதால்தான் மேற்குலகில் வலதுசாரி எழுச்சி பெற்றுள்ளதா?
ஊடகப் பண்டிதர்கள் சொல்வது போல், வலதுசாரிகள் மட்டும் தான் பொய் செய்திகளை உருவாக்கி சுற்றுக்கு விடுகிறார்களா?
ஒரு வார்த்தையில் பதில்: இல்லை.
இந்த பதிலுக்கான விரிவான விளக்கம்: நிபுணர்களின் மேல் நம்பிக்கையை இழந்ததன் (loss of faith in experts) விளைவே மேற்சொன்ன கேள்விகளுக்கான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
நிபுணர்களின் மீதான நம்பகத்தன்மையை மக்கள் இழந்ததற்கு காரணம் நிபுணர்கள்தானே தவிர வேறு யாருமல்ல என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வு மேற்குலகில் மட்டுமே ஏற்பட்ட சித்தாந்த சரிவல்ல: பொருளாதாரத்தில் முன்னேறி வருவதாக நம்பப்படுகின்ற இந்தியா போன்ற நாடுகளிலும் இது வெற்றிகரமாக நடந்தேறி வருகிறது.
நிபுணர்களும் பிழைக்கும் வழி செல்வோராகி வெகுகாலமாகிவிட்டது. குறிப்பாக அமெரிக்கா போன்ற முதலீட்டியத்தை நம்பி இயங்கும் பொருளாதார நாடுகளில் நிபுணர் அறிக்கை என்பதே கார்ப்பரேட்டுகளின் நலனையே முன் வைக்கிறது.
1994-ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்றம் சிகரெட்டில் உள்ள நிக்கொட்டின் என்ற வஸ்து புகைப்பவரை அடிமையாக்கும் தன்மை கொண்டதா என்று விசாரணை நடத்தியது. அதில் பங்கு கொண்ட அனைத்து சிகரெட் தயாரிக்கும் முதலாளிகளும் கொஞ்சம் கூட தயங்காமல் நிக்கொட்டின் புகைப்பவரை அடிமையாக்கும் தன்மை கொண்டதல்ல என்று கூறினர். [காணொளி](https://www.youtube.com/watch?v=e_ZDQKq2F08). இப்படிக் கூறுவதற்கு சாட்சியாக அவர்கள் அனைவருக்கும் பொதுநல நிபுணர்கள் (public health experts) பக்கபலமாக இருந்தனர்.
மார்ல்பரோ சிகரெட் கம்பெனியின் தலைவர் ஒரு படி மேலே சென்று, சிகரெட் புகைத்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து எதுவும் இருப்பதாக எந்த ஆய்வுகளும் சொல்லவில்லை என தொலைக்காட்சியில் தெரிவித்தார்! காணொளி [இங்கே](https://www.youtube.com/watch?v=VpwcF3Malj8) : இதற்கும் நிபுணர்கள் துணை இருந்தது.
அதே போல மக்களைச் கொன்று குவிக்கும் பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இருப்பதாக அமெரிக்க மக்கள் மன்றத்தின் முன் அரசியல்வாதிகள், நிபுணர்கள், தொழில்நுட்ப விற்பன்னர்கள் எல்லாம் வரிசையாக நின்று பொய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம். பின்னர் ஆஃப்கானிஸ்தானில் பின் லேடன் இருக்கிறார் என்று சொல்லி அங்கும் சென்றனர்.
இதனால் அமெரிக்க அரசுக்கு பெரும் பொருள் மற்றும் உயிர் இழப்பு. ஆனால் போரில் ஒப்பந்தம் பெற்றவர்களுக்கோ கொழுத்த லாபம். இராக் போரில் ஒப்பந்ததாரர்களுக்கு (தளவாடம் விற்றல், சிறப்பு பாதுகாப்பு அளிப்பது, தொழில்நுட்ப உதவி) 138 பில்லியன் டாலர் மதிப்பளவுக்கு வியாபாரம் கிடைத்ததாக [ஃபைனான்சியல் டைம்ஸ்](https://www.ft.com/content/7f435f04-8c05-11e2-b001-00144feabdc0) எழுதியது. பொருளாதார, அரசியல், பாதுகாப்பு நிபுணர்கள் மேற்குலகில் ஒரு பணம் கொழிக்கும் தொழில்.
2007-8 வாக்கில் அமெரிக்காவில் நிகழ்ந்த ‘உலகப்’ பொருளாதாரப் பிரச்சினையை அடுத்து, மக்கள் மத்தியில் நிபுணர்களின் மீதான நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது.
2007-8 ல் மேற்குலகில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் பற்றி, ஊடகங்கள் வாயிலாக, நாமனைவரும் அறிந்திருக்கலாம். எனக்கு கொஞ்சம் தெரியும். ஆனால் நான் ஒரு பொருளாதார நிபுணன் அல்லன். அந்தச் சமயங்களில் கிட்டத்தட்ட ஒரு மூன்று மாத காலம் இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறேன். இந்த பிரச்சினை பற்றி எழுதிய பல பொருளாதார, அரசியல் கட்டுரைகளையும் வாங்கிப் படித்திருக்கிறேன்; சொற்பொழிவுகளுக்கு சென்றிருக்கிறேன்; பல்கலைக் கழக வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன். லண்டனில் அப்போது தொலைக்காட்சி, பத்திரிகை, இணைய ஊடகங்களில் இதுபற்றி செய்தி வந்த போதெல்லாம் அதைப் பற்றி கற்றறியவும் முயன்றுள்ளேன். இது தவிர கொஞ்சகாலம் நான் சி.ஏ இண்டர்மீடியட் படித்தேன்; அதனால் நிதிக்கணக்கு, இருப்புநிலைக் கணக்கெல்லாம் கூட கொஞ்சம் மங்கலாகப் புரியும்.
ஆனால் நீங்கள் என்னிடம், “இவ்வளவு படிச்ச புள்ளன்னா, அப்ப அந்த பொருளாதாரப் பிரச்சினைய கொஞ்சம் சடுதியா சொல்லு பாப்போம்…” என்று கேட்டீர்களேயானால் என்னால் கூற முடியாது.
[Image credit](https://cdn.americanprogress.org)
வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தை சூதாடின; கடன் வாங்கத் தகுதியற்றவர்களுக்கு தாறுமாறாக வீடு வாங்க கடன் கொடுத்தன வங்கிகள்; அவ்வாறு வழங்கப்பட்ட கடன்களின் மீதே ஒரு வர்த்தகம் நடைபெற்றது. அத்தகைய கடன்களை மீண்டும் பங்குகளாக்கி வங்கிகள் தங்களுக்குள்ளும் மற்றவர்களுக்கும் பங்குச் சந்தையில் நடைபெறுவதுபோல் விற்று வாங்கின. முதலில் வங்கிகள் தங்களிடமுள்ள மக்களின் முதலீடுகளை வீட்டுக்கடன்களாக அளித்துவிடும். பின்னர் இந்தக் கடன்களை பத்திரங்களாக மாற்றி அதனையும் சந்தைப்படுத்தும். இந்தப் பத்திரங்கள் இரண்டாம் நிலையில் உள்ளவை. இவற்றிற்கு Derivatives என்று பெயர். இந்த Derivatives-களை விற்று வாங்கும் சந்தைக்கு Derivatives market என்று பெயர். இது எனக்கு இன்றும் அதிர்ச்சி கலந்த புதிர். அடிப்படையிலேயே அறமற்ற செயலை விளக்க அறிவு மட்டும் போதாது என்று மட்டும் தெரிகிறது. இத்தகைய சூதாட்டத்தை ஒத்த பங்குச் சந்தை செயல்பாடுகளுக்கு நிதி முதலின் (Finance capital) தீராத லாபப் பசியே காரணமாகும்.
2007-8 ல் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதாரப் பிரச்சினை மேற்கத்திய – அதாவது ஐரோப்பிய, அமெரிக்க (கனடா இதில் விதிவிலக்கு) – பொருளாதாரப் பிரச்சினையானது குறித்து சாமானிய மக்களுக்கு இன்று வரை விளங்கவில்லை என்பதே உண்மை. ஆனால் இது சாமானிய மக்களை மிகவும் பாதித்த ஒரு பிரச்சினை.
இந்த நிதி முதலின் தீராப் பசியின் விளைவாக நடைபெற்ற சூதாட்டத்தின் முடிவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்த நீர்க்குமிழி உப்பிப்பெருத்து பின்னர் வெடித்து சிதறியபோது கண்ணியம் மிக்க உங்களையும், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களையும் போன்ற ஆயிரக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய (குறிப்பாக, அயர்லாந்து, ஐக்கிய ராஜ்ஜிய) மக்கள் ஒரே இரவில் வீடிழந்தனர்; பிச்சைக்காரர்களாயினர்.
கலிஃபோர்னியாவில் அவ்வாறு வீடிழந்தவர்களுக்கு, உள்ளூர் அரசு ஒரு முகாம் அமைக்க வேண்டியிருந்தது. குடும்பங்கள் சிதறின. போதைப் பொருள் உபயோகம் பல மடங்கு கூடியது.
இந்த நிலைக்கு மக்களது பேராசையும் ஒரு காரணமென்று நிபுணர்கள் வாதிட்டனர். மக்களுக்கு ஆதரவளித்து ஊக்கமளித்து அந்தக் கடனையே விற்று கைமாற்றி இலாபம் பார்த்த வங்கிகள் எப்படி குற்றமற்றவர்கள் ஆவார்கள்? கடன் வழங்கிய வங்கிகளே முதல் குற்றவாளிகள்.
அமெரிக்காவில் வீடு வாங்குவோர் மாதத் தவணை கொடுக்க தவறியபோது ஐஸ்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, க்ரீஸ், இத்தலி போன்ற நாடுகளில் உள்ள முதியோர் நல ஓய்வூதிய நல நிதிகளெல்லாம் எப்படி அடிபட்டுப் போயின என்பது அநேக சாமானியர்களுக்கு இன்றளவும் புரியவில்லை. இத்தகைய நிதிகள் பங்குச் சந்தையில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டன. வீட்டுக்கடன் குமிழி உடைந்தபோது பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்தது. முதலீடு செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி உட்பட பெரும்பணம் ஒரு இரவில் காணாமல் போய்விட்டது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையினால் ஏற்பட்ட சுனாமியினால் ஐரோப்பிய அரசாங்கங்கள் திவாலாவதையும் அங்குள்ள குடிமக்களால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை.
[Image credit](http://www.globalresearch.ca)
ஆனால் லண்டன் நகரத்தில் மட்டும் நில மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது. காரணம், பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள பணமுதலைகள் லண்டனில் உள்ள ஒரு சதுர மைல் நகரத்தில் (https://en.wikipedia.org/wiki/City_of_London) முதலீடு செய்தனர். லண்டனில் முதலீடு செய்தால் உங்கள் பணத்தின் மூலத்தை உள்ளூர் அரசு கேள்வி கேட்காது. எனவே மாஃபியாக்களின் பிடியில் லண்டன் ரியல் எஸ்டேட் வந்து வெகு காலமாகிவிட்டது. அரசின் ஓய்வூதிய நலநிதிகள், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள வங்கிகளின் பங்கு சந்தைகளோடு தொடர்புள்ளதால் இங்கிலாந்து நாட்டின் சமூக நலநிதிகளின் எதிர்காலம் நில மாஃபியாக்களின் பண வளர்ச்சியோடு பின்னிப்பிணைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.
ஊடக சுதந்திரத்திற்கு பேர் போன, தனிமனித உரிமைகளைக் கொண்டாடும் கலாச்சார பீடங்களாகிய மேற்கத்திய ஜனநாயக நாடுகள், உண்மையில் சில செல்வந்தர்களின் பிடியில் பொருளாதார பாசிச நாடுகளாக தழைத்து வளர்ந்து வந்துள்ளதை சாமானியர்களால் உணர முடிகிறது, ஆனால் புரியவில்லை; கேள்வி கேட்கவும் இடமில்லை.
இது குறித்து ஊடகங்களில் விளக்கம் சொல்லும் பண்டிதத்தனமும் சாமானியர்களுக்குப் புரியவில்லை. Investment bankers அல்லது hedgefunders என்றழைக்கப்படுகின்ற பணவியாபாரிகளின் தொழில் என்ன, அவர்கள் கொள்கை என்ன, அவர்களால் ஒரு தேசத்தின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் லாப நட்டங்கள் என்ன, அதனால் ஒரு சாமானியனுக்கு என்ன பயன் என்பது இன்றுவரை பெரும்பான்மையானோருக்கு விளங்கவில்லை.
Sub-prime mortgages, collateral debt obligations, frozen credit markets, credit default swaps – போன்ற வங்கி சார்ந்த, நிதி சார்ந்த சொல்லாக்கங்கள் பெரும்பான்மையான நபர்களுக்கு புரியவில்லை.
மெர்ரில் லின்ச், ஏஐஜி, ஃப்ரெட்டி மே, ஃபேன்னி மே, எச் பி ஓ எஸ், ராயல் பேங்க் ஆஃப் ஸ்கொட்லாண்ட் உள்ளிட்ட பல வங்கிகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்கு வந்து, அரசினால் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் உதவியுடன் மீண்டும் சுவாசம் பெற்றன.
[Image credit](http://www.vanityfair.com)
இது குறித்து ‘உலகை உலுக்கிய அந்த மூன்று வாரங்கள்’ பற்றி வெளியிட்ட கார்டியன் பத்திரிகை எழுதிய கட்டுரையின் தரவு [இங்கே](https://www.theguardian.com/business/2008/dec/28/markets-credit-crunch-banking-2008) படித்து பயன் பெறவும். புரிந்தால், உடனே மொழிபெயர்த்து மின்னம்பலத்தில் அச்சிட்டு தமிழ் உலகத்திற்கு பயன் சேர்க்கவும்.
பணப்பிரச்சினையைப் போக்க அதிகம் பணத்தாள்கள் அச்சடித்து வெளியிடப்பட்டன. Quantitative easing, என்றழைக்கப்பட்ட இந்த பொருளாதார கொள்கையின் அருமை பெருமைகளைப் பற்றி மேற்கத்திய ஊடகங்கள் கூவாத நாளில்லை. ஆனால் சாமானியனுக்கு ஒரு உபரித் தாளும் கிடைக்கவில்லை. ஆனால் அரசோ வங்கிகளுக்கும் வங்கி முதலாளிகளுக்கும் (சம்பளம் என்ற பெயரில்) கோடிக்கணக்கான டாலர்கள் வழங்கியதை திருவாளர் சாமானியர் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அதற்கு நிபுணர்கள் அருளிய காரணமோ குழப்பமாக இருந்தது.
ஊடகங்களில் தோன்றிய இடது, வலது, நடுவு, மேல், கீழ் என எல்லா திசைகளில் இருந்தும் வந்த பண்டிதர்கள் யாவரும் ஏதோ ஒரு வகையில் வங்கிகள் திவாலாகாமல் தடுப்பதே இந்த பொருளாதார பிரச்சினைக்கான உடனடித் தீர்வு என ஒப்புக்கொண்டனர். இந்த உடனடித் தீர்வுக்கு லட்சக்கணக்கான கோடி டாலர்கள் செலவிடப்பட்டன.
இதை ஒப்புக்கொள்ளாத சிலரும் இருந்தனர். அவர்கள் யாவரும் ஊடக நடுவுநிலையை நிரூபிப்பதற்கான எதிர்த்தரப்பு வக்காலத்தாக வந்திறக்கப்பட்ட பலிகடாக்களே தவிர, அவர்களுக்கு என்று ஒரு சிறப்பு மரியாதையும் கிடையாது. அவர்களின் பார்வை எந்த வகையிலும் முக்கியத்துவம் பெறவில்லை என்பதே உண்மை.
திருவாளர் பொதுஜனத்தின் கண்முன்னே, அவருடைய எந்தவிதமான ஒப்புதலுமின்றி – அவருக்கு நன்மை பயக்கும் என்ற பொய் வாக்குறுதியுடன் பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள் (இந்த ஏமாற்று வேலையில் ஒபாமாவுக்கு முக்கிய இடமுண்டு), ஊடக நிபுணர்கள் என அனைவரும் வரிசையாக நின்று நிதி முதலின் (Finance capital) பொருளாதாரத்தின் மறுவாழ்வுக்கு பணிவிடை செய்தனர்.
ஐரோப்பிய யூனியன், உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஒஇசிடி (OECD), நாள் தவறாது பிறக்கின்ற புதிய ஆய்வு மையங்கள் – என பல நிறுவனங்களிலிருந்து முளைக்கின்ற நிபுணர்கள் மேற்கத்திய ஊடகங்களில் தோன்றியவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களின் பேச்சுக்கள் சாமானியரைத் தொடுவதாய் இல்லை. முக்கியமாக புரிவதில்லை.
அமெரிக்க ஐரோப்பிய நிபுணர்களோ, பொது ஊடகங்களோ, இந்த நிதிப்பொருளாதராத்தைத் தவிர எந்தவொரு மாற்றுக் கருத்தையும் முன் நிறுத்த முயற்சி செய்யவில்லை.
[Image credit](http://oxfamblogs.org)
ஊடக ஜனநாயகத்திற்கு பெயர் போன மேற்கத்திய ஊடகங்கள், இது குறித்து பெரிய கேள்விகள் எழுப்பவில்லை. இன்று ட்ரம்புக்கு எதிராக ஊமை விடுதலைக்குரல் எழுப்பும் ஹொலிவுட் நட்சத்திரங்கள் ஒருவரும் அப்போது கண்ணீர் விடவில்லை. திரை விருது வழங்கும் விழாவில் பொருளாதார சமமின்மை பற்றி யாரும் குமுறவில்லை.
ஜூன் 24 ம் தேதி ஐக்கிய ராஜ்ஜியம் ஐரோப்பாவை விட்டு விலகிட வாக்களித்ததற்கும் இந்தப் பண்டித நிராகரிப்பு ஒரு காரணம் என்று இப்போது பலராலும் தயக்கத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறு என்று போராடிய ஐக்கிய ராஜ்ஜிய (U.K) குழுவினரின் பிரபல பேச்சாளர் மைக்கேல் கோவ், நிபுணர்களின் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
ப்ரெக்ஸிட் நடந்தால் ஐக்கிய ராஜ்ஜியத்தின் பொருளாதாரம் தலைகீழாகப் போய்விடும்; பங்குச் சந்தை இருண்டு விடும்; சாமானியர்களின் வாழ்க்கைத் தரமும், நுகர்வுச் சந்தையும் சுருங்கி விடும் என்ற நிபுணர்களின் அனைத்து சோதிடமும் பொய்யாகி விட்டிருக்கிறது. இதுதான் தற்போதைய நிலை.
நிற்க.
கொஞ்சம் உற்றுக் கவனித்தால் – கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் பொருளாதாரக் கொள்கை பற்றி சிறிதும் பேசவில்லை என்பது தெரியவரும். ஹிலரி கிளிண்டன் கொள்கை பற்றி பக்கம் பக்கமாக பேசினார். ஊடகங்களும் நிபுணர்களும் ஹிலரியை தலையில் வைத்துக் கொண்டாடினர். ஆனால் திருவாளர் பொதுஜனத்திற்கு புரிந்தபாடில்லை. ஆனால் ட்ரம்ப், “கொள்கைகளெல்லாம் போர் (Bore), நிபுணர்களெல்லாம் பொய்காரர்கள்…!!” என்று உரத்துச் சொன்னபோது அது சாமானியரைத் தொட்டது. தூங்கிக் கொண்டிருந்த அவர்களை எழுப்பி உட்கார வைத்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்தக் கொள்கை குறித்தும் விளக்கமளிக்க ட்ரம்ப் மறுத்ததும், நிபுணர்களை உதாசீனப்படுத்தியதும் – சாமானிய வாக்காளர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது.
புவி வெப்பம், பாதுகாப்பு அரசியல், அனைவருக்கும் மருத்துவ வசதி (ஒபாமாகேர்)- போன்ற அனைத்துக் கொள்கைகளிலும் அவர் எடுத்த முடிவு ஒன்றே: ஒபாமா ஆட்சிக்காலத்தில் முடிவெடுத்த நிபுணர்களின் அறிவு நம்பகத்தன்மையற்றது. அவர்களாலேயே நாம் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.
அதே போல, புவி வெப்பம் என்பதே நிபுணர்களால் செயற்கையாக உண்டாக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை, அதனால் தான் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு தொழிலாளர்கள் நடுவீதிக்கு வந்தார்கள் – என்று ட்ரம்ப் சொன்ன போது, திருவாளர் பொதுஜனம் திருப்தியடைந்தார்.
பொருளாதாரப் பிரச்சினையினால் ஏற்கனவே நலிவுற்றிருக்கும் சாமானியனுக்கு இதைப் புரிந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சாமானியர்களின் காதில் இது தேன் பாய்ந்தது போல் இருந்தது; அவர்களால் இந்த வாதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக, ட்ரம்ப் என்னும் ரியலிட்டி டிவி நட்சத்திரம் ‘டீல் போடுவதில் சமர்த்தர்.’ எனவே, ‘அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தால் நாடு சுபிட்சமடையும்’ என்று பெரும்பான்மையான வெள்ளை வாக்காளர்கள் நிற அடிப்படையில் ட்ரம்புக்கு வாக்களிக்க முடிவெடுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அடுத்த வாரம் சாமனியர்கள் நிபுணர்களாகி வருவதில் இணையத்திற்கும், சமூக வலைத் தளங்களுக்கும் உள்ள பங்கினைப் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?