கட்டுரை 7. பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
மேற்குலகின் பெருகி வரும் வலது சாரி அரசியலுக்கும் அங்குள்ள ஊடகங்களின் தன்மைகளுக்கும் உள்ள தொடர்பினை அலசும் முன், பொய் செய்தி (fake news), தகவல் பேதி (information diahorrea) ஆகியவற்றின் பொருள்களை (meanings) அறிந்து கொள்ளலாம். வழக்கம் போல, உள்ளூரிலிருந்தே தொடங்குவோம், அதுவே எளிதானது.
கடந்த செவ்வாய்க்கிழமை, நான் லண்டனில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் இருந்த ஒரு கடையில் காப்பி வாங்கிக் கொண்டிருந்த போது வருசநாட்டிலிருந்து ஒரு வாட்ஸ்-அப் செய்தி எனது மொபைலில் ஒளிர்ந்தது: “முட்டையையும், இனிப்பான வாழைப்பழத்தையும் ஒரு இளைஞர் அடுத்தடுத்து உண்டதில், அவை விஷமாக மாறி இறந்ததாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.” அத்தோடு அந்த செய்தி நிற்கவில்லை. “இச்செய்தியை உடனடியாக உங்களுடன் தொடர்பில் உள்ளோருக்கு பகிருங்கள்; அடுத்தவர் இறப்பதை விரும்பும் தீய எண்ணம் கொண்டவர்களே இந்தச் செய்தியை பகிராமல் இருப்பார்கள்” என்ற ஒரு பயங்கரமான எச்சரிக்கையோடு அந்த செய்தி முடிந்திருந்தது.
பொய் செய்தி (fake news) என்பதற்கு இதை விட ஒரு சிறந்த உதாரணம் கிடையாது. அது என்னை வந்தடைந்த சில நிமிடங்களில், அதே செய்தி வேறு மூவரிடமும் இருந்தும் எனக்கு வந்தது: அனைவரும் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள். இது தான் தகவல் பேதி என்பதாகும்.
பச்சையான பொய் செய்திகள் இப்படி சுற்றுக்கு விடப்படுவது (பயமுறுத்துதலோடு!) என்பது ஊடக மானுடவியல் ஆய்வாளனாகிய எனக்கு இது ஒரு சுவாரசியமான ஆய்வுப் பொருள். அதே சமயத்தில், இப்படிப்பட்ட செய்திகளை அடுத்தவர்களுக்கு அனுப்புவது என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் இருப்பது எதனால் என்ற கவலையும் ஏற்படுகிறது.
இப்படி எனக்கு அனுப்பப்படுகிற சில செய்திகளுக்கு ஆதாரம் என்னவென்று என் நண்பர்களிடம் கேட்ட போது எனக்குக் கிடைத்த பதில் : “ஃபார்வர்ட் மெசேஜுக்கெல்லாம் சோர்ஸ் கிடையாது. படிச்சியா, புடிச்சிருந்ததா? ‘நல்லா’ இருந்தா ஷேர் பண்ணு, இல்லேன்னா டெலிட் பண்ணு!” செய்திகளை நுகர்வது என்பது இது தான். இங்கு ‘நல்லா’ என்பது சுவாரசியத்தைக் குறிப்பதாகும்.
நம்மால் இணையத்தின் அதாவது தொழில்நுட்பம் செறிந்த ஊடகங்களின் மூலமாக தகவல்களை உடனுக்குடன் படு வேகத்தில் பகிரமுடிகிறது. இதனால் சமூக அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊடகங்களில் தகவல் புரட்டுகளும் அதிகரித்துள்ளன என்பதும் உண்மையே.
இணையத்தின் வரவால் தகவல் பிட்டுகள் (information bytes) எல்லாம் செய்திகளாகிற (news) தன்மை அதிகமாகியிருக்கிறது. தகவல், செய்தி – என்ற இரண்டு சொற்களும் நடப்பில் ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்பட்டாலும் இந்தச் சொற்களின் பொருள்களை, ஊடக ஆய்வாளர்கள், சற்றே கவனத்தோடு வேறுபடுத்திப் பார்க்கின்றனர்.
உதாரணமாக நீங்கள் ஒரு செய்தித்தாளை படிக்கும் போது இன்று புதிதாக ஏதாவது ‘கற்றுக் கொள்ள வேண்டும்’ அல்லது ‘தெரிந்து கொள்ள வேண்டும்’ என்ற முனைப்பில் படிப்பது கிடையாது. அதற்கு நூலகங்கள் உள்ளன. ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.
நாட்டின் நடப்பைப் பற்றிய விஷயங்களை முடிந்த வரை அப்படியே வாசகனுக்குத் தருவதே செய்தித்தாள்களின் முதல் முக்கியப் பொறுப்பு. அந்தச் செய்திகள் தொடர்பான சமூக, அரசியல், பொருளியல் காரணிகளை அலசிப்பொருள் கூறுவது இன்னொரு முக்கியமான பொறுப்பு.
எவையெல்லாம் தகவல்கள்?
இன்று வைகை அணையில் நீர் மட்டம் எவ்வளவு; எங்கெல்லாம் இன்று மின்தடை ஏற்படும்; மூன்று மார்புக் காம்புகளோடு பிறந்த அதிசய மனிதர் – இவைகளெல்லாம் அவசியமான / சுவாரசியமான தகவல்கள். அவ்வளவே. இவை செய்திகளல்ல. தகவல்கள் ஊடக ஆசிரியர்களின் மெய்ப்புக்கு வருவது கிடையாது.
ஆனால் செய்தியாளர்களாலும், ஊடகங்களின் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களாலும் செய்திகள் கவனமாக கட்டமைக்கப்படுகின்றன (news production relies on careful and credible editorial process). இவர்கள் இச்செய்திகளுக்கு பொறுப்பாளிகள்.
ஒரு ஊடகத்தின் செய்தி தயாரிக்கும் முறையின் மீது உங்களின் நம்பிக்கை என்னவாக இருந்தாலும் சரி: அச்செய்திகளை பதிப்பிப்பதற்கென்று ஒரு மெய்ப்பு முறை (editorial process) உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆனால் ட்வீட்டுகளும், ஃபேஸ்புக்கில் வரும் நிலைத்“தகவல்களும்” அப்படியல்ல. அவற்றின் தன்மை தகவல்களை ஒத்தது. இந்த நுட்பமான வேறுபாடு முக்கியம்.
ஏனெனில் ‘பொய் செய்திகள்’ பெரும்பாலும் தகவல் வகையாறக்களைச் சேர்ந்தவை. பொய் செய்திகளின் தோற்றம் தகவலாகவே இருக்கிறது என்பது முக்கியம்.
இணையத்தின் தொழில் நுட்பத் தன்மையானது பொய் செய்திகளை தயாரிப்பதற்கும், சுற்றுக்கு விடுவதற்கும் ஏதுவாக இருக்கிறது. உதாரணமாக உங்களின் நண்பர் ஒரு வாரத்துக்கு முன்னர் செய்த ட்வீட்டினை தேடிப் பார்த்துப் படிப்பது அரிது. ட்வீட் செயலியை திறந்தவுடன் அது சமீபத்திய ட்வீட்டுகளை மட்டுமே நமக்குக் கொடுக்கிறது. அந்த வேகம் தான் ட்விட்டரின் தொழில்நுட்பத்தன்மை. அந்த ஊடகத் தன்மையே அதன் வழியாக வரும் தகவல் பேதியை நிர்ணயிக்கிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்நாப்சாட், டெலிகிராம், வாட்ஸாப், பின்ட்ரஸ்ட், இன்ஸ்டாக்ராம், லின்க்ட்-இன் – ஆகிய தளங்களின் தன்மை சமீபத்திய தகவல்களைப் பகிர்வதிலேயே உள்ளது. இணைய தளங்களில் எப்போதுமே ப்ரேக்கிங் நியுஸ் தான்: தினந்தோறும் தீபாவளி. வெடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தகவல் தன்மையே செய்திகளாகி வருவது, ஊடக வெளியின் ஒரு முக்கியமான பரிணாம வளர்ச்சி.
இந்தியா போன்ற நாடுகளில் வாட்ஸப்பில் இந்தத் தன்மைகள் அதிகம் உள்ளதைப் பார்க்க முடியும். ஆனால் வாட்ஸப்பில் செய்திகளை ஃபார்வர்ட் செய்வதே அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள் குறைவு (டேட்டா கட்டணம், 24 மணிநேர மொபைல் இணைய வசதி எல்லாம் இதற்கு சவால்). ஆனால் மேற்குலகில் ட்விட்டர் தான் தகவல் பேதியின் மூலம்.
யோசிக்காமல் பகிரும் ட்வீட்டுகளினாலும், தகவல்களினாலும் சிலர் தற்கொலைக்குக் கூட தள்ளப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் தகவல் பரிமாற்றம் அல்லது ஃபார்வர்ட் என்ற செயலுக்கு யாரும் எந்த பொறுப்பும் ஏற்பது கிடையாது. பல நாடுகளில் இதனை ஒழுங்குபடுத்த பொருத்தமான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை. இப்படிப்பட்ட பொறுப்பற்ற தகவல்கள் வெறுப்புப் பேச்சுக்களின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், தகவல் பேதி சுதந்திரமாக இணையத்தில் எல்லோரையும் பீடித்து வருகிறது.
இப்படிப்பட்ட தகவல்களுக்கு பிரபலங்களும், அரசியல்வாதிகளும், நிபுணர்களும் விதிவிலக்கல்ல.
“எனக்குக் கிடைத்த தகவலின் படி..” என்று நீங்கள் எதை வேண்டுமானாலும் இணையத்தில் பதிவிடலாம். 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சிகள் இந்த பேதி நோய்க்கு பாதிக்கப்பட்டு வெகு நாட்களாகி விட்டது. ஆனால் ஆசிரியர்களின் பொறுப்பில் இயங்கும் செய்திப் பத்திரிகை 24 மணிநேரத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளிவருவதால், அவ்வளவு எளிதாக பொய் செய்திகளை பரப்பி விட முடியாது என்ற நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் அந்த நம்பிக்கை இப்போது நொறுங்க ஆரம்பித்திருக்கிறது.
உதாரணமாக “அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கிறித்துவரல்ல. கென்யாவில் பிறந்த ஒரு முஸ்லீம். அவர் படித்ததாக சொல்லும் அமெரிக்கக் கல்லூரியில் யாருக்குமே அவரைத் தெரியாது. ஒபாமா ஒரு பொய்யர். ஒரு முஸ்லீம்.” என்ற செய்தியை ஒரு பத்திரிகை ஊடகம் சட்டென்று வெளியிடாது. முதலில் அதற்கான ஆதாரங்களைத் தேடும், இல்லையெனில் அந்த ஊடகம் நீதிமன்றத்தில் மிகப்பெரிய நஷ்டஈட்டு வழக்கினை சந்திக்க நேரிடும். நம்பகத்தன்மை குழி தோண்டி புதைக்கப்படும்.
ஆனால் நடந்ததென்னவோ நேரெதிர்.
2011ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதியன்று ரியலிட்டி டிவி நட்சத்திரம் டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளராக தான் போட்டியிட விரும்புவதாக அந்தக் கட்சி கூட்டத்தில் தெரிவித்தார். அக்கூட்டத்தில் தான் ஒபாமா கென்யாவில் பிறந்த முஸ்லீம் என்று ஒரு குண்டைப் போட்டார். அதற்கு மறுப்பாக வெள்ளை மாளிகை ஏப்ரல் 27ம் தேதியன்று அதிபரின் பிறப்பு சான்றிதழை [இணையத்தில்]( https://obamawhitehouse.archives.gov/blog/2011/04/27/president-obamas-long-form-birth-certificate) வெளியிட்டது. ட்ரம்ப் இந்த உண்மையைப் பற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவரின் இந்த பொய் செய்தி நிற்காமல் தொடர்ந்ததற்கு இணையமும் ஒரு காரணம்: தகவல் பேதி.
ட்ரம்ப்பின் “ஒபாமா ஒரு முஸ்லிம்” என்ற ட்வீட் அமெரிக்க, ஐரோப்பிய பொது ஊடகங்களில் சூடான மசாலாச் செய்தியானது. பத்திரிகைகளும், இணைய செய்தித் தளங்களும், தொலைக்காட்சிகளும், விவாதிக்க ஆரம்பித்தன. பெரும்பான்மையான ஊடகங்கள் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை; ட்ரம்பிடம் ஆதாரங்களைக் கேட்டன.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து, “தனக்கு மிக முக்கியமான நம்பகத்தன்மையுள்ள வட்டாரம் ஒன்று ஒபாமாவின் பிறப்புச் சான்றிதழ் பொய் என்று சொன்னது” என்று வேறு ஒரு ட்வீட் செய்தார் ட்ரம்ப்.
ஆனால், தகவல் பிட்டுகளின் இரைச்சலுக்கிடையில் இந்த பொய்த் தகவல் ஒரு முக்கியமான அரசியல் செய்தியாகி விட்டது. இதை செய்தியாக மாற்றியதில் ஊடகங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.
அந்த வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையில் உள்ள சராசரி அமெரிக்கர்களை ஒபாமாவுக்கு எதிராக திருப்பிவிடும் முயற்சியிலும், ஊடகங்களின் கவனத்தைத் திருப்பியதிலும் ட்ரம்புக்கு வெற்றியே.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து செப்டம்பர் 2016ல் ஒபாமா அமெரிக்காவில் தான் பிறந்தார், என ட்ரம்ப் ஒப்புக் கொண்டார். ஆனால், அவர் பிறப்பு பற்றி முதலில் சந்தேகப்பட்டது ஹிலரி கிளிண்டன் என்று மற்றொரு குண்டை போடத் தவறவில்லை!
திருவாளர் பொதுஜனம் இப்படிப்பட்ட பொய் செய்திகளை உண்மையிலேயே நம்புகிறாரா? இதனால் தான் மேற்குலகில் வலதுசாரி எழுச்சி பெற்றுள்ளதா?
பல பண்டிதர்கள் சொல்வது போல, வலதுசாரிகள் மட்டும் தான் பொய் செய்திகளை உருவாக்கி சுற்றுக்கு விடுகிறார்களா? அல்லது பொய் செய்தி என்பது மற்றுமொரு அன்றாட நுகர்வுப் பண்டமாகிவிட்டதை இது காட்டுகிறதா? அப்படியானல் இதற்கு காரணம் நாம் அனைவருமா, அல்லது ட்ரம்ப் போன்றவர்களா?
தகவல் பிட்டுகளுக்கான அகோரப்பசியில் எப்போதுமே இணையம் இருப்பதால், தகவல் பேதி என்பது தவிர்க்க முடியாத அம்சமாகி வருகிறதா? அப்படியென்றால் இணையத்தின் தொழில்நுட்ப நுகர்வுத்தன்மை ஜனநாயகத்தின் நான்காவது தூணுக்கு ஆதரவாக இருக்கிறதா, இல்லையா?
வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா