கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
முதலில், இதுவரை:
இந்தத் தொடர் உலகெங்கும் வளர்ந்து வருகிற வலதுசாரி அரசியலின் எழுச்சியை (குறிப்பாக) அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னணியிலும்; (மற்றும்) ஐரோப்பிய, ஐக்கிய ராச்சியத்தின் ப்ரெக்ஸிட்டின் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற செய்த முடிவு) பின்னணியிலும் புரிந்துகொள்கிற ஒரு எளிய முயற்சி.
இந்தத் தொடரின் ஆரம்பக் கட்டுரை ட்ரம்ப்பின் வெற்றிகுறித்து எழுப்பப்பட வேண்டிய கேள்விகளில் இருந்து தொடங்கியது. அதாவது, ட்ரம்ப்பின் வெற்றி வலதுசாரிகளின் ஆதிக்கத்துக்கான ஒரு அறிகுறியே. அவருக்கு வாக்களித்த அமெரிக்க சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகள்தான் என்ன? ஐக்கிய ராச்சியத்திலும் ப்ரெக்ஸிட்டை ஆதரித்தவர்களுக்கு ஐரோப்பியர்கள் மேல் இருக்கும் எதிர் மனநிலை உருவானதின் காரணங்கள்தான் என்ன?
பெருவாரியான ஊடகங்களிலும், இடதுசாரி ஆதரவாளர்களும் கூறிவருவதுபோல் ட்ரம்புக்கு உழைக்கும் வெள்ளையர் வர்க்கம் மட்டுமே வாக்களிக்கவில்லை. ட்ரம்புக்கு வாக்களித்த வெள்ளை இனத்தினரின் பெரும்பான்மையினர் நமக்குச் சொல்வதென்ன? – என்றும் இந்தத் தொடர் விவாதித்தது.
உலகமயமாக்கலின் விளைவாக பெருகிய பொருளாதார சமமின்மை, வேலை வாய்ப்பின்மை ஆகியவை சமூகத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இனவெறியை மீண்டும் கிளறி வெளியே கொண்டுவந்தன என்பதையும் இந்தத் தொடர் சுட்டிக்காட்டியது. ஐரோப்பாவிலே இது முஸ்லீம் அகதிகளுக்கெதிராகவும், ஐக்கிய ராச்சியத்தில் முஸ்லீம்கள், ஐரோப்பியர்கள் ஆகிய இரு குழுவினருக்கு எதிராகவும் இது வெளிப்பட்டிருக்கிறது.
பின்னர் ஹிலரி கிளிண்டனின் சமூகநலக் கொள்கைகளும் அவரது அரசியல் சரித்தன்மையால் (Political Correctness) அவர் உருவாக்கிக் கொண்ட கதம்பக் கூட்டணி – சாமானியர்களுக்கு உவப்பானதாக இல்லாதுபோனது பற்றி இத்தொடர் விளக்கியது. இது, அமெரிக்கக் கறுப்பர்களையும் கீழ்த்தட்டு மக்களையும் ஹிலரியிடமிருந்து அந்நியப்படுத்தியதையும் இது, ட்ரம்புக்கு சாதகமாக அமைந்ததையும் இந்தத் தொடர் கவனப்படுத்தியது.
ட்ரம்ப்பின் வெற்றி கண்ணுக்கெதிரே தெரிந்தபோதிலும் அதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை, நிராகரித்தன. காரணம், ஊடகங்களின் பெருநகரத்தன்மையும், அவற்றில் வெளிவந்த கருத்துக் கணிப்பும் சாமானியர்களின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. மாறாக, இந்த சாமானியர்கள் ஊடக வெளியிலிருந்து ஒதுக்கப்பட்டனர். இது, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல; ப்ரெக்ஸிட் கருத்துக் கணிப்புக்கும் பொருந்தும்.
மேற்குலகில் உள்ள பெருநகர ஊடகங்கள், நகரங்களில் உள்ள நடுத்தர மக்களின் அரசியல் சரித்தன்மையுள்ள தாராளவாதத்தை முன்வைக்கிறதே தவிர சிறுநகரங்கள், கிராமங்களில் உள்ள ஏழ்மையான, நலிவுற்ற மக்களின் நிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்பதையும் இத்தொடர் பதிவு செய்தது. இடதுசாரிகள் நிரப்பவேண்டிய இந்த இடத்தை ட்ரம்ப், நைஜல் ஃபராஜ் (ப்ரெக்ஸிட் வலதுசாரி), லெ பென் (ஃப்ரான்ஸ் வலதுசாரி) போன்றவர்கள் தங்களுக்கானதாக்கிக் கொண்டார்கள்.
இந்தச் சூழ்நிலையை அலச, மெய்யறு அரசியல் என்ற கருத்தாக்கம் தற்போது புழக்கத்தில் உள்ளது.
மெய்யறு (post-truth) என்பது மெய்மை என்ற கருத்துருவை உதாசீனப்படுத்துவதாகும் (disregard for truth) – நிராகரிப்பதாகும். ஒரு பிரச்னையின் மீதான மக்களின் கவனத்தை மெய்யறு திசை திருப்பும். அதை மக்களும், பாதிக்கப்பட்டவர்களும் – அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக்கொள்வர். ஊடகங்கள், இணையம், பிரபலங்கள், நிபுணர்கள் என அனைவருக்கும் மக்களின் ஒப்புதலைப் பெறுவதில் பங்கிருக்கிறது.
இப்போது இந்த வாரத்துக்கு வருவோம்.
இந்தத் தொடரில் எடுத்தாளப்படும் பெரும்பான்மையான எடுத்துக்காட்டுகள் அமெரிக்க, ஐரோப்பியக் கண்டங்களில் நடக்கிற அரசியல், சமூக நிகழ்வுகளாகும். ஏனெனில், உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் மேற்கில் தோற்றுக்கொண்டு வருவது வலதுசாரிகளின் எழுச்சிக்கு முக்கியக் காரணம் என்பதை தரவுகளுடன் இத்தொடர் முன்வைக்கிறது.
ஆனால், வலதுசாரிகளின் ஆதிக்கம் உலகெங்கும் ஓங்கியவண்ணம் இருக்கிறது என்பதும் நிதர்சனமான உண்மையாகும். இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், துருக்கி, மியான்மார், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள், ரஷியா, உக்ரைன் என உலகெங்கும் உள்ள நாடுகளில் வலதுசாரிகளின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. அதனால் வன்முறை அதிகமாகி வருகிறது. குடிமக்களின் உண்மையான இன்னல்களை நிராகரிப்பதும், செல்வந்தர்களின் வாழ்வுக்கே அரசுகள் துணைபோவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலைப் புரிந்துகொள்ள மெய்யறு அரசியலின் கருத்தாக்கம் பயனுள்ளதாக இருக்கிறது.
மெய்யறு அரசியல் என்ற கருத்தாக்கம் மேற்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் தன்மைகளை இந்தியா உள்பட பல நாடுகளின் அரசியலில் பார்க்க முடியும். குறிப்பாக, மெய்யறு அரசியலில் எல்லோரையும் மிஞ்சியவர் இந்தியப் பிரதமர் மோடி.
மோடி வித்தையை விவாதிக்கும் முன்னர் இந்தியாவின் வளர்ச்சி பிம்பத்தைப் (development image) பார்ப்போம். இந்த பிம்பத்தை உருவாக்கியதில் அனைத்து தேசியக் கட்சிகளுக்கும் பங்குள்ளது.
1990களில் ஏற்பட்ட தாராளமய கொள்கைகளுக்குப் பிறகு பொருளாதாரம், தொழில் வளர்ச்சியில் – குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நாடாக இந்தியா அறியப்பட்டு வருகிறது. இந்த பிம்பத்தில் ஏழை, பணக்கார, மேல் – கீழ் சாதி இந்தியர்கள் அனைவருக்கும் ஒருவிதமான தேசப்பெருமை இருக்கிறது. இப்பெருமை ஊடகங்களில், பண்டிதர்களின் துணையோடு தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காங்கிரஸின் தலைமையின்கீழ் தாராளமயமாக்கல் கொள்கை தொடங்கப்பட்டாலும் வாஜ்பேயின் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு ‘ஒளிரும் இந்தியா’ என்ற பரப்புரையை நாடாளுமன்றத் தேர்தலின்போது முன்வைத்தது. பாஜக அந்தத் தேர்தலில் தோற்றாலும் இந்தப் பரப்புரை ஊடகங்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதுமட்டுமல்ல, ஒளிரும் இந்தியா என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள், தொழில்முனைவோர், ஊடகங்கள், நிபுணர்கள் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.
இந்தியா ஒளிர்கிறது என்பதை நம்பவைக்க பல ஆதாரங்கள் நம்முன் தொடர்ந்து வைக்கப்படுகின்றன. GDP என்றறியப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எண் மதிப்பு, நடுத்தர மக்களின் அதிகமான நுகர்வு, வெளிநாட்டுப் பொருட்கள் உள்ளூர் சந்தையில் கிடைப்பது, ஐ.டி. இளைஞர்கள் / தொழில்கள்; அவர்களின் வாழ்வியல் முறைகள், மிளிரும் கட்டடங்கள் இன்னும் பல. இவை அனைத்திலும் உள்ள ஒரு பொதுக்காரணி: நுகர்வு.
நுகர்வை கலாச்சாரமாக, வாழ்வின் ஒரு இன்றியமையாத பொருளாக மாற்றுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு. ஒளிரும் இந்தியாவின் நுகர்வுப் பயன்களையே வாழ்வின் நோக்கங்களாக ஊடகங்கள் நம்மை கவனச்சிதைவு செய்கின்றன. நம்முன் வைக்கப்படும் அறிக்கைகளும் புள்ளிவிவரங்களும் எண்களும் சரியானதாக இருந்தால்கூட அவற்றால் சாமானியர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மையாகும். எனினும் நிபுணர்களின் அறிக்கையிலும், அரசியல்வாதிகளின் முழக்கங்களிலும் இந்த ‘மெய்யறு’ தகவல் நமக்கு தினசரி வந்துசேர்ந்தவண்ணமுள்ளது. நம்மில் பெரும்பாலானோர் இதை நம்புகிறோம் என்பதும், நாம் இத் தகவலை பரப்புகிறோம் என்பதும் மிக முக்கியமானது.
இந்த இந்தியப் பிம்பத்தை மிகச்சிலரே குறுக்கு விசாரணை செய்கின்றனர். அப்படி செய்கிறவர்களின் மீது, தேசத்துரோகி என்ற குற்றப்பட்டம் சுமத்தப்படுவதை குறிப்பாக மோடியின் தலைமையிலான அரசு இதைச் செய்வதை நாம் பார்க்கிறோம்.
இப்போதெல்லாம் இந்தியாவில் எதிர் விசாரணைக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. அவர் தீவிரவாதி, பாகிஸ்தான் ஆதரவாளன்; எனவே இந்தியாவுக்கு எதிரானவன் என்று சொல்லிவிட்டால் போதும். மற்றவற்றை சமூக வலைதளத்தில் உள்ள இந்திய தேச பக்தர்கள் பார்த்துக் கொள்வார்கள். கேள்விகேட்பவரின் அறத்தை நிராகரித்து, அவர்களுக்கு துரோகிப் பட்டம் வழங்கப்படுவது மெய்யறு அரசியலின் கூறு.
கவனத்தைத் திருப்பும் இந்த மாய விவரணையை மக்களும் தொடர்ந்து நம்பத் தொடங்கியிருப்பதே மெய்யறு அரசியலின் முக்கிய விளைவாகும். இதை விளக்கமாகப் புரிந்துகொள்ள மோடியின் தலைமையின்கீழ் நடந்த ஒரு சமீபத்திய ‘சர்க்கஸுக்கு’ வருவோம்.
பண மதிப்பழிப்பும் மெய்யறு அரசியலும்
மோடியின் சமீபத்திய 500 ரூபாய், 1000 ரூபாய் பண மதிப்பழிப்பு பற்றிய அரசியலே அந்த சர்க்கஸ். இதைப்பற்றி பொருளாதார நிபுணர்கள் நிறைய எழுதியிருந்தபோதிலும், இக்கட்டுரைக்கு உபயோகமாக இருக்கும் ஒரே ஒரு ‘உண்மையை’ மட்டும் இங்கு பார்ப்போம்.
பண மதிப்பழிப்புக்கு சொல்லப்பட்ட மிக முக்கியமான காரணங்களில் ஒன்று: இந்தியாவில் பெருகியுள்ள கருப்புப் பணத்தை ஒடுக்குவது என்பதாகும். அதாவது, பண மதிப்பழிப்புக் கொள்கை அறிவிப்பால் கருப்புப் பணத்தை பெட்டிகளில் கோடிகோடியாக பதுக்கியோர் நிலை பரிதாபமாகிவிடும். ஏனெனில், அவர்களால் வங்கிகளுக்குச் சென்று பொய்க்கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக்க முடியாது. ஆக, அப்பணம் மதிப்பற்றுப்போனால் நாட்டில் கருப்புப்பணம் பெருமளவில் ஒழிந்துவிடும்.
ஆனால் நடந்தது தலைகீழ்.
இந்திய அரசாங்கம் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்ட 500, 1000 ரூபாய்களின் மொத்த மதிப்பு 15. 4 லட்சம் கோடி. இவற்றில் 14 லட்சம் கோடி மதிப்புள்ள பணத்தாள்கள் வங்கிகளை சேர்ந்தடைந்து, புதிய நோட்டுகளாக மாற்றப்பட்டன: 90 சதவிகித 500, 1000 ரூபாய் தாள்கள் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. அதாவது, மோடியின் பண மதிப்பழிப்பு கொள்கை கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற துணைபுரிந்திருக்கிறது!
மோடியின் தலைமையிலான அரசு, புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களில் நாற்பது சதவிகிதம் (கருப்புப் பண மதிப்பீடு) வங்கிக்குத் திரும்ப வராது என்று கூறியது. ஆனால் நம்பியதற்கும் நடந்ததற்கும் துளிகூட சம்பந்தமில்லை.
ஆனால் மோடி அரசாங்கம் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. பண மதிப்பழிப்பின் சாதக, பாதகங்கள் குறித்து ஊடகங்களில் விவாதம் என்ற பெயரில் கூச்சல் நடந்தேறிக் கொண்டிருந்தது. மோடியோ, இந்த சர்க்கஸில் கலந்துகொள்ளவே இல்லை. பண மதிப்பழிப்பு அரசியலில் நடந்தது என்ன, எதிராளிகளின் குற்றச்சாட்டு உண்மையா, எது உண்மை/பொய் என்பது குறித்து எந்த விவாதத்திலும் மோடி அண்ட் கோ ஈடுபடவில்லை.
அவர்கள் முன்வைத்த எளிமையான ஆனால் மிக வலிமையான திசை திருப்பும் உத்தி: தேசப் பற்று.
கருப்புப் பண திருடர்களைப் பிடிக்கவேண்டுமெனில் (இதுவரை அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்) வலியைக் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று பிரதமர் சாமானியர்களிடம் உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார்.
யாராவது எதிர்வினை செய்தால் அவற்றுக்கு நாடெங்கும் மோடி விளம்பரத்தட்டி மூலம் உணர்ச்சிகரமான ஆறுதல் சொன்னார்: ‘நீங்கள் நேர்மையானவர் என்றால் பயப்பட வேண்டாம், உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது’. இதன்மூலம் கேள்வி கேட்பவரின் தேசப்பற்று கேள்விக்குள்ளானது.
தேசப் பற்றாளர்கள் கருப்புப் பண ஒழிப்புக்காக, பண மதிப்பழிப்பால் உண்டான இடரைப் பொறுத்துக்கொள்வர் – என வாட்ஸப், சமூக வலைதளங்களில் எல்லாம் தியாக மீம்ஸ், செய்திகள் பகிரப்பட்டன. பணக்காரனுக்கு அடிவிழப்போவதால், நாமெல்லாம் சற்று பல்லைக் கடித்துக்கொண்டு இருக்க வேண்டும் (!) என்ற ரீதியில் தேசப்பற்று பல்வேறு ஊடக வெளிகளில் உற்பத்தி செய்யப்பட்டன.
இதற்கு ஒரு எளிமைப்படுத்தப்பட்ட உதாரணம்: உங்களுக்கு மொபைல் டேட்டா பற்றி கவலை இல்லை என்றால் [இங்கே](https://www.youtube.com/watch?v=E-xdIwhETrM) அழுத்தி எஸ்.வீ. சேகர் என்ற ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், ஒரு ‘பதார்த்தத்தை’ சாப்பிட்டுக் கொண்டே சாமானியனுக்குச் சொல்கிற அறிவுரைகள், கருத்துகள் பற்றிக் கேட்கவும்: கோபம் வரும். சிலருக்குக் காமெடியாகக்கூட இருக்கலாம். ‘இதையெல்லாம் யார் முரளி பாக்குறாங்க’ என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. ஆனால் நான் இங்கே சொல்லவருவது என்னவென்றால், நீங்கள் இங்கே பார்க்கிற எஸ்.வீ.சேகர் தான் நாம் போனவார உதாரணத்தில் பார்த்த வடிவேலுவின் வேலையைச் செய்கிறார். ஒரே ஒரு வித்தியாசம்: எஸ்.வீ.சேகர் பஞ்சாயத்தில் தானாகவே ஆஜராகிறார். ஏனென்றால் அவர் ஒரு பிரபல நிபுணர் (celebrity expert).
ரியலிட்டி டி.வி. நட்சத்திரங்கள், செய்தி ஊடகங்களில் வருகிற கருத்து கந்தசாமிகள், திரைப்படத்துறையினர் ஆகியோர் எல்லாம் கதம்பமாக ஒன்று திரண்டு எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்கின்றனர்.
இவர்களில் பெரும்பான்மையானோர் எந்தவிதமான அறிவுப்புலமும் இல்லாமல், எல்லாவற்றைப் பற்றியும் ஊடகங்களில் கருத்துச் சொல்வதும், எழுதுவதும் வழக்கமாகிவிட்டது. இது ஏதோ தமிழகம் அல்லது இந்தியாவில் மட்டும் நடப்பதில்லை: உலகமெங்கும் இதே நிலைதான். பண மதிப்பழிப்புக்கு மீண்டும் வருவோம்.
பண மதிப்பழிப்பு செய்யப்பட்டவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (New India is born), கரன் ஜோகர் (This is truly a masterstroke move!), ரிஷி கபூர் (Ball out of the stadium, Wohaaaaa!!!!), கமல்ஹாசன் (Salute Mr Modi.), அனுராக் காஷ்யப் (Ballsiest move I have ever seen from any leader) ஆகியோர் ட்விட்டரில் இந்தியப் பிரதமரைப் பாராட்டினர். மோடி ட்விட்டரில் அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்தார் (அதேசமயம் சாமானியர்களைப் பார்த்து வலியைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று கூறவும் தவறவில்லை).
‘நிபுணர்களின்’ இந்த ட்வீட் பாராட்டுகளெல்லாம் செய்திகளாக உருமாற்றம் அடைந்தன. ஊடகங்கள் நினைத்தால் ஒழிய ஒரு ட்வீட் செய்தியாகாது – என்பது முக்கியம். ஊடகங்கள் இந்த நிபுணர்களிடம் பேட்டி கண்டு அவர்களின் ஆதரவான கருத்துகளை பொதுவெளியில் பதிவு செய்தன. இந்தச் செய்திகள் பின்னர் மீம்ஸ்களாக மாற்றப்பட்டன.
இந்த மீம்ஸ்களும் செய்திகளும் பிரபல நிபுணர்களை ரசிகர்களாகப் பின்தொடரும் சாமானியர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பகிரப்பட்டன. “ஒரு உண்மையான இந்தியனாயிருந்தால் இதை ஷேர் பண்ணவும்” என்றரீதியில் எனக்கு வந்த மீம்ஸ், குறுஞ்செய்திகள் மட்டுமே இருபதிலிருந்து முப்பது வரை இருக்கும்.
பிரபல நிபுணர்களின் பங்களிப்பு பண மதிப்பழிப்பு அரசியலுக்கு மட்டுமல்ல, அனைத்துவகையான அரசியலுக்கும் இவர்களின் பங்களிப்பு அதிகரித்துவிட்டது. துக்ளக்கின் கடைசிப்பக்க விளம்பரத்தில் வந்த சிட்டுக்குருவி லேகியம் புகழ் பழனி டாக்டர் காளிமுத்துவின் சிகிச்சைபோல!
இந்நிபுணர்கள் உண்மையை வேண்டுமென்றே திரித்துக் கூறலாம் அல்லது அறியாமையில் உளறலாம். இப்படிச் சொல்வது கூட சற்றே மேட்டிமைத்தனமாகப் படலாம். ஆனால் இவர்களின் கருத்துகளுக்கு கொடுக்கப்படும் ஊடகங்களின் முக்கியத்துவம் அவர்களின் அறிவுப்புலத்தில் இருந்து வருவது கிடையாது என்பது மட்டும் நிச்சயம்.
இந்தப் பழக்கத்தில் உள்ள மாபெரும் அபாயம், ‘பிரபலம்’ என்பது சமூக நம்பகத்தன்மையின் ஒரு முக்கியக் குறியீடாக மாறிவிட்டதே ஆகும்.
அதுமட்டுமல்ல, பிரபலங்களின் வரவால் அரசியல் பொருள்களும் ஒரு நுகர்வுப் பண்டமாக மாறிவிட்டது. தமிழ் சமூக வலைதளங்களில் வருகிற பெரும்பாலான அரசியல் வாதங்களின் தன்மைகளே இதற்குச் சான்றாகும்.
இது அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல, தொலைக்காட்சியில் வருகிற ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற ‘சமூக நிகழ்ச்சிகளுக்கும்’ கூட பொருந்தும். இம்மாதிரி நிகழ்ச்சிகளில் ஒரு குடும்பத்தினர் தனது அந்தரங்க பிரச்னைகளை ஒரு பிரபல நிபுணரின் தலைமையில் தொலைக்காட்சியில் கடை விரிக்கும்போது, சாமானிய வாசகர் இதை ஒரு குடும்பப் பிரச்னை என்பதை வசதியாக மறந்துவிடுகிறார். அது ஒரு நாடகக் காட்சியாக நம் வீட்டின் வரவேற்பறையில் அரங்கேறுகிறது.
ஒரு கடைக்கு வெளியே நின்று கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொம்மைகளைப் பார்க்கும் நுகர்வாளனைப் போல இந்நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு கடந்துவிடுகிறோம். இதுவும் ஒரு கவனச்சிதைவு. அவ்வளவே.
அதாவது, மெய்யறு சமுதாயத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் எந்த ஒரு சமூக அரசியல் விவாதப் பொருளையும் ஒரு நுகர்வாளனைப்போலவே அணுகுகிறோம், அவ்வளவே. இதனால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்துக்கும், ஊடகப் பிரபலங்களுக்கும் கவனத்தைச் சிதைப்பது மிக எளிதாக இருக்கிறது.
இதன் பின்புலத்திலேயே ரியலிட்டி டி.வி. ஈன்றெடுத்த நட்சத்திர கோடீஸ்வரன் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
இப்போது மீண்டும் மோடிக்கு வருவோம்.
மோடி இதுவரை பண மதிப்பழிப்பு என்ற நிதிக்கொள்கை பற்றியோ அதன் விளைவுகளைப் பற்றியோ விரிவாக ஊடகங்களிடமோ, மக்கள் மன்றம்முன்போ எடுத்துரைக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து பொருளாதர நிபுணர்களும் ஒரே குரலில் இந்த பண மதிப்பழிப்புக் கொள்கையை குறை சொல்லியுள்ளனர்.
மோடி செய்தது எல்லாம் பண மதிப்பழிப்புக்கு எதிரானவர்களை, தேசத்துரோகி என்று சொல்லி திசைதிருப்பியதுதான்.
கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கும், முறைசாரா தொழிலாளர்களுக்கும் (இந்தியாவின் மொத்த தொழிலாளர்களில் ஏறத்தாழ 80 சதவிகிதத்தினர்) ஏற்பட்ட துன்பங்களை மோடி அரசாங்கம் அங்கீகரிக்கவே இல்லை; நிராகரித்தது. இதுவும் மெய்யறு அரசியலின் பண்பு என நான் மீண்டும் விளக்கத் தேவையில்லை.
தொடரும்…
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)