முரளி சண்முகவேலன்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
நம்மைச் சுற்றி இருக்கும் பொது ஊடகம் (mainstream media) மேற்கத்திய உலகின் கண்டுபிடிப்பு. தொழில்நுட்பத்தினாலும், மேற்கத்திய ஜனநாயக மாண்பினாலும் ஏற்பட்ட ஒரு பொது விளைவு.
நவீன ஊடகங்கள் தொழில் உற்பத்தியின் தன்மையோடே இயங்குகின்றன. எனவே, நுகர்வுத்தன்மை இன்றி பொது ஊடகம் உயிர் பிழைக்க முடியாது. தொழிற்சாலைகள் லாபமின்றி இயங்க முடியாது: ஊடகத் தொழிலும் அப்படியே.
ஊடகத் தொழிலின் அறப்பண்புகள் ஒரு கார் உற்பத்தித் தொழிலின் அறப் பண்புகளிலிருந்து வேறுபடுவதாகச் சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது. இது ஒரு மயக்கமே. இந்த மயக்கத்தில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.
லாபம் ஒருபுறமிருந்தாலும் ஊடகத் தொழிலில் உள்ள மற்ற அறப்பண்புகள் முக்கியமானவை என ஊடகப் பண்டிதர்களும், அரசியல்வாதிகளும், சட்ட வேந்தர்களும், ஆய்வாளர்களும் மாய்ந்து மாய்ந்து சொல்கின்றனர். இது மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு ஊடக வரலாற்றில் பல உதாரணங்களும் உள்ளன. எதையும் நம்பத்தயாராக இருக்கும் சாமானியர்களும் இந்த நம்பிக்கையை நீர் ஊற்றி வளர்க்கின்றனர்.
உதாரணமாக, ஊடகத்தொழிலின் ஒரு முக்கியப் பண்பாக நடுவுநிலைமை என்ற அறம் முன்வைக்கப்படுகிறது. அதாவது எந்த ஒரு அரசியல், கலாச்சார விவாதத்திலும் சார்பு நிலை எடுக்காமல் அனைத்து நிலைகளையும் முன்வைத்தபின்பு வாசகர்கள் (நுகர்வர்கள்) சுதந்திரமான முடிவை எடுப்பார்கள் என்பதே இதன் தத்துவமாகும்.
நடுவுநிலைமையான செய்திகளையும், தகவல்களையும் வெளியிடுவதின் மூலமாக, பொதுமக்களின் நலன் உயர நான்காவது தூணாக உடகங்கள் செயல்படுகின்றன – என்ற பார்வையில் உண்மையும் திரிபும் கலந்தே இருக்கிறது.
உதாரணமாக, ஜல்லிக்கட்டு, ஈழத்தமிழர்கள், இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் தமிழ் நாட்டு ஊடகங்கள் “தன் சார்பு” என்னவென்று சொல்லாமல் எல்லா தரப்பு வாதங்களையும் நுகர்வர்களுக்கு (வாசகர்களுக்கு) கொண்டு சேர்ப்பதின் மூலம் அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நம்புவதே நடுவுநிலைமை அறத்தின் ஐதீகம். இது சாத்தியமா, இப்படி நடக்கிறதா என்பதை உங்களின் நடுவுநிலைமை முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
நடுவுநிலைமை என்ற தராசு என்பது நடப்பில் சாத்தியமில்லை என்பதே எனது கருத்து. ஊடகங்களின் இத்தராசு எப்போதுமே ஏதாவது ஒரு பக்கமாக சாய்ந்தவண்ணமே உள்ளது. இப்படி சாய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. ஊடகங்களில் உள்ள நிறுவன அரசியல்; செய்தி சேகரிப்பில் உள்ள அரசியல்; செய்தி சேகரிப்பவரின் குறைபாடு/ அறியாமை; அவரின் சித்தாந்தச் சாய்வு; அரசியல் மற்றும் லாப நெருக்கடி என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஜல்லிக்கட்டு, ஈழத்தமிழர்கள், இடஒதுக்கீடு குறித்த ஊடக விவாதங்களில் இந்தியா டுடே, என்டிடிவி, தி ஹிண்டு, தினத் தந்தி, தினமலர், மற்றும் தமிழ் / வட நாட்டு தொலைக்காட்சிகளின் நிலைப்பாடும் வாசகர்கள் அனைவருக்கும் தெரியாமல் இல்லை. இதற்கு மத்தியிலேயே நடுவுநிலைமை நீச்சலடித்துக் கொண்டிருக்கிறது. இது, மேற்குலக ஊடகங்களுக்கும் சாலப் பொருந்தும்.
நடுவுநிலைமை எந்தளவுக்கு சாய்ந்துள்ளது என்பதை சமீபத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. இது புதிய கண்டுபிடிப்பல்ல. என்றாலும் ஊடக அறப்பண்புகள் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கிறது என்று திரும்பத் திரும்ப தாராளவாதிகளால் சொல்லப்படும்போது இந்த இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவது முக்கியம். மேலும் இது அமெரிக்கப் பிரச்சி னை மட்டுமல்ல. இன்று உலகெங்கும் உள்ள ஊடகங்களுக்கான ஒரு முக்கியமான சவால் என்றே சொல்லலாம்.
அமெரிக்கத் தேர்தலில் தோற்றுப்போன அதிபர் வேட்பாளர் ஹிலரிக்கு கிட்டத்தட்ட [240-க்கும் மேலான அமெரிக்க ஊடகங்கள்](http://uk.businessinsider.com/hillary-clinton-endorsements-newspaper-editorial-board-president-2016-2016-9?r=US&IR=T/#we-got-tired-of-adding-slides-so-here-are-77-more-newspapers-with-circulations-over-20000-that-endorsed-clinton-in-a-list-with-links-to-their-editorials-75) வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து தலையங்கம் எழுதின. ஆனால், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை வெறும் [19 ஊடகங்களே ஆதரித்து](http://www.businessinsider.in/Here-are-all-the-major-newspapers-that-have-endorsed-Donald-Trump-for-president/articleshow/55167085.cms#las-vegas-review-journal-mr-trump-represents-neither-the-danger-his-critics-claim-nor-the-magic-elixir-many-of-his-supporters-crave-but-) எழுதின.
மேற்குலகில் தேர்தலின் போது எழுதப்படும் இந்த தலையங்கச் சார்பு ஊடகச் சுதந்திரத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, ஒரு நிருபர் செய்தி சேகரிப்பது உண்மையின் அடிப்படையில் மட்டுமே என்றாலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்கள் தங்களது அரசியல் தெரிவுகளை வாசகர்களிடம் தலையங்கம் மூலமாக தெரியப்படுத்துவது மேற்கத்திய ஊடகங்களில் இருந்து வருகிற அரசியல் நடைமுறையாகும்.
மேற்கத்திய ஊடக ஆய்வில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட எழுதா விதி ஒன்று உண்டு: ஜனநாயக உலகில் ஊடகங்களின் தாக்கமும், அதன் சக்தியும் (media effects and power) இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை என்பதே அது.
இந்த ஐயப்பாடு வாசகர்கள் பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தலாம். ஏனெனில், சமூக வலைதளங்களும் இணையங்களும் தொலைக்காட்சிகளும் புரட்சியை உங்கள் காலடியில் சேர்ப்பதாகச் சொல்லிவருவதை நாம் நம்பிக்கொண்டிருக்கும் காலமிது.
அரபு வசந்தம், வாட்ஸப் எழுச்சி, ட்விட்டர் புரட்சி எல்லாம் ஊடக சக்திகளை அங்கீகரிக்கின்றன. ஆனால் ஊடக ஆய்வாளர்கள் இந்த மயக்கத்துக்கு வெளியில் சிந்திக்க முயற்சிக்கிறார்கள்.
ஆய்வாளர்கள் இந்தக் கோட்பாட்டு நிலை எடுக்க ஒரு மிக எளிமையான காரணத்தை சொல்கின்றனர்: ஊடகங்களால் ஒரு சமூகத்தை மாற்றமுடியுமெனில், அரசியல்வாதிகளும், அதிகாரம் படைத்தவர்களும், செல்வந்தர்களும் தாங்கள் நினைக்கும்வண்ணம் சமூகத்தை மாற்றியிருக்க முடியும். ஏனெனில், அவர்களே இன்றைய உலகில் ஊடக முதலாளிகள். ஆனால் அப்படி எதுவும் நடந்தேறவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஊடகங்களின் கணிப்பு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மேற்குலகில் பொய்த்துப்போக தொடங்கியிருக்கிறது. நம்மீதான ஊடகங்களின் தாக்கம் கலவையானது: அறரீதியானதல்ல.
உதாரணமாக, புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கு என நம் அனைவருக்கும் தெரியும். ஊடகங்களில் இதற்கான செய்திகளையும் நாம் அடிக்கடி காண்கிறோம். அதேபோல், பாதுகாப்பற்ற உடலுறவால் எச்.ஐ.வி. வர வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் மாற்றுக் கருத்து கிடையாது. விளம்பரங்களிலும், நாடக நிகழ்ச்சிகளும், செய்திகளிலும் இதை திரும்பத் திரும்ப கண்டவண்ணம் உள்ளோம். இருந்தாலும் புகைப்பிடித்தலும், பாதுகாப்பற்ற உடலுறவும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது.
அதே சமயத்தில், புகைப்பதைக் குறைப்பதிலும் பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்ப்பதிலும் ஊடகங்களுக்கு ஒரு பங்கு இருக்கலாம். புகைப்பிடிப்பதை அதிகரிப்பதிலும், பாதுகாப்பற்ற உடலுறவை அதிகரிப்பதிலும்கூட ஊடகங்களுக்கு பங்கு இருக்கலாம். ஆனால் மனித நடத்தையை மாற்றுவதில் உள்ள ஊடகங்களின் பங்கு சிக்கலானது. முற்றிலும் நிரூபிக்கமுடியாதது. அதே சமயத்தில் இன்றைய மனிதனின் சமூக, அரசியல் பரிவு, புரிதல், வெறுப்பானது – இன்றைய ஊடகங்கள் இல்லையெனில் – வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இதை ஊடக ஆய்வாளர்கள் சமூகத்தில் நிலவிவரும் அரசியல் கலாச்சார தொழில்நுட்ப மாற்றங்களை விளங்கிக்கொள்ள ஊடகங்கள் ஒரு பங்கு வகிக்கலாமே தவிர, அவைகளால் சமூக மாற்றம் ஏற்படுகிறது என மொத்தமாக ஏற்க முடியாது என்று கூறுகின்றனர்.
இந்தக் கூற்று நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பைப் பார்க்கும்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது.
அமெரிக்க ஊடகங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
முதலில் பெருநகர பத்திரிகைகள். ந்யுயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், போஸ்டன் க்ளோப், லோஸ் ஏஞ்சலில் டைம்ஸ், சிகாகொ ட்ரிப்யூன், யுஎஸ்ஏ டுடே ஆகியன இதில் அடங்கும். மேற்சொன்ன இந்தப் பத்திரிகைகள் அனைத்தும் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் முதல் பத்து பத்திரிகைகள் பட்டியலில் அடங்கும்.
இப்பத்திரிகைகள் அனைத்தும் அமெரிக்காவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர நகரங்களில் (coastal city areas) இருந்து வெளிவருகின்றன. ஹிலரிக்கு அதரவளித்த இப்பத்திரிகைகள் தேசிய, உலகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பத்திரிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நகரங்கள் உலகமயமாக்கல், தாராளவாதம் மூலம் பயன்பெற்ற பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது வகையான பத்திரிகைகள் மாநிலங்களில் இருந்து வெளிவருகிற பத்திரிகைகள்: இவை மாநிலச் செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பவை. நம்மூர் தினகரன் பத்திரிகையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மாநிலப் பத்திரிகைகள் அளவிலும் ஹிலரிக்கு ஆதரவு இருந்தது.
இதற்கடுத்தபடியாக உள்ளூர் பத்திரிகை என்றழைக்கப்படும் ‘கம்யூனிட்டி நியூஸ்பேப்பர்’ (community newspaper) என்ற ஒரு கடைசி வகை உண்டு. உதாரணமாக, ஒரு ஊரில் லத்தீனோக்கள் அதிகமாக இருந்தால் அவர்களுக்கு என ஒரு பத்திரிகை (அவர்களுடைய மொழியில்) இருக்கும். உதாரணமாக [எல் எஸ்பிரெஸோ டி மியாமி](http://chroniclingamerica.loc.gov/lccn/sn99026919/) என்ற உள்ளூர் ஸ்பானிய மொழி பத்திரிகை 1976ல் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை வாரம் இருமுறை வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த உள்ளூர் பத்திரிகைகள் எல்லாம் தினசரி பதிப்புகள் அல்ல: வார(மிருமுறை); மாத(மிருமுறை) பதிப்புகளும் உண்டு.
அமெரிக்காவில் மட்டும் [8000-க்கும் மேற்பட்ட](https://www.nnaweb.org/about-nna?articleCategory=community-facts-figures) உள்ளூர் பத்திரிகைகள் உள்ளன. இணையத்தின் வரவுக்குப்பின், அமெரிக்க தினசரிகளை வாங்கிப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகுந்த வீழ்ச்சியை அடைந்திருக்கிறது. ஆனால் உள்ளூர் பத்திரிகை மட்டும் வளர்ந்தவண்ணம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு ஆய்வின்படி, உள்ளூர் பத்திரிகைகளின் ஒட்டுமொத்த அமெரிக்க தேச வாசகர்களின் வார எண்ணிக்கை 15 கோடி. இவற்றில் 30 சதவீத வாசகர்களுக்கு இணைய வசதி இல்லை. இது வேறு அமெரிக்கா.
[ஒரு சர்வேயின் படி](https://knightcenter.utexas.edu/blog/us-community-newspapers-going-strong-study-shows), உள்ளூர் பத்திரிகைகளுக்கான வாசகர்கள் குறையவில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.
ஸ்டான்ஃபோர்ட் பலகலைக்கழகம் 2011-ல் வெளியிட்ட [ஆய்வறிக்கையின்](https://web.stanford.edu/group/ruralwest/cgi-bin/drupal/content/rural-newspapers)
படி தேசிய, மாநிலப் பத்திரிகைகளைவிட , உள்ளூர் பத்திரிகைகளுக்கே வாசகர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கான முக்கியக் காரணம் உள்ளூர் பத்திரிகைகளில் வரும் செய்திகள் வேறு எந்த ஊடகங்களிலும் வெளிவருவது கிடையாது.
இப்பத்திரிகைகள் கிட்டத்தட்ட சிறுதொழில் போல இயங்குகிறது. இங்கு வேலைபார்ப்பவர்களின் வாழ்வாதாரம் உள்ளூர்வாசிகளின் நம்பகத்தன்மையை பொறுத்தே உள்ளது. அதாவது வாசகர்களை நம்பி இருக்கவேண்டிய கட்டாயத்தினால் இப்பத்திரிகைகள் அவர்களின் செய்தித் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மேலும், இப்பத்திரிகைகளுக்கு தேசியப் பத்திரிகைகளுக்கு இருக்கும் கொழுத்த விளம்பர வருவாய் கிடையாது. இதனால் இப்பத்திரிகைகளுக்கும், நிருபர்களுக்கும் உள்ளூரில் ஒரு மரியாதை உண்டு. இவர்கள் ஒரு பொறுப்பான மக்கள் பிரதிநியாகவும் பார்க்கப்படுகின்றனர். இந்த உறவில் பிரச்சினை இல்லாமல் இல்லை. ஆனால், அதைப் பற்றி வேறொரு இடத்தில் எழுத வேண்டும். .
இந்த உள்ளூர் பத்திரிகைகளின் உலகம் விசித்திரமானது. நமக்குத் தெரியும் அமெரிக்க ஹாலிவுட், பெருநகர ஊடகங்களுக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை. இப்பத்திரிகைகள் பலவற்றுக்கும் இணைய முகவரிகளே கிடையாது!
ஹிலரிக்கு பெருவாரியான அமெரிக்க தேசிய, மாநில, ஊடகங்கள் அளித்த ஆதரவை மேற்குறிப்பிட்ட அளவுகளுக்குள்ளேயே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
கடற்கரையை ஒட்டிய தாராளவாத பத்திரிகைகள் (coastal liberal newspapers), தலைநகரப் பத்திரிகைகள், தனியார் தொலைக்காட்சிகள் (cable network) ஹிலரிக்கு ஆதரவளித்தது, ட்ரம்ப்பின் மீது உள்ள தயக்கம் (பயம்) கலந்த ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையால் ஏற்பட்ட நிலைப்பாடே ஒழிய அது ஒட்டுமொத்த மக்களின் பிரதிபலிப்பு என்று கூறிவிட முடியாது..
நான் வாஷிங்டன் நகரத்துக்கு வெளியே உள்ள ஒருவரிடம் – தேர்தலுக்கு முன் – தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் ஹிலரிக்கு வாக்களிப்பதில்லை என உறுதியாக இருப்பதாகக் கூறினார். காரணம்: ‘கிளிண்டன் நிறுவனம் அரேபிய முஸ்லீம்களிடமிருந்து லட்சக்கணக்கான டாலர்களை மறைமுகமாக கொடையாகப் பெற்றுள்ளது’ எனக் கூறினார். அவர் கூறிய ஆதாரம்: உள்ளூர் பத்திரிகை.
இணையங்களும் சமூக வலைதளங்களும் பெருநகர ஊடகங்களும் உண்டாக்குகிற
பிரமையிலும் சத்தத்திலும் சாமானிய மக்களின் விசும்பல்கள் கோபக்குரல்கள் அம்பலத்தில் ஏறாமலேயே போய்விடுகின்றன. ஆனால், நகரத்தில் இருப்பவர்களோ தங்களை அனைத்துலக பிரதிநிதியாக இணையத்தில் ஓலமிட்டு வருதல் அதிகமாகிவருகிறது (இதற்கான உதாரணங்களை தமிழ் இணைய உலகத்திலும் காணலாம்).
ஒருவகையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் தாராளவாதிகளையும், முற்போக்காளர்களையும் பெருநகர ஊடகங்களையும் எதிர்ப்பதற்கு இந்த இடைவெளி ஒரு முக்கியக் காரணமாகும்.
அடுத்ததாக நடுத்தர, சிறிய நகரங்களில், கிராமங்களில் உள்ள அமெரிக்க வாக்காளர்களுக்கும் டாட்டா (data) வெறிபிடித்த டிஜிட்டல் ஊடகங்களுக்கும் கடலளவு இடைவெளி உள்ளதை இத்தேர்தல் உறுதி செய்துள்ளது.
ஊடகங்களின் கருத்துக் கணிப்பு அரசியல்
அதிபர் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் கருத்துக் கணிப்பை அமெரிக்க பொது ஊடகங்கள் தினசரி வெளியிட்டு வந்தன. இது ஒருவகையான ரியலிட்டி டி.வி. உத்தி. தங்களது ஊடக உற்பத்தியை விற்க தேவைப்படும் ஒரு உத்தி.
இப்படி வெளிவந்த எல்லா கருத்துக் கணிப்புகளிலும் வந்த ஒரு முக்கிய பொதுச்செய்தி: ஹிலரியின் மகத்தான [வெற்றி வாய்ப்பு](https://www.nytimes.com/interactive/2016/upshot/presidential-polls-forecast.html) 70லிருந்து 90 சதவீதம் வரை இருக்கிறது என்பதே. பிறகு எப்படி இந்தக் கணிப்பு பொய்யானது?
மேற்குலகில் அரசியல் சமூக விவாதங்கள் குறித்து மக்களின் கருத்தறிவதற்கு இணையமும், டாட்டாவும் இரு கண்களாகிவிட்டன. இந்தியாவிலும் இப்போது நடைமுறையில் உள்ளது என்றாலும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் டாட்டா மீதான நம்பிக்கை வெறியாகவே வளர்ந்துவிட்டது எனக் கூறலாம்.
சந்தைப்படுத்துதல் (marketing), விளம்பரம், நுகர்வு கலாச்சாரம், ரியலிட்டி டி.வி., சமூக அரசியல் கருத்துகள், ஊடக வாதங்களில் யார் சரி தவறு, டாப் 10, 20, 50, 100 வரிசையில் உள்ள புத்தகங்கள், இசை, துணி, டி.வி., கம்ப்யூட்டர், உணவு, குளிர்பானம் என எல்லாவற்றிலும் திருவாளர் டாட்டா-வின் முடிவே இறுதி முடிவு.
இதற்கு அமெரிக்க அதிபர் தேர்தலும் விதிவிலக்கல்ல.
அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய அனைத்துக் கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் முடிவுகளும் பொய்த்துப் போனது ஏன் என்பது குறித்து பல காரணங்கள் கூறப்படுகின்றன.
டாட்டாவை பெற வேண்டுமெனில், இணைய வசதி உள்ளவர்களிடமே கருத்துக் கணிப்பு எடுப்பது அவசியமாகிறது. காரணம், இணையத்தில் பதில் சொல்லும் வகையானது டாட்டா அறுவடை செய்ய ஏதுவாக இருக்கிறது. இதனால் இணைய வசதி உள்ளவர்களிடம் அல்லது வீட்டில் இணையத்தை உபயோகிப்பவர்களே இம்மாதிரியான கருத்துக்கணிப்பில் பங்கு கொள்கிறார்கள்.
இணைய வசதி இல்லாதவர்களோ, வீட்டில் இணைய வசதி இருந்தாலும் அதை உபயோகிக்காத அத்தை, பாட்டி, அண்ணன்களின் கருத்துகள் இக்கருத்துக் கணிப்பில் வெளிப்படவில்லை (நினைவில் கொள்க: அமெரிக்க உள்ளூர் பத்திரிகையில் 30 சதவீத வாசகர்கள் இணைய வசதியற்றவர்கள்).
ஆக, மேற்கத்திய தேர்தல் மற்றும் கருத்துக் கணிப்பில் நகரங்களைச் சேர்ந்த இணைய விரும்பிகளும், டாட்டா காதலர்களுமே பங்கெடுக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இது அமெரிக்கப் பிரச்னை மட்டுமல்ல. தொழில்நுட்பத்தின்மேல் வைக்கும் அசுர நம்பிக்கையால் ஏற்படுகிற மேற்குலகின் பிரச்சினையாகும். ப்ரெக்ஸிட் குறித்து இங்கிலாந்து ஊடகங்களும் இதே தவறை செய்தன என்று [லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸ்](http://blogs.lse.ac.uk/politicsandpolicy/eu-referendum-polls/) ஒரு ஆய்வில் கூறியுள்ளது.
ஒரு வேளை, இக்கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தொலைபேசி மூலமாக மக்களைத் தொடர்பு கொண்டிருந்தால் நகரங்கள் தாண்டி உள்ளூர் பத்திரிகை படித்து வரும், சாமானியர்களின் கருத்துக்கள், தேர்தல் கணிப்பில் தெரியவந்திருக்கலாம் என ‘நிபுணர்கள்’ இப்போது கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் அலைபேசிகளின் வரவால் வீட்டில் தொலைபேசிகளே குறைந்து வருவது இந்நிறுவனங்களுக்கு உண்டாயிருக்கும் மற்றொரு சிக்கலாகும். இணையத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துக் கணிப்பு சாமானியர்கள் பங்கெடுக்கும் வாய்ப்பினை கணிசமாகக் குறைத்திருக்கிறது (non-response bias)
இரண்டாவதாக, கருத்துக் கணிப்புக்கு ‘மாதிரி’ (random sampling) யாக தேர்வானவர்களை தொடர்புகொண்டு கேள்வி கேட்கும் 100 பேரில் 90 நபர்கள், தனக்கு பதிலளிக்க நேரமில்லை அல்லது விருப்பமில்லை என்று கூறுகின்றனர். இது புள்ளிவிவர தொழிலில் உள்ள பொதுப் பிரச்சினை. இந்த 90 பேரின் விருப்பங்களும் நிராகரிப்புகளும் பதிலளிக்கிற 10 சதவீத மாதிரியில் தெரிய வரும் என்பதே புள்ளிவிவர கணிதத்தின் விதி. இந்த ‘தங்க விதி’ இப்போது தகர்ந்திருக்கலாம். ஏனெனில், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் இணைய வசதியுள்ள ஒரு 10 சதவீதத்தினரையே கேள்வி கேட்டு விடைபெறுகின்றனர்.
மூன்றாவதாக, ட்ரம்புக்கு வாக்களிப்பது என்பது ஒரு சமூக இழுக்கு என்ற தோற்றம் அமெரிக்க ஊடகங்களில் தோற்றுவிக்கப்பட்டது. எனவே, ட்ரம்புக்கு வாக்களிக்க விரும்பியவர்கள்கூட ஒருவிதமான சமூக அங்கீகாரம் கருதி ஹிலரிக்கு வாக்களிக்க விரும்புவதாக பொய் சொல்லியிருக்கலாம் (shy-Trumper effect).
இறுதியாக, ஹிலரிக்கு வாக்களிக்க விரும்பிய அனைவரும் உண்மையிலேயே ஏதோ ஒரு காரணத்தால் வாக்குச் சாவடிக்கு செல்லாமல் இருந்திருக்கலாம் (likely voter error).
ஆக, இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் சில ஊடக உண்மைகளை உலகத்திற்கு வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இது அமெரிக்கா தவிர பிற நாடுகளுக்கும் பொருந்தும்.
ஊடகங்களின் தாக்கத்திற்கும் சக்திக்கும் வானளாவிய எல்லை கிடையாது.
பெருநகர ஊடகங்கள் மேட்டிமைத்தனம் கொண்டவை.
அரசியல்வாதிகளைப் போலவே ஊடகங்களும் சாமானியர்களின் மனநிலையை பிரதிநிதித்துவம் செய்வது கிடையாது.
ஊடகங்கள் மக்களின் ஆடி என அறுதியிட்டுக் கூறுவதற்கில்லை.
சார்புக் கருத்துகள் இல்லாத ஊடகங்கள் கிடையாது. நடுவுநிலைமை என்பது ஒரு ஊடக மயக்கம்.
சார்புக் கருத்துகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தாலும்கூட ஊடகங்கள், மக்கள் மனதை மாற்ற முடியும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
இணையமும், சமுக வலைதளமும் சலசலப்பை ஏற்படுத்தலாமே தவிர, சமூகத்தை புரட்டிப் போடுவதற்கு காரணமாக இருந்ததாக இதுவரை எந்தத் தடயமும் இல்லை [எனவே, சமூக வலைதளங்களின் தாக்கம், சக்தி குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்].
டாட்டா அலசல்கள் (data analytics) எவ்வளவு நுட்பமாக இருந்தாலும் அவை, ஒட்டுமொத்த மக்களின் விருப்பங்களை பிரதிபலித்துவிட முடியாது. குப்பன், சுப்பன், ராமாயி, ஜான், எமிலி, ஆஷ்லி, டேவிட் எல்லாம் டாட்டா அலசல்களுக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையானது நம்முன் இப்படி உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்க, தேர்தலுக்குப்பின், ஹிலரியின் தோல்விக்குக் காரணமாக ஒரு முக்கியமான பண்டிதம் பெருநகர ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது.
உண்மைக்கு மாறாக, புரட்டுகளையும் சேறுகளையும் வெறுப்புப் பேச்சுக்களையும் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வாரி இறைத்ததன் மூலம் மக்களின் மனதை, ட்ரம்ப் ஆதரவாளர்கள், வென்றெடுத்துள்ளனர். அதாவது உண்மையின் தாக்கம் அரசியல் மற்றும் ஊடக வெளியில் மதிப்பிழந்துவிட்டது.
இந்தத் தன்மையை ஊடக, கலாச்சார, அரசியல் ஆய்வாளர்கள் மெய்யறு அரசியல்(post-truth politics) என்று அழைக்கின்றனர்.
மெய்யறு அரசியலினால் உண்மைக்கு ஏற்பட்ட வீழ்ச்சியே மேற்குலகில் வலதுசாரிகளின் எழுச்சிக்குக் காரணமாக இருப்பதாக ‘இடதுசாரிகளும்’ ‘தாராளவாதிகளும்’ விவாதித்து வருகின்றனர்.
இது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – கட்டுரை 1 – முரளி சண்முகவேலன்
டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – கட்டுரை 2 – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்