கட்டுரை 2. டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்?
இன்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 45-ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கிறார். நேற்று இரவு ந்யூயார்க், வாஷிங்டன் நகர்களிலும் மற்ற இடங்களிலும் பிரபலங்களும், பொதுமக்களும் – அமெரிக்க தேர்தல் முறையின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி எதிர்ப்புக் குரல் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்த விழாவில் பங்கெடுத்து இசைக்கும் பள்ளி மாணவர்களை பிபிசி தொலைக்காட்சி, நேற்று (19 ஜனவரி) பேட்டி கண்டது. தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் இருந்திருந்தால் ட்ரம்புக்கு வாக்களித்திருக்க மாட்டோம் என அம்மாணவர்கள் உறுதியாகக் கூறினர். மேற்கத்திய ஊடகம் – ட்ரம்பின் அதிர்ச்சி வெற்றியை – நம்ப முடியாமல் உண்மைதானா என்று, மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கிள்ளிக் கொண்டிருக்கிறது.
கடந்த நாற்பதாண்டுகளில் மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்த நிலையில் பதவியேற்கும் அதிபர் ட்ரம்ப் என வாஷிங்டன் போஸ்ட் சொல்லியிருக்கிறது. அவர் பதவியேற்புக்கு நாங்கள் பங்கேற்க மாட்டோம் என ஹாலிவுட் பிரபலங்கள் வெளிப்படையாக நிராகரித்து விட்டனர்.
அமெரிக்க தேர்தல் முறையின் படி இன்று முதல் ட்ரம்ப் அதிபர். ஆனால் அமெரிக்க ஊடகங்களின் படி ‘பெருவாரியான’ மக்கள் பொது இடங்களில் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பின்னர் ட்ரம்புக்கு யார்தான் வாக்களித்தனர்? இந்தத் தொடரின் அறிமுகக் கட்டுரையில் குறிப்பிட்டது போல, ஜனநாயகக் கட்சி எதிர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன், வெற்றி பெற்றிருக்கும் அதிபரை விட 28.64 மில்லியன் வாக்குகள் அதிகம் பெற்று தோற்றிருக்கிறார்.
அமெரிக்க அரசியல் சாசனப்படி, வாக்காளர் பிரதிநிதிக் குழுவின் வாக்களிப்பே – பொது மக்களின் மொத்த வாக்குகளை மாநில ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தி 538 வாக்காளர் பிரதிநிதிகள் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை – இறுதி முடிவாகும். இதனடிப்படையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பொது மக்கள் வாக்கைப் பெருவாரியாகப் பெற்ற ஹிலரி கிளின்டண் (ட்ரம்ப்பை விட 28,64,974 வாக்குகள் அதிகம்) தோற்கடிக்கப்பட்டுள்ளார். சதவீதப் படி ஹிலரி வென்றெடுத்தது 48.2; ட்ரம்ப் 46.5. அதிகம் வித்தியாசமில்லை.
ஆனால் இந்த அதிர்ச்சித் தோல்வியினால் பாதிக்கப்பட்ட ஜனநாயக் கட்சி வாக்காளர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், வால் ஸ்ட்ரீட் செல்வந்தர்கள், பெண்ணியவாதிகள், பல்கலைக் கழகக் கண்மணிகள், சிலிகான் பள்ளத்தாக்கின் தொழில்நுட்ப அரசர்கள் என அனைவரும் சொல்லும் காரணம்: கல்லூரிக்குச் செல்லாத, அதிகம் படிக்காத, பழமை வாத இன, ஆண் ஆதிக்க மனமுள்ள வெள்ளை உழைக்கும் வர்க்கம் ஹிலரிக்கு எதிராகவும், ட்ரம்புக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர் என்பதே.
இப்படிச் சொல்வதால் ‘நான் அவனில்லை’ என்று அமெரிக்க வெள்ளையர்கள் தப்பித்துக் கொள்ளலாம். இந்த தப்பித்தல் மிக முக்கியமானது. ஏனெனில் அமெரிக்காவின் நிற (வெறி) அரசியல் ஐரோப்பாவை விட முற்றிலும் வேறுபட்டது. ஐரோப்பிய “மண்ணின் மைந்தர்கள்” வெள்ளையர்களே என்ற ஆதிக்கச் சிந்தனை இன்றளவும் நிறுவப்பட்டு வருகிறது: வெள்ளை முற்போக்குவாதிகள் மற்றவர்களை பெருந்தன்மையுடன் ஏற்று கொள்கின்றனர் – என்பதே அவர்களது பிரச்சினைகளின் ஆரம்பம். அது பற்றி பிறகு பேசலாம். ஆனால் அமெரிக்காவில் வெள்ளையரும், கறுப்பர்களும் வெளியிலிருந்து வந்தவர்களே. மேலும், நிற அரசியலுக்கான அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் போராட்டம் மிக நெடிய வரலாறு கொண்டது; அது அமெரிக்க முற்போக்கு அரசியல் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்தது.
எனவே, ‘நான் அவனில்லை’ என்ற விலகி நிற்கும் உபாயம் புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் உண்மையிலேயே ரியலிட்டி நட்சத்திர ட்ரம்புக்கு யார்தான் வாக்களித்தார்கள் என்ற கேள்விக்கான பதிலில் அமெரிக்க அரசியலில் நிற வெறி அரசியல் அடங்கியுள்ளது. எனவே தான் ‘நான் அவனில்லை’ என்ற வாதத்தை நிற வெறி எதிர்ப்பாளர்கள் நிராகரிக்கிறார்கள். இதற்கு நாம் புரிந்து கொள்ளக்கூடிய உதாரணம் ஒன்றுள்ளது: “சார், இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா? நான்லாம் எல்லார் கூடயும் சேந்து சாப்பிடுறேன்… எங்க வீட்டுல மாத்த முடியாது” என்று கூறும் முற்போக்குவாதியும் சரியான காலம் வந்தவுடன் தனது சாதிப் பெண்ணையே வீட்டுக்கடங்கி (அல்லது முற்போக்காகக் காதலித்துவிடுவார்) கட்டிக் கொள்வாரே – அவரை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் தான் திருமிகு. நான் அவனில்லை.
எனவே தான் உண்மையிலேயே யார் தான் அதிபர் ட்ரம்புக்கு வாக்களித்தது என்ற கேள்வி மிக முக்கியமானது.
இதற்கு பதிலும் அமெரிக்கா உலகத்திற்கு அளித்த பல “கொடைகளில்” ஒன்றில் உள்ளது: கருத்துக் கணிப்பு. அதிபர் தேர்தலுக்கு முன்னர், யார் வெற்றி பெறுவார் என அங்குள்ள கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் (இது ஒரு பில்லியன் டாலர் தொழில் துறை) தொடர் தினசரி புள்ளி விவரங்களும் பொய்த்துப் போன நிலையில், வாக்களித்தவர்களிடம் போய் கேள்வி கேட்டதற்கு கிடைத்த பதில்கள் மிக முக்கியம்.
இப்போது சில புள்ளி விவரங்கள்:
ஒட்டு மொத்த பெண் வாக்காளர்களில் 42 சதவீத பெண்கள் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஊடகங்கள் ஹிலரிக்கு பெண்கள் ஆதரவு அதிகம் (54) என மார்தட்டினாலும் ட்ரம்புக்கு கிடைத்த 42 சதவீதம் மிக முக்கியமானது. குறிப்பாக ‘நான் விரும்பும் பெண்ணை என்னால் அடைய முடியும், நான் விரும்புகிற யோனியை கசக்க முடியும்’ என்று பேசியதெல்லாம் ஊடகங்களில் கசிந்த போதிலும் இந்த 42 சதவீதம் குலையவில்லை என்பது முக்கியமானதாகும்.
இன்னும் முக்கியமானது: வாக்களித்த பெண் வாக்காளர்களில் 94 சதவீத கறுப்புப் பெண் வாக்காளர்கள் ஹிலரிக்கும், 53 சதவீத வெள்ளை பெண் வாக்காளர்கள் ட்ரம்புக்கும் வாக்களித்தனர். அதாவது ஆணாதிக்கம் பிடித்த, பெண்களை – தொடர்ந்து – கீழ்த்தரமாகப் பேசிய ட்ரம்புக்கு பெருவாரியான வெள்ளை இனப் பெண்கள் வாக்களித்து வந்துள்ளனர்.
இப்பெண் வாக்காளர்களுக்குள் பட்டப்படிப்பு முடித்தவர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்று கேட்கப்பட்ட போது, 51 சதவீத பட்டதாரிகள் ஹிலரிக்கு வாக்களித்திருக்கின்றனர். இது பெருவாரியானது என்றாலும், அதிக வித்தியாசமில்லை. அதாவது 49 சதவீத வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரிகள் ட்ரம்புக்கு வாக்களித்ததை இனவெறி அரசியலின்றி வேறு எதுவாக இருக்க முடியும்?
இதனாலேயே, நிற வெறி எதிர்ப்பாளர்கள் ‘நான் அவனில்லை’ என்ற வாதத்தை வெள்ளை இனத்தினர் தங்களைக் காத்துக் கொள்ள முயற்சிக்கும் சுயநலம் மிகுந்த வாதமெனச் சொல்லி நிராகரிக்கின்றனர். அமெரிக்கச் சமூகம் நிற அரசியலால் எவ்வளவு பிளவு பட்டுள்ளது என்பதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இது எல்லாவற்றிற்கும் மேல் ஆச்சரியமானது: ட்ரம்புக்கு கிடைத்த லத்தீனோக்கள் (மொத்த லத்தீனோ வாக்குகளில் 29 சதவீதம்) வாக்கு எண்ணிக்கை இதற்கு முந்தைய குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான மிட் ரோம்னியை விட (27) சற்றே அதிகமானது என்பதே.
மெக்ஸிக்கொவினர் பாலியல் வன்முறையாளர்கள் (rapists), எனவே அவர்கள் தடுக்கப்பட வேண்டுமானால் எல்லைச் சுவர் எழுப்பப்பட வேண்டுமெனெ கூறி வாக்கு சேகரித்தார்: ஆனால் மிட் ரோம்னியை விட இரண்டு சதவீத லத்தீனோக்களின் வாக்காளர்களை ஈர்த்துள்ளார்.
நான் நினைக்கும் எந்தப் பெண்ணையும் என்னால் அடைய முடியும். எனது பணம், அதிகாரத்துக்கு மயங்காத பெண்களே கிடையாது என்று கூறியது ஊடகங்களில் கசிந்தது. பெண்களின் வாக்கு வங்கியோ அவரை விட்டுச் செல்லவில்லை.
நகர வாழ், படித்த வெள்ளை இன முற்போக்கு வாதிகள் அனைவரும் ஹிலரிக்கு வாக்களித்தனர் என்ற கூற்றும் பொய்யென இப்போது தெரிய வருகிறது.
பின் ஏன் வெள்ளை இன உழைக்கும் வர்க்கத்தினரே ட்ரம்ப் அதிபராகக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் இந்த அதிபர் தேர்தலில் வாக்களித்தனர். இது உண்மை. அதே போன்று குறிப்பிடத்தக்க கறுப்பின வாக்காளர்களும் – குறிப்பாக இளைஞர்கள் – ஹிலரிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. இந்த இரு வாக்காளர் குழுக்களுக்கும் உள்ள ஒரு(ரே) ஒற்றுமை: பெருவாரியோனார் உலகமயமாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார நலிவுகளால் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள வெள்ளை இன முற்போக்குவாதிகளோ உலகமயமாக்குதலினால் பயனடைந்தவர்கள். இது ஒரு முரண்நகை: முதலாளித்துவ கொள்கையினால் பயனடைந்த ஆதிக்க இன மக்கள் வலதுசாரிகளுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டவர்களாக இருப்பது (அல்லது அப்படி தங்களை சித்தரித்துக் கொள்வது). அதே சமயத்தில் நகர்ப்புற வெள்ளை இன மக்களும் பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்துள்ளனர் என்பதும் மேற்கண்ட புள்ளிவிவரங்களின் மூலம் வெளி வந்திருக்கிறது.
எல்லாச் சமூகங்களிலும் நிலவிவரும் ‘கிராமத்தானை’ குறை சொல்லும் மனோபாவத்திற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. இது நடுத்தர, நகர் வாழ் போலி வெள்ளை இன முற்போக்குவாதிகளை மறைக்க உதவும் (இதே பாணி நம்மூரிலும் நடைபெறுகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்).
இறுதியாக, ஒபாமாவின் எட்டு வருட ஆட்சியின் கீழ் நிற அரசியல் குறித்த வன்முறைகளும், அதற்கான எதிர்வினைகளும் நிகழ்ந்துள்ளன; மிக அதிக அளவில் ஊடகங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. மாயாவதியின் ஆட்சியின் கீழ் ஒரு தலித் பாதிக்கப்பட்டால் எப்படி இந்திய பொது வெளியும் ஊடகங்களும் பொங்குமோ (பொங்கியதோ) அதே தான் அமெரிக்காவிலும் நடந்தது. இந்தத் தேர்தலில் நிற வெறிப் பொறுமலும், அதற்கான பதிலுமே வாக்காளர்களின் பதிலாக வெளி வந்திருக்கிறது.
இந்தப் பின்னனியில் ட்ரம்ப் அதிபராக பதவியேற்பதை எதிர்த்து நடத்தப்படும் கூட்டத்தில் பேசப்படும், விவாதிக்கப்படும் தொனி அனைத்தும் ட்ரம்ப் என்ற தனிநபருக்கு எதிராக முன் வைக்கப்படுகிறது. ஆனால் ட்ரம்ப் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த நிற வெறி நோயின் அறிகுறி. ஆனால் ட்ரம்ப்பை குறி வைப்பது எளிது; ‘நான் அவனில்லை’ தந்திரம். இந்த எதிர்ப்புக் கூட்டங்கள் சனநாயகத்தில் மிக முக்கியமானது: ஆனால் இந்தக் கலகக்குரல்கள் ட்ரம்பை அதிபராக்கியவர்கள் மேல் பாய வேண்டும். அவர் உங்கள் மனைவியாக இருக்கலாம்; காதலராக இருக்கலாம்; வெளியே சொல்ல விரும்பாத உங்களது அன்பான தாயாக இருக்கலாம்.
ட்ரம்ப் அதிபராகத் தகுதியற்றவர் என்பதை விட, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களில் உள்ள நிற வெறிகளைக் களையும் கூட்டமாக இந்த எதிர்ப்புக் குரல்கள் அமைந்திட வேண்டும்.
தொடரும்…
திங்கள் தோறும்
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – கட்டுரை 1 – முரளி சண்முகவேலன்