கட்டுரை: 14 – தளையறு சமுதாயம் (Open Society)
இத்தொடரின் இறுதிக் கட்டுரை இது. ஆனால், சம்பிரதாயமான முடிவுரையாக இருக்காது. போனவாரம் ‘இதுவரை’ என்ற தலைப்பில் இதுவரை பேசப்பட்ட, விவாதித்த பொருள்களைப் பற்றி சிறுகுறிப்பு ஒன்றை எழுதினேன்.
இந்த வாரம் இத்தொடரில், இதுவரை பேசப்பட்ட முக்கியப் பொருள்களின் சாரத்தை பொதுப்புத்தியில் உள்ள ஒரு கருத்தாக்கத்தை முன்வைத்து விளக்கவிருக்கிறேன். அக்கருத்தாக்கம் Open Society (ஓப்பன் சொசைட்டி) என்று அழைக்கப்படுகிற தளையறு சமுதாயம்.
ஓப்பன் சொசைட்டி என்ற கருத்தாக்கத்தை தேர்ந்தெடுக்கக் காரணம் மேலைநாடுகளில் உள்ள வலது, இடது என எல்லா சாரிகளும், மைனாரிட்டி கட்சிகள், அடையாள அரசியலை / (வெள்ளை) இன உரிமைகளை முன்வைக்கிற கருத்தாக்கங்கள், புரட்சியாளர்கள், அரபு வசந்தம் பேசுபவர்கள், பெண்ணுரிமை காவலர்கள் என அனைவரும் இந்தக் கருத்தாக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஸ்லோவோய்ஜ் ஜிஜெக் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய மார்க்சீய தர்க்கவாதிகள் இதற்கு விதிவிலக்கு. தளையறு சமுதாயம் கம்யூனிச இயக்கத்துக்கு எதிரானது. ஆனாலும் மேற்குலகில் இடதுசாரிகள், தாராளவாதிகள் இக்கருத்தாக்கத்தை ஆதரிக்கின்றனர். இடதுசாரிகளின் இந்த விமரிசனமற்ற ஆதரவால் அவர்களது கருத்தாக்கத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தளையறு சமுதாயம் என்ற கருத்தாக்கத்தின் வழியாக மேற்குலகின் அரசியலைப் படிக்கும்போது வலது, இடதுசாரி கொள்கைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் நீர்த்துப் போயிருக்கின்றன என்பது தெளிவாகிறது. உதாரணமாக, கீழ்க்கண்ட பட்டியலைப் பாருங்கள்.
பண்டமயமாக்கப்பட்ட இன, தேசிய, பன்னாட்டு ஊடகங்கள்
தகவல்தொடர்பு தொழில்நுட்பம், முதலீட்டியம்
உலகமயமாக்கம்
தாராளமயமாக்கம்
பொது சேவைத்துறையில் தவிர்க்கமுடியாத தனியார் துறையின் (தகவல் உள்ளிட்ட) தொழில்நுட்பம், ஆராய்ச்சி, முதலீடு.
இப்பட்டியலில் வரும் பொருளாதாரப் பொருள்களை (subjects) அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற மேற்குலக ஜனநாயக நாடுகளில் எல்லாவகையான அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. அரசியல் சித்தாந்த வேறுபாடுகளே இல்லை என ஆகிவிட்டது.
இவ்வாறு சித்தாந்தங்கள் நீர்த்துப்போனதில் இடதுசாரி சிந்தனையாளர்களுக்கே அதிக சவால், பிரச்னை; அவர்கள் முன்வைக்கும் அரசியல் சிந்தனையில் அதிக வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு உதாரணம்: இணையத்தின் அடிப்படைத்தன்மைகளையும், அவற்றின் கட்டுமானச் சாய்வுகளையும் பொதுவில் விவாதிக்க எந்த அரசியல் கட்சிக்கும் துணிவில்லை என்றே நான் சொல்வேன் (கட்டுரை 10 & 11). அவற்றின் வெளிப்படைத்தன்மை பற்றியும், அந்தரங்க மீறல் பற்றியும் ஆங்காங்கே குரல் கொடுப்பது எளிது.
ஆனால், இணையத்தின் அடிப்படையிலேயே இருக்கிற தன்மைகளை மாற்றக்கோரும் இயக்கமோ, அரசியல் கட்சியோ உலகளவில் கிடையாது. ஸ்வீடனில் ஆரம்பிக்கப்பட்ட பைரேட் கட்சியும் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் இதுவரை தரவில்லை.
இணையத்தில் நடைபெற்று வந்த அந்தரங்க மீறலை எட்வர்ட் ஸ்நோடன் உலகுக்கு எடுத்துக்காட்டிய பின்னரும், அதுகுறித்து எந்தச் சலனமும் மேற்குலக அரசியலில் ஏற்படவில்லை என்பதை நான் இப்படியே புரிந்துகொள்கிறேன். எனவே, இணையம் என்பது கருத்தாக்கங்களையும் செரித்துவிட்ட ஒரு தளமாக உருவெடுத்திருக்கிறது (post-ideological platform).
அதே சமயத்தில், இணையம் இல்லாமல் இன்று தகவல் பரிமாற்றம் நிகழ்வது கிடையாது. எனவே, மேற்கை பொறுத்தவரை இணையம் என்பது கருத்து / பேச்சு சுதந்திரத்தின் அடிநாதமாக மாறிவிட்டது. முதலீட்டியமும், லாபமும், தகவல் பரிமாற்றமும், பேச்சு / கருத்து சுதந்திரமும் இரண்டறக் கலந்து தட்டையாகப் பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக இணையம் (என்ற பொருளின் தொழில்நுட்பம், அவற்றின் முதலீட்டியம்) தளையறு சமுதாயத்தின் ஒரு மிக முக்கியக் கூறாகவும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அத்தொழில்நுட்பத்தின் முதலீட்டியமோ, நாம் இன்றுவரை அனுபவித்திராத ஒரு முதலீட்டிய வகையை நம் மீது திணிக்கிறது (கட்டுரை 12).
மேற்சொன்ன பட்டியலில் உள்ள பொருள்கள் (subjects) எல்லாம் தளையறு சமூகத்தின் தன்மைகளாகவும் பார்க்கப்படுகின்றன என்பது மிக முக்கியம். இது எப்படி சாத்தியமாயிற்று? இதற்கு விடைகாணும் முன், முதலில் தளையறு சமுதாயம் என்றால் என்ன? அந்த கருத்தியல் உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலைதான் என்ன? என்பதைப் பார்க்கலாம்.
இதற்கு கார்ல் பாப்பரை தெரிந்துகொள்ள வேண்டும். ஆஸ்திரியாவில் 1902ஆம் ஆண்டு பிறந்த கார்ல் பாப்பர் என்ற யூதர், நாஜிக்களின் கொடுமையின் காரணமாக சிறுவயதிலேயே பிரிட்டனுக்கு குடியேறுகிறார். அங்கே, ஒரு அரசியல் தத்துவவாதியாக உருவெடுக்கும் பாப்பர் 1945இல் எழுதி பிரபலப்படுத்திய [The Open Society and its enemies](https://monoskop.org/images/6/6d/Popper_Karl_The_Open_Society_and_its_Enemies_The_High_Tide_of_Prophecy_Vol_2_1st_ed.pdf) என்ற ஆய்வுப் புத்தகத்தின் வழியாக பிரபலமாக்கப்பட்ட கருத்தாக்கமே தளையறு சமுதாயம் (இக்கருத்தாக்கத்தை முதலில் எழுதியவர் ஹென்றி பெர்க்சன் என்னும் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி).
நாஜிக்களின் கொடுமைகளை அனுபவித்தும், சோவியத் பாணி கம்யூனிசத்தின் கொடுமைகளைப் பார்த்தும் / கேட்டபடியாலும் – பாப்பருக்கு அதிகாரக் குவிப்புள்ள அரசுகளின் மேல் நம்பிக்கை கிடையாது. அதிகாரம் குவிந்திருக்கும் அரசு மக்களின் தனித்துவத்தை நசுக்கும்; பின்னர் அதுவே யதேச்சதிகாரத்துக்கு (ஹிட்லரின் நாஜி அரசு, சோவியத் பாணி ஸ்டாலின் அரசு) வழிவகுக்கும் என்பதில் தீர்மானமாக இருந்தார்.
ஒரு அரசியல் தத்துவவாதியாக, மக்கள் நேரடியாகப் பங்கெடுக்கும் ஏத்தினீய ஜனநாயகத்தை (Athenian democracy) ஆதரித்த கார்ல் பாப்பர் – ப்ளேட்டோவின் தத்துவ அரசனை (Philosopher king) நிராகரித்தார்.
ப்ளேட்டோ அறிமுகப்படுத்தும் ‘தத்துவ அரசன்’ கருணை உள்ளம் கொண்டவன்: தனது குடிகளின் மேல் அன்பு செலுத்துகிறவன்; அவர்களின் அறம் மற்றும் பொருள் முன்னேற்றத்துக்காக தலைமை தாங்கக் கூடியவன். ப்ளேட்டோ ‘குடியரசு’ புத்தகத்தில் முன்வைக்கிற சமூக மாற்றங்களுக்கான அலசல்களை ஏற்றுக்கொள்கிற பாப்பர், தத்துவ அரசனுக்கு உள்ள கட்டற்ற அதிகாரம் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். ஒருவேளை, ப்ளேட்டோ என்ற தத்துவ ஞானி, தன்னை அரசனாக்க முயன்ற ஒரு முயற்சியோ என்றுகூட கேள்வியெழுப்புகிறார். தத்துவ அரசனாக இருந்தாலும்கூட, அந்த அரசனிடம் வந்துசேரும் கட்டற்ற அதிகாரக் குவிப்பு ஒரு நாட்டை யதேச்சதிகாரத்துக்கே கொண்டுசெல்லும் என்று எழுதினார்.
இதனடிப்படையிலேயே, கார்ல் மார்க்ஸ் முன்வைக்கிற அரசின் தன்மைகளையும் கார்ல் பாப்பர் நிராகரிக்கிறார். மார்க்ஸின் (அல்லது சோவியத் பாணி) கம்யூனிச அரசமைப்பும், நாஜிக்களின் அரசும் – தங்களை உன்னத நிறுவனமாக கட்டமைக்கின்றன. தம் மக்களை காப்பாற்றக்கூடிய ஒரே தேவ அமைப்பாக தங்களை முன்னிறுத்துகின்றன.
அதுமட்டுமல்ல, தத்தம் கருத்தாக்கமே மனித குலத்தின் உன்னத முன்னேற்றத்துக்கு உதவும் என்ற பரிசீலிக்கப்படாத ‘உண்மையை’ நிறுவுகின்றனர். வெகு விரைவிலேயே, இந்த ‘உண்மை’ குடிமக்களின் மேல் திணிக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் மேல் சித்திரவதை கட்டவிழ்த்து விடப்படுகிறது. எனவே, ஒரு மனிதனின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தளைகளற்ற அரசு அவசியம் என கார்ல் பாப்பர் வாதிடுகிறார்.
தளையறு சமுதாயம் (Open Society) என்ற கருத்தாக்கம், மார்க்சீயத்துக்கு எதிரானது என்பது மிக முக்கியம். பாப்பரின் தளையறு சமூகத்தை இன்றைய நவ தாராளவாதம், சுதந்திரவாதத்தின் கூறுகளோடு ஒப்பிட முடியும் என்றாலும் – சந்தைப் பொருளாதாரத்தையோ, தாராளவாதத்தையோ முன்னிறுத்துவதற்காக தளையறு சமுதாயம் என்ற கருத்தாக்கத்தை கார்ல் பாப்பர் உருவாக்கவில்லை என்பதே உண்மை.
கார்ல் பாப்பரின் மாணவரான ஜார்ஜ் ஸொரோஸ், பாப்பரைப் போலவே நாஜிக்களின் கொடுமையால், தான் பிறந்த ஹங்கேரியிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்த ஒரு அகதி. அப்போது அவருக்கு பதினேழு வயது. பின்னர், லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸில் பாப்பரின் மாணவராக இருந்து அரசியல், பொருளாதாரம் பயின்றார். நிதிப் பொருளாதார சந்தை வர்த்தகத்தில் பெரும் வித்தைக்காரர். சமீபத்திய சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 25 பில்லியன் அமெரிக்க டாலர்.
ஒரு நாட்டின் பண மதிப்பின் ஏற்றத்தாழ்வை முன்கூட்டியே ஊகித்து, அதற்குத் தகுந்தாற்போல அந்நாட்டின் பணத்தை முன்னரே ஒத்துக்கொண்ட விலையில் விற்பது உலக அந்நியச் செலவாணி சந்தையில் ஒரு பெரிய சூது. ஸொரோஸ் இந்தச் சூதில் ஒரு விற்பன்னர்.
இந்தச் சூதில் விற்பதாகச் சொல்லப்படும் தொகை யாரிடமும் இருக்காது என்பது முக்கியம். கமிஷனின் அடிப்படையில் விற்பதாக உறுதி அளிப்பவர் ஒரு வங்கியையோ, செலாவணி புரோக்கரையோ பணவசதி செய்து கொடுக்க வைப்பார். ஆக, ஒரு நாட்டின் கரன்சியை ‘விற்பவரோ’ எந்தவிதமான கைக்காசும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கரன்சியை விற்பார்.
இப்படித்தான் ஸொரோஸ், 1990களில் பிரிட்டிஷ் பவுண்டுக்கு ஏற்படப்போகிற வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்து 1 பில்லியன் பவுண்டு சம்பாதித்தார். பின்னர், 2013ஆம் ஆண்டு [ஜப்பானிய யென்னை வைத்து சூதாடி 4 பில்லியன் சம்பாதித்தார்](https://www.forbes.com/sites/afontevecchia/2014/03/06/how-george-soros-made-4b-in-2013-short-the-yen-bet-against-bill-ackman/#4195dd7dc765).
பாப்பரின் அரசியல் தத்துவங்களால் இளம் வயதிலேயே ஈர்க்கப்பட்ட ஸொரோஸ், பின்னாளில் ஓப்பன் சொசைட்டி ஃபவுண்டேஷன் என்ற பன்னாட்டு நிறுவனத்தைத் தொடங்கினார். பங்குச் சந்தைகளில் சம்பாதித்த பணத்தில் ஒரு பெரும்பகுதியை தளையறு சமூகப் பணிகளுக்கு செலவிட்டு வருகிறார். சோவியத் கம்யூனிசத்தின் பிடிகளில் இருந்த ஐரோப்பிய நாடுகள், ஜனநாயகப் பாதைகளுக்குச் செல்ல உறுதுணையாக இருப்பதற்காக ஓப்பன் சொசைட்டி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கம்யூனிச நாடுகள் எல்லாம் மறைந்தபின்னர் தளையறு சமுதாயத்தின் தேவை என்ன? சந்தைப் பொருளாதாரம்.
முதலீட்டியமும் தளையறு சமூகத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை – ஒரு பொருளாதார மாணவராக, ஸொரோஸ் ஏற்றுக்கொள்கிறார்; எச்சரிக்கையும் செய்கிறார். இன்றைய நிலவரத்தின்படி, தளையறு சமூகத்துக்கான சவால்கள் கம்யூனிச நாடுகளிடமிருந்து வராது எனவும்; சந்தைகளே உருவாக்கும் எனவும் எச்சரிக்கிறார். இருந்தபோதிலும் சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைகளை நாம் மாற்றுவது ஜனநாயகத்துக்கும், குடிமக்களின் அடிப்படைச் சுதந்திரத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றே வாதிடுகிறார். ஆக, சந்தைகளில் மாற்றம் ஏற்படுத்தி சந்தைகளை மேம்படுத்த வேண்டுமே தவிர அவற்றை நிராகரிப்பது தளையறு சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் என்றே ஸொரோஸ் பரிந்துரைக்கிறார்.
தளையறு சமுதாயம் தழைத்திட வற்றாத வளங்கள் தேவை. 24 மணி நேர பங்குச் சந்தைகள், தகவல்தொடர்பு தொழில்நுட்பம், முதலீட்டியம், உலகமயமாக்கல் ஆகியன இவ் வளங்களின் ஊற்றுக்கண். தாராளவாத உலகில், இவ் வளங்களின் பயன்களை தனி மனித சுதந்திரத்தோடும், உரிமைகளோடும் பிணைத்தாகிவிட்டது.
ஆனால் தளையறு சமுதாயம் என்ற கருத்தாக்கம் தனி மனித சுதந்திரத்தை கட்டிக்காக்கிறது என்ற வாதம் எழுப்பப்படுமானால் உடனடியாக இரண்டு கேள்விகள் எழுகின்றன: யாருடைய சுதந்திரம், யாரிடமிருந்து சுதந்திரம்?
தளையறு சமுதாயம் என்பது வானில் இருந்து குதித்து வருவதல்ல. ஒரு யதேச்சதிகார வர்க்கத்தின் தன்மைகளை விமரிசிப்பதால், போராடுவதால் ஏற்படுகிற ஒரு எதிர்வினை. எனவே, சுதந்திரம் என்னும் போராட்டம் நடைபெற ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதக் குழுக்கள் இன்றியமையாதது.
கார்ல் பாப்பரின் சுதந்திரம்கூட நாஜிக்களுக்கும், சோவியத் கம்யூனிசவாதிகளுக்கும் எதிராக கட்டமைக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, தளையறு சமூகத்தால் கிடைக்கும் தனிமனித சுதந்திரம் என்பது மனிதக் குழுக்களுக்கு இடையே ஏற்படுகிற போராட்டம், வாதம், வாதப்பிரதிவாதம் சார்ந்தது. தளையறு சமுதாயம் ஒரு கற்பனையுலகல்ல (not an utopia). சாவி வைத்து மூடிய கதவுகளைத் திறப்பதுபோல தளையறு சமூகத்தைத் திறந்துவிட முடியாது. அது, சமூகத்தின் சமமின்மையை சரி செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கிற ஒரு கருத்தாக்கத் தளம். அவ்வளவே.
ஆனால் தளையறு சமூகத்தின் தனிமனித சுதந்திரங்களும், உரிமைகளும் கடந்த 50 ஆண்டுகளாக சந்தையால் நிரப்பப்படுவதைப் போன்ற ஒரு மாயை வெற்றிகரமாக உருவாகிவிட்டிருக்கிறது. குறிப்பாக அரசியல் சுதந்திரத்துக்கும், முதலீட்டியத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட செயற்கையான தொடர்பை நாம் அனைவரும் ஏதோ ஒரு தளத்தில் ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்கான விலையே வலதுசாரிகளின் எழுச்சி அல்லது இடதுசாரிகளின் தோல்வி. இதன் விளைவாகவே, நடுத்தர வர்க்கத்தினர் வலதுசாரிகளை தேடிப்போகும்நிலை – இந்தியா உள்பட – பல நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. நலிந்த மக்களோ, தங்களது அடையாளங்களைப் பேசும் சமூக அரசியல் இயக்கங்களை நாடுகின்றனர்.
இப்படியெல்லாம் பத்தி பத்தியாக குறைபட்டுக் கொள்வதற்குப் பதில், உலகளாவிய சந்தை சார்ந்த முதலீட்டியத்துக்கு என்னதான் மாற்று என்று கேட்டால், அதற்கான பதில் தயாராக யாரிடமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் ஒன்று நிச்சயம், நான் ஏற்றுக்கொண்டிருக்கும் கருத்தாக்கங்களை கேள்வி கேட்பதே இதற்கான ஆரம்பமாக நான் பார்க்கிறேன்.
உதாரணமாக குடிமக்களின் சுகாதாரம், உடல் நலத்தை அரசு ஏன் ஒரு முக்கியப் பிரச்சினையாக எடுத்துக் கொள்வதில்லை? வரி வசூலிக்கும் அரசின் தலையாய கடமையாக அது ஏன் இல்லை என்று சம்பந்தப்பட்ட நாடுகளில் நலிந்தோர்களே கேள்வி கேட்பதில்லை? குடிமக்களின் உடல்நலம் அடிப்படையில் ஒரு அரசியல் பொருளல்லவா? அது எப்படி ஒரு முதலீட்டியப் பொருளாகியது?
அமெரிக்காவில் ஒபாமா கேர் என்ற ஏழை மக்களைப் பாதுகாக்கும் ஒரு பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டுவந்தபோது, சாமானிய கீழ்த்தட்டு உள்ளிட்ட நடுத்தர அமெரிக்க மக்கள் ஏன் எதிர்த்தார்கள்? ‘இது ஒரு கம்யூனிசத் திட்டம். தளையறு சமூகத்துக்கு எதிரான திட்டம். வெற்றிகரமாக சம்பாதித்து வரும் குடிமகனின் பொருளீட்டும் உரிமையைப் பறிக்கும் திட்டம்” என்று ஏன் கோபப்பட்டார்கள்? இது கேள்வி எழுப்பும் நேரம். நமது அரசியலின், பொருளாதாரத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் நேரம்.
அப்படி கேட்காதவரையில் அமெரிக்கா போன்ற முன்னேறிய தளையறு சமூகத்தில் – ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஒரு கறுப்பர் அதிபராகலாம். மறுமுறையும் இன்னொரு கறுப்பர் மற்றொரு நூறு ஆண்டுகளுக்குள் அதிபராகலாம். அதுவரையில், ஒபாமா என்ற கருப்பர் அதிபரானது அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட தற்செயலான – ஆனால் அற்புதமான – விதிவிலக்கு. ஒபாமா அதிபரானது அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட ஒரு பிறழ்வு. ஆனால் ட்ரம்ப் அதிபரானது அமெரிக்காவின் இயல்பு நிலை.
===============
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
கட்டுரை 8: நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை
கட்டுரை 9: பொய் செய்திகளின் மூலம்
கட்டுரை 10: இணையமும் பொய் செய்திகளும்
கட்டுரை 11: இணையத்தின் கட்டுமானச் சாய்வுகள்
கட்டுரை 12: இணையம், தகவல்தொடர்பு முதலீட்டியம், பன்மைத்தன்மை
கட்டுரை 13: இதுவரை – முரளி சண்முகவேலன்