கட்டுரை 11: இணையத்தின் கட்டுமானச் சாய்வுகள்
உலகெங்கும் – இணையம் (the Internet) பற்றிய பொதுப்புத்தியானது தமிழ்ப்படத்தில் இடைவேளைக்கு முன் வரும் கூட்டுக் குடும்பத்தைப்போல் மிகவும் மகிழ்ச்சியானதாக உள்ளது. அரசியல், தகவல், பேச்சு சுதந்திரத்தின் தளமாக இணையத்தை நம்மில் பெரும்பாலானோர் ஆராதிக்கிறோம். இவற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இடைவேளைக்குப்பின் வரும் சோக சினிமாபோல, இணையத்தின் மறுபக்க இடர் நம்மை வியாபித்தவண்ணம் இருக்கிறது.
அடுத்த வாரக் கட்டுரைகள் இணையம் என்பது அடிப்படையிலேயே ஒரு சார்பானது (intrinsically biased) என்பதை விளக்க முயற்சிக்கிறது. பொய் செய்தி பற்றி அதிகம் விவாதிக்கும் இந்த நேரத்தில், இணையத்தின் கட்டமைப்பிலேயே (infrastructure) இந்தப் பிரச்சினைகள் உள்ளடங்கி இருப்பதை நாம் தெரிந்துகொள்வது அதன் தன்மையையும், தாக்கங்களையும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
இணையம் என்னும் கருவி (tool), தொழில்நுட்பம் (technology), கட்டுமானம் (hard infrastructure) – முதலீட்டியத்துக்கு துணைநிற்கும் ஒரு கருவி என்பதையே இங்கு விளக்க முயற்சிக்கிறேன்.
தகவல் தொடர்பு முதலீட்டியத்தின் (communicative capitalism) அடிப்படையில் இணைய பயன்பாட்டாளர்கள் அனைவரும் நுகர்வர்களே. எனவே பயன்பாட்டாளர்கள் இணையத்தை ஜனநாயக ஆயுதமாகப் பார்ப்பது என்பதை முதலீட்டியத்துக்கும் அரசுகளுக்கும் அது சாதகமாக இருக்கும் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதே என் வாதம். அதாவது, முதலீட்டியத்துக்கும் அரசின் அதிகாரத்துக்கும் எதிராக – இணையத்தையும், சமூக வலைதளங்களையும் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால் அவை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
எடுத்துக்காட்டாக, உலகெங்கும் ஒரு காலத்தில் ஆராதிக்கப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சின் இணையதளத்தை ஒரே நாளில் அமெரிக்கா, ஐரோப்பிய அரசுகள் முடக்கின. விக்கிலீக்ஸின் தளங்களை நிர்வகித்துவந்த அமேசன் சர்வர்களை, அமெரிக்க அரசு மூடச் சொன்னது; அமேசன் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் விக்கிலீக்ஸை விரட்டியடித்தது.
அதுமட்டுமல்ல; அமெரிக்க-ஐரோப்பியக் கண்டங்களில் உள்ள பேமெண்ட் கேட்வே சேவைகளை (payment gateway services – இணையம் மூலம் நிதிபரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களின் சேவைகள்), விக்கிலீக்ஸுக்கு தரக்கூடாது என அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் இணையம்வாயிலாக யாரும் ஜூலியனின் வழக்கு செலவுக்கு நன்கொடைகளை அனுப்ப முடியாமல் போனது. இணையத்தின் மேல் தனக்குள்ள அதிகார கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி ஜூலியனின் அரசியல் களப்பணியை அமெரிக்க அரசு ஒரே நாளில் முடக்கியது. இப்படி நிதிப்பரிவர்த்தனையை நிறுத்தமுடிந்ததற்குக் காரணம், உலகின் முக்கியமான இணையவழி நிதிப்பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே (சிறிது ஐரோப்பாவில்) உள்ளன. அந்நிறுவனங்களுக்கு தகவல் சுதந்திரமெல்லாம் ஒரு பொருட்டல்ல.
இந்த உண்மையையும், இணையத்தில் வேரூன்றியிருக்கும் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப சார்புநிலையையும் புரிந்துகொள்ளும்போது அவற்றின் சமூக, அரசியல் தாக்கங்களையும், அவற்றின் நோக்கங்களையும் நாம் சரியாக மதிப்பிட இயலும்.
இதைப் புரிந்துகொள்ள, இணையம் பற்றி நமக்கிருக்கும் சில பொதுப்புரிதல்களைப் பார்ப்போம்:
⦁ இணையத்தின் வருகைக்குப் பின் தகவல் சுதந்திரமானது மேம்பட்டு எந்த அரசினாலும் எளிதாகக் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையை அடைந்திருக்கிறது.
⦁ இணையத்தின் தொழில்நுட்ப வடிவமானது நாம் ஒவ்வொருவரையும் கிட்டத்தட்ட ஒரு நடமாடும் ஊடகமாகவே (mobile broadcaster) மாற்றியிருக்கிறது.
⦁ சமூக வலைத்தளங்களை சாமானியப் பயனர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அதைத் தங்களின் குரலாக மாற்றியதனாலேயே அரபு வசந்தம், வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு (Occupy Wall street) போன்ற மக்கள் எழுச்சிகள் சாத்தியமாயின. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
⦁ அவ்வளவு ஏன் – சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கெதிரான நீதிமன்றத்தின் தடையைக் கண்டித்து தமிழக மாணவர்களால் நடத்தப்பட்டதை எழுச்சி எதிர்ப்புக் குரல் வாட்ஸாப், மொபைல் ஃபோன்கள் மூலமே சாத்தியமாயிற்று.
⦁ இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோரின் தேர்தல்களிலும்; ப்ரெக்ஸிட் கருத்துக்கணிப்பிலும் மற்றும் பல தேர்தல்களின் முடிவுகளிலும் இணையத்துக்கு பெரும்பங்கு இருக்கிறது.
இப்படிப்பட்ட கருத்துகளை இணையப் பயன்பாட்டாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், கருத்து உற்பத்தி செய்பவர்கள், உலக / தமிழ் இலக்கிய அறிவுசீவிகள் எனப் பல ரகத்தினரும் ஒரே குரலில் கூறிவருகின்றனர்.
அதாவது, சமூக வலைதளங்களை சமூக அரசியல் மாற்றங்களுக்கான ஒரு கருவியாக பயன்பாட்டாளர்கள் உபயோகித்து வருகிறார்கள் – என்பதே இதன் சாரம். இதில் ஓரளவு உண்மை உள்ளதை மறுக்க முடியாது.
பயன்பாட்டாளர்களாகிய நமக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேறு ஒருவரை தொடர்புகொள்வது மிக இலகுவாகிவிட்டது. வாட்ஸப்பின் மூலம் ஒத்த கருத்துகளை ஓரிடத்தில் சேர்ப்பது அல்லது ஒருங்கிணைப்பது என்பது எளிதாகிறது. தகவல் தொழில்நுட்பமானது நேரத்தையும் வெளியையும் (time and space) சுருக்கிவிட்டது.
தகவல் தொழில்நுட்பம் நம்மை தொடர்ந்து பிணைப்பில் (networks) வைத்திருப்பது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கிலியைத் தருகிறது என்பதிலும் உண்மை இருக்கிறது. இதனாலேயே, பல்வேறு அரசுகள் மக்களின் எதிர்ப்பை அடக்க, மொபைல் ஃபோன் இணைப்பைத் துண்டிக்கும் முடிவை எடுக்கின்றன. தை எழுச்சி களத்தில் ஜாமர்கள் பொருத்தப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் இவையெல்லாம் நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இந்த வாரத்தில் நான் முன்வைக்க விரும்புவது இணையமும், சமூக வலைதளங்களும் இதுவரையிலும் நாம் கண்டிராத, அனுபவித்திராத ஒரு முதலீட்டியத்தை நம்மீது திணிக்கிறது என்பது பற்றியதாகும்.
இணையத்தின் முதலீட்டியம் அவற்றின் கட்டுமானத்திலிருந்தே தொடங்குகிறது. அக்கட்டுமானம் ஒரு எஃகு கோபுரம் போன்றது. அது, பல அடுக்கு நிலைகளானது. பயன்பாட்டாளர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தை, இணையம் வழங்குவதுபோல் தோற்றமளித்தாலும் அடிப்படையில் இணையத்தின் கட்டுமானமானது அதை நிர்வகித்து வரும் முதலாளிகளுக்கே ஆதரவானது, சொந்தமானது. இப்படிச் சொல்வதால், இணையம் ‘ஒரு நச்சு – உபயோகிக்காதீர்கள்!’ என்று சொல்லவில்லை. ஆனால் பொதுப்புத்தியில் இணையம் பற்றி இருந்து வருகிற ‘சுதந்திரத்தனம்’ பற்றிய நம்பிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றே கூற விரும்புகிறேன்.
இதைப் புரிந்துகொண்டால் அமெரிக்க, ஐரோப்பிய தேர்தல்களில் பெரும்பங்கு வகித்ததாக கூறப்படும் இணையத்தின், சமூக வலைதளங்களின் உண்மை நிலையை, அரசியலை நாம் புரிந்துகொள்ள முடியும். அது மட்டுமல்ல; இணையத்தின் முதலீட்டியத்தன்மைகளானது ஒருபோதும் மக்கள் புரட்சிக்கு வித்திடாது. சுருக்கமாக – ட்வீட்டுகளால் புரட்சி நடக்காது.
எனவே, சமூக வலைதளங்களின்மூலம் புரட்சி கொண்டுவரலாம் என்று நம்புவதும் – முதலீட்டியமானது சோஷலிசத்தை வளர்த்தெடுக்கும் என்று நம்புவதற்கு ஒப்பானது.
இணையம் என்ற ராணுவத் தொழில்நுட்பம்
இணையத்தின் தன்மைகளையும், அதன் வீச்சையும் பகுத்து புரிந்துகொள்ள அவற்றின் தொடக்ககால வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். இணையம் ஒரு அமெரிக்க ராணுவத் தொழில்நுட்பம்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பமானது 1965க்குப் பிறகு அர்பாநெட் [ARPANET](http://www.livinginternet.com/i/ii_arpanet.html) எனப்படும் பிணைப்புத் தொழில்நுட்பம் (networked technology) [எம்ஐடி-யின் உதவியோடு உருவாக்கப்பட்டது](http://www.livescience.com/20727-internet-history.html). இச்சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணையங்கள் புழக்கத்தில் இருந்தன. நாம் உபயோகிக்கும் டிசிபி / ஐபி என்று நெறிப்படுத்தப்பட்ட இணையம் (TCP /IP protocol) 1973 வாக்கில் தொடங்கியது. ஆனால் அமெரிக்க ராணுவம் தற்போது உபயோகித்துவரும் இணையமானது நாம் உபயோகிக்கும் சிவில் இணையத்தின் தன்மைகளிலிருந்து வேறுபட்டது.
ஆரம்பகாலத்தில் அமெரிக்க இராணுவத்தால் உபயோகிக்கப்பட்ட இணையத் தொழில்நுட்பம் இப்போது வளர்ச்சியடைந்து உருமாற்றமடைந்து எல்லோராலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இதன்விளைவாக, இராணுவத்தன்மைகள் இன்றளவிலும் சிவில் இணையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இணையத்தின் கட்டுமானம் அதிகாரப்படிகளைக் கொண்டது. இணையத்தின் அதிகாரப்படிகள் ஒரு கோபுரம்போல. பயன்பாட்டாளர்கள் கீழே சந்தையில் இருப்பதுபோல மகிழ்ச்சியாக இருந்தாலும், கலசத்தின் அதிகாரம் மிக முக்கியமானது. சுருக்கமாக இணையத்தின் கட்டுமானத்தன்மை சந்தையல்ல, கோபுரம். சந்தை ஒருவிதத்தில் தட்டையானது; அங்கே ஒருவிதமான ஜனநாயகத்தன்மையை எதிர்பார்க்கலாம். கோபுரம் அப்படியல்ல. அதிகாரம் மிக்கது. இந்த உருப்படிவம் Cathedral vs Bazaar model என குறிப்பிடப்படுகிறது.
யார் வேண்டுமானாலும் இணையத்தை உபயோகிக்கலாம், அது இலவசம் என்ற ஒரு பிரமை பயனாளிக்கு இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு பெரிய கூட்டமே மிகக் கவனத்துடன் இணையத்தை பல்வேறுவகையில் கட்டமைக்கிறது. இக்கட்டமைப்பு இணையத்தின் முதலீட்டியத்துக்கு அடிப்படையாகும்.
சற்று விரிவாகப் பார்ப்போம்.
உதாரணமாக, மின்னம்பலம்.காம் என்ற இணைய பத்திரிகையின் உரிமையாளராக ஒருவர் இருக்கலாம். ஆனால் அந்தப் பத்திரிகையை மின்னம்பலத்தின் உரிமையாளருக்கு வருடாந்திர வாடகைக்கு கொடுப்பவர் மற்றொருவர். இது ஒரு படி.
மின்னம்பலம் உரிமையாளர் ஒரு வருடம் சந்தா கட்டவில்லையெனில் அதன் உரிமையாளர் அதுவரை மின்னம்பலம் பயன்படுத்திய தளத்தை இழந்துவிடுவார். மேலும் அந்தத் தளத்தில் அவர் இதுவரை வைத்திருந்த தகவல்களை மீட்டெடுப்பது எளிதல்ல. இது மற்றொரு படி.
நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும், உலகில் எந்த இணைய முகவரியையும் நிரந்தரமாக வாங்கிவிட முடியாது. இது இன்னொரு முக்கியமான படி.
தகவல்தொடர்பு முதலீட்டியத்தில் இது பால பாடம்.
மென்பொருள், காப்புரிமை ஆகிய எல்லாவகையான இணைய மென்/வன்பொருள்களுக்கு நிரந்தர உரிமை (ownership) கிடையாது. இது இன்னொரு அதிகாரப் படி.
நான் உபயோகிக்கும் ஆப்பிள் மடிக்கணினியில் உள்ள தகவல்கள் எல்லாம் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் கிடங்கில் (warehouse) சேமித்து வைத்திருக்கிறேன். அந்நிறுவனம் நினைத்தால் இதை ஒரே நாளில் அழிக்க முடியும். உங்கள் அலைபேசியும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. தகவல் தொடர்பு முதலீட்டியம் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது மீண்டும் மின்னம்பலத்துக்கு வருவோம்.
மின்னம்பலம் டாட் காமிற்கு உள்ளூரில் தளம் ஏற்படுத்திக் கொடுப்பவர் ஒருவர். ஆனால் டாட் காம் என்ற ஒட்டுமொத்த தளத்துக்கு உலகத் தலைமையகம் ஒன்று உண்டு. வெரிசைன் [www.verisign.com] என்ற ஒரு அமெரிக்க நிறுவனமே உலகமெங்கும் இயங்குகிற டாட். காம் தளங்களுக்கு நிர்வாகப் பொறுப்பாளி. இது மற்றுமொரு முக்கியமான அதிகாரப் படி.
வெரிசைனுக்கு இந்த பொறுப்பை ஒப்படைத்த ஐகான் (ICANN)[www.icann.org] என்னும் நிறுவனம் உலகமெங்கும் உள்ள இணையதளங்களை, அதன் பயன்பாட்டை ஒருங்கிணைக்கும் ஒரு லாப நோக்கற்ற நிறுவனம். இந்த பன்னாட்டு நிறுவனத்தின் விதிகளோ, கலிஃபோர்னியா மாகாணத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதாவது, ஐக்கியநாட்டு சபையில் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு கிராமத்து பஞ்சாயத்து விசாரிப்பது போல. இது இன்னொரு படி.
இதுபற்றிய அடிப்படைகளை மேலும் தெரிந்துகொள்ள விரும்புவோர், நான் பல வருடங்களுக்குமுன்னர் எழுதிய ஒரு விளக்கக் குறிப்பைப் [பார்க்கவும்](https://www.academia.edu/8317772/Who_rules_the_Internet_2005_?auto=download).
இரு ஒருபுறமிருக்க, அமெரிக்க தொழில் வர்த்தகத் துறை (US Department of Commerce) ஐகானோடு பல ஆண்டுகளுக்குமுன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அமெரிக்க தொழில் வர்த்தகத் துறையே உலகெங்கும் உள்ள இணையத்தின் ஆதார முகவரிகளை (root zone files) நிர்வகித்து வருகிறது. இது, இன்னொரு அமெரிக்க அரசியல் அதிகாரப் படி.
அதாவது, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் மின்னம்பலம்.காம் என்று டைப் செய்யும்போது, டாட் காம் என்பதை உங்கள் கம்ப்யூட்டர் புரிந்துகொள்ள இந்த ஆதார முகவரிகள் தேவை. எளிமையாகச் சொல்லவேண்டுமானால் கிட்டத்தட்ட தபாலில் எழுதப்பட்டிருக்கும் பின்கோடு போல. இந்த பின்கோடுகளை நிர்வகித்தும் அதற்கான பெட்டிகளை நிர்வகித்து வருவதும் அமெரிக்க அரசாங்கமே.
இந்த அதிகாரத்தை விட்டுத்தருவதாகவும் உலகம் அனைத்துக்கும் இணையத்தை பொதுவானதாக மாற்றுவதற்கு ஒத்துழைக்கப்போவதாகவும் ஒபாமா அரசாங்கம் [முடிவெடுத்தது](http://www.zdnet.com/article/analysis-what-exact-control-over-the-internet-is-the-us-giving-up-and-is-it-bad-or-not/). ஆனாலும் இது [முடிந்தபாடில்லை](http://www.bbc.co.uk/news/technology-37527719).
இந்த இணைய ஏகாதிபத்தியத்துக்கு காரணம், இணையம் என்பது அமெரிக்க ராணுவத்தின் கண்டுபிடிப்பே என்பதாகும். இந்த வரலாற்றுக் காரணங்களால் இணையம் என்பது கிட்டத்தட்ட அமெரிக்கர்களின் பிடியிலேயே இருக்கிறது என்றால் மிகையல்ல. அமெரிக்க அரசியலிலும் சரி, சிவில் சமூகத்திலும் சரி – இணையத்தின் மீதான அதிகாரத்தைக் கைவிடுவதற்கு பெரும் எதிர்ப்பு உள்ளது.
இணையம் மேலெழுந்தவாரியாக ஜனநாயகத்தன்மைகளோடு இருப்பதாகத் தெரிந்தாலும், அவற்றின் சீரிய கூறுகள் முதலீயட்டியத்துக்கு துணைபோவதே என்பதை நான் இங்கு சொல்ல வருகிறேன். இது இணையக் கட்டுமானத்தில் உள்ள சார்புத்தன்மை (infrastructural bias) பற்றியதாகும்.
மீண்டும் ஒருமுறை: பொய் செய்திகள் குறித்து சூடான விவாதங்கள் நடைபெற்றுவரும் இந்த வேளையில் – இணையத்தின் அடிப்படை தொழில்நுட்பப் பண்புகளே சமமின்மையை கூட்டுவதாகவும், பன்மைத்தன்மைக்கு எதிரானதாக இருப்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.
அடுத்த வாரம், சமூக வலைதளங்களில் நீங்கள் பார்க்கும் செய்திகள் அனைத்தையும் உங்களுக்காக தொழில்நுட்பம் எவ்வாறு முடிவு செய்கிறது என்பதைப் பார்ப்போம். அது மட்டுமல்ல, இணையம் ஒரு பன்மைத்தன்மை வாய்ந்த ஊடகம் என்பதே ஒரு பிரமை என்பதையும் பார்ப்போம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
கட்டுரை 8: நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை
கட்டுரை 9: பொய் செய்திகளின் மூலம்
கட்டுரை 10: இணையமும் பொய் செய்திகளும்