கட்டுரை 10. இணையமும் பொய் செய்திகளும்
பொய் செய்திகள் பற்றிய மேற்கத்திய ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்ற விவாதங்களையும் அது ஏற்படுத்தும் பொதுப்புரிதலையும் முதலில் பார்ப்போம். இத்தொடரைப் படித்து வருபவர்களுக்கு பின் வரும் தகவல்கள் ஒரு சிறிய ‘இதுவரை’ குறிப்பாக இருக்கும்.
டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்குப் பின்னர் இணையம் பற்றிய ஒரு ஊடகக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இணையம் என்ற தொழில்நுட்ப தகவல் ஊடகம் மக்களின் செயல்பாட்டினை மாற்றும் திறன் கொண்டது என்பதே அக்கோட்பாடு. இந்தக் கோட்பாட்டிற்கு ஆதரவாக இரண்டு நிகழ்வுகள் முன்நிறுத்தப்படுகின்றன.
ஒன்று: இணையத்தில் பொய் செய்திகள் அதிகமாகி விட்டன. இணையப் பயனாளர்கள், பிரபலங்கள், செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், நிபுணர்கள், சித்தாத்தங்களின் அடிப்படையில் இயங்கக்கூடிய குழுக்கள், இணையதள நிறுவனர்கள் ஆகியோர் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகின்றனர்.
இரண்டு: இப்பொய் செய்திகள் மக்களின் எண்ணங்களை மாற்றுகின்றன. இந்த ஊடகத் தாக்கம் குறித்த அனுமானம் (hypothesis on media effects) அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் மீது கூட மிகக்கவனமாகவே முன்வைக்கப்படுகிறது என்பது இங்கே முக்கியம். ஆனால் இணையத்தில் பொய் செய்திகளை மக்கள் நம்பி அதனடிப்படையில் முடிவெடுக்கின்றனர் என்ற கருத்து சமீபத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றி இதற்கு சாட்சியமாக சொல்லப்படுகிறது.
இந்தக் கோட்பாட்டினை முன்வைப்போரும் ஆதரிப்போரும், இதன் பின்நிற்பவர்கள் அமெரிக்க நகரத்து தாராளவாதிகள். உலகமயமாக்கத்தினாலும், தகவல் தொழில்நுட்பத்தாலும் பெரும்பயன் அடைந்தவர்கள். உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் என்று குரல் எழுப்பும் இடதுசாரிகளல்ல, இது முக்கியம்.
ஆனாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய இடதுசாரி ஊடக அரசியல் சிந்தனையாளர்கள் இணையம் உருவாக்கியுள்ள தகவல்தொடர்பு முதலீயட்டியத்தை (communicative capitalism) நாம் இணைய சுதந்திரம் சார்ந்த விவாதப்பொருளாக மாற்றாத வரையில் செய்திகள் பண்டமாவதையும், பொய் செய்திகள் உருவாவதையும் தவிர்க்க இயலாது என்று வாதிடுகின்றனர் (நான் இந்தக் கட்சி). தகவல் தொடர்பு முதலீட்டியம் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம். இப்போது மீண்டும் பொய் செய்தி பற்றிய பொதுப்புத்திக்கு வருவோம்.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகமாகி விட்டன. இந்த செய்திகள் தவறான (பொய்) தகவல்களை பரப்புகிறன. இதனால் வலதுசாரிகளின் அரசியல், அவர்களின் கருத்தாக்கம் வலுவடைந்து வருகின்றன – என்ற கருத்து பரவலாக இப்போது அங்கீகாரம் பெற்று வருகிறது. இதன் விளைவே நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற முடிந்தது என்றும் பண்டிதர்கள் வாதிடுகின்றனர்.
2012-ல் இஸ்ரேலின் விடுதலைக்கும் சுதந்திரத்துக்கும் ஆதரவாக உருவாக்கப்பட்ட [ப்ரெய்ட்பார்ட்](http://www.breitbart.com/) என்ற அமெரிக்க வலைத்தளத்தின் உலா வந்த(ருகின்ற) வலதுசாரி ஆதரவு தகவல்களும், பொய் செய்திகளும் அவற்றின் சமீபத்திய பிரபலமும், வீச்சும் (தாக்கம் என்று நான் சொல்லவில்லை, கவனிக்கவும்) மற்றொரு உதாரணமாக முன்வைக்கப்படுகிறது.
இது தவிர இணையத்தில் வலதுசாரிகளின் இருப்பும், இவர்களின் ஆணாதிக்கம் நிறைந்த மத, இன, நிற வெறிக்கருத்துகள் மேற்குலகில் அதிகமாகி வருகின்றன என்றும் ஊடகப் பண்டிதர்கள் கூறி வருகின்றனர். இது உண்மையே. இது ஐரோப்பிய தேர்தல் ஜனநாயகத்தைப் பாதிக்க துவங்கியிருக்கிறது என தாராளவாதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ப்ரெக்ஸிட்டில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வெற்றிகரமான பொய்ப் பிரச்சாரமும் முக்கிய உதாரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் ப்ரெக்ஸிட்டின் உலா வந்த பொய் செய்திகளின் தன்மை இணையத்துக்கு வெளியிலுள்ள ஐரோப்பிய குடியேறிகளை விரும்ப மறுக்கும் இன அரசியல் என்பதை நான் இதற்கு முன் விளக்கியிருந்தேன்.
இதைத் தொடர்ந்து ஐரோப்பாவில், சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகளுக்கு ஆதரவாக, முஸ்லீம் அகதிகளுக்கு எதிராக பொய்/வெறுப்பு செய்திகள் அதிகரித்தன. எனவே சமூகவலைத் தளங்கள் – குறிப்பாக ஃபேஸ்புக் – பொய் செய்திகளைக் களையும் முயற்சியில் ஈடுபடவேண்டும் எனவும், நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், ஃபேஸ்புக்கை ஒரு ஊடக நிறுவனமாகக் கருதி அதற்கான பொறுப்புகளோடும் கட்டுப்பாடோடும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தாராளவாதிகளும், ஊடகப் பண்டிதர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
ஃபேஸ்புக்கில் வந்த பொய் செய்திகளாலேயே அமெரிக்கத் தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களித்ததாகக் கூறுவது பிதற்றல், என [முதலில் மார்க் மறுத்தார்](https://www.theguardian.com/technology/2016/nov/10/facebook-fake-news-us-election-mark-zuckerberg-donald-trump). பின்னர் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டார்: பொய் செய்திகள் சமூகவலைத்தளங்களைப் பீடித்திருக்கும் ஒரு முக்கியப் பிரச்சினை என [அவரது நிறுவனம் ஒப்புக்கொண்டது](http://newsroom.fb.com/news/2016/12/news-feed-fyi-addressing-hoaxes-and-fake-news/). பொய் செய்திகளைக் களைவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்போவதாக உறுதி தெரிவித்தார்.
இந்தவருடம் நடக்கவிருக்கும் ஜெர்மன் நாட்டு தேர்தலில் பொய் செய்திகளின் தாக்கத்தால் தேர்தலின் முடிவு சோசலிச ஜனநாயக சக்திகளுக்கு எதிரானதாகவும், நியோ-நாஜிக்கள் உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு ஆதரவாகவும் போய்விடுமே [என்ற அச்சம் எழுப்பப்பட்டிருக்கிறது](https://www.ft.com/content/11410abc-ef6e-11e6-ba01-119a44939bb6). பொய் /வெறுப்பு செய்திகளை பரப்பும், வெளியிடும் சமூக வலைத்தளங்களுக்கு – தங்களுக்கு வரும் புகாரினை 24 மணிநேரத்துக்குள் பரிசீலித்து செய்திகளைத் தடை செய்யாவிட்டால் – [50 மில்லியன் யூரோ வரை அபராதம்](http://www.telegraph.co.uk/technology/2017/03/14/germany-threatens-fine-social-media-companies-50m-hate-speech/) விதிக்கக்கூடும் என அச்சுறுத்தியுள்ளது ஜெர்மானிய அரசு. மார்க், தன் பங்குக்கு, [ஃபேஸ்புக் என்னவெல்லாம் செய்யவுள்ளது என ஒரு அறிக்கை](http://www.bbc.co.uk/news/business-38631847) வெளியிட்டுள்ளார். இதுவே இப்போதைய நிலை.
ஒரு வேளை டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்திருந்தால், பொய் செய்தி குறித்த விவாதங்கள் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்குமா?
பெற்றிருக்காது என்பதே எனது ஊடக அறிவின் ஊகம். ஆனால் இந்த பொய்/வெறுப்பு செய்திகளெல்லாம் தொடர்ந்து இணையத்தில் எப்போதும் போல வலம் வந்து கொண்டிருக்கும் என்பதே உண்மை. எனவே இந்த பொய் செய்தித் தன்மையானது ட்ரம்ப் தேர்தலினால் ஏற்பட்டதல்ல என்பதை முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
பொய் செய்திகள் என்பது செய்திகளைப் பண்டமாக்க துவங்கியதால் ஏற்பட்ட பல்வேறு விளைவுகளில் ஒன்றாகும். செய்திப் பண்டங்கள் குறித்த கோட்பாடுகள், விவாதங்கள் 1940-களில் இருந்தே துவங்கிவிட்டன. ஃப்ராங்க்ஃபர்ட் கோட்பாட்டாளர்கள் அடோர்னொ, ஹொக்கைய்மர் ஊடகங்கள் [பண்பாட்டுத் தொழிற்சாலையாகவே இயங்குகிறது](https://web.stanford.edu/dept/DLCL/files/pdf/adorno_culture_industry.pdf) என்றனர். இத்தொழிற்சாலையில், பண்பாட்டுப் பொருட்கள் (உதாரணம்: அமெரிக்க ஜாஸ் இசை) பண்டமாக்கப்படுவதைக் குறித்து விவரமாக எழுதியுள்ளனர்.
இதனுடைய விரிவாக்கமாகவே நான் பொய் செய்திகளை பார்க்கிறேன்.
பொய் செய்திகளின் தளமான ஊடகங்களும், தகவல் தொழில்நுட்பமும் – அடோர்னோ, ஹோக்கைய்மெர் சொன்னது போல – இடையறாது பண்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஃபோட்டோஷோப் என்ற மென்பொருள், அல்லது உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் உள்ள பட ஃபில்டர்கள் அனைத்தும் தோற்றங்களை பண்டமாக்குவதின் மூலம் ஒருவிதமான் பொய்த் தோற்றங்களை நியாயப்படுத்துகிறது. இங்கே உள்ளே ஒரு [விடியோ](https://www.youtube.com/watch?v=iYhCn0jf46U)வில் வரும் பெண் உண்மையா, பொய்யா
செய்திகளை/பிம்பங்களை மிகைப்படுத்துதல், திரித்துக் கூறுதல், நமது ஃபேஸ்புக் நிலைத்தகவல்களில் இல்லாதவற்றை இருப்பதாக விளம்பரப்படுத்துதல், வதந்திகளை பரப்புதல் இவையெல்லாம் பொய் செய்திகளின் கூறுகளே. ஆனால் இதே பொய் செய்திகள் தனிநபர்களுக்கு அப்பால் பொதுவான அரசியல் முடிவுகளைப் பாதிக்கும் போது தான் இது சமூகச் சிக்கலாகி விடுகிறது.
சற்று விரிவாகப் பார்ப்போம்.
பொய் செய்திகளை நம்மில் பலரும் தினசரி உருவாக்கி பரப்பிக் கொண்டிருக்கிறோம்; பல சமயம் எதிர்வினை புரியாமல் கடந்து செல்கிறோம். பல வாட்ஸப் மீம்கள், ஜோக்குகளெல்லாம் கூட இவ்வகையே.
இந்த பொய் செய்திகள் பரப்பப்பட அவற்றில் உள்ள பொருள் ஏதோ ஒருவகையில் நம்மைத் தொடுகின்றன. இந்த “இறைச் செய்தியை” 15 பேருக்கு அனுப்பாவிட்டல் கேடு நேரிடும் என்ற செய்தி பொய் என்பது அதை அனுப்பிய ஆத்திகருக்கும் தெரியும் என்றே நம்புகிறேன். ஆனால் அதன் பின்னால் இருப்பது வெறியாகிப் போன மத நம்பிக்கை. அதே போல ட்ரம்ப்பின், அல்லது வலதுசாரிகளின் பொய்கள் ஏன் இணையத்தில் – சாமானியர்களால் – பரப்பப்பட்டன என்கிற உளவியல் சார்ந்த அலசல் மிக முக்கியம். செப்டம்பர் 11 யூதர்களின் சதி, அல்லது முஸ்லீம்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமெரிக்க சதி என்ற ஒரு பொய் செய்தியை நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக இணையத்தில் பார்த்து வருகிறேன். அதை நம்பும் பல கல்விமான்களையும் எனக்குத் தெரியும்.
இங்கு தான் அரசியல் ரீதியான பொய் செய்தியின் தாக்கம், ஃபோட்டோஷோப் பொய் செய்தியிடமிருந்து மிகவும் வேறுபடுகிறது.
அரசியல் பொய் செய்திகளின் தளம் தகவல் தொழில் நுட்பம், இணையம். அவற்றின் ஊற்றுக் கண்கள் உலகமயமாக்கல், நிதி பொருளாதாரம், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தினால் ஏற்பட்ட அகதிப் பிரச்சினைகள், தீவிரவாதப் பிரச்சினைகள் – ஆகியவற்றில் உள்ளது. ஆனால் தகவல் தொழில் நுட்பத்தின் வடிவமும், தன்மையும் பொய் செய்திகள் வேகமாகப் பரவிட உதவுகிறது என்பதில் ஐயமில்லை.
அதாவது இன்றுள்ள தகவல் தொழில் நுட்ப வடிவங்களின் படி ஒரு செய்தி உடனடியாக எல்லோரையும் சென்றடைய வாய்ப்புள்ளது (ஆனால் நிச்சயமல்ல). அப்படி சேர்ந்தாலும் அச்செய்தி அனைவருடைய செயல்பாட்டினை மாற்றியமைக்கும் என்பதற்கு எந்த விதமான உறுதியும் கிடையாது.
இதற்கு மூன்று சாட்சியங்கள்:
முதலாவது கோட்பாடு சார்ந்தது: ஊடக ஆய்வில் அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் மக்களின் மீது எந்தளவு தாக்கம் (media effects) கொண்டுள்ளது என்பது பற்றியும், அவற்றின் கோட்பாடு குறித்தும் இது வரையிலும் ஒருமித்த கருத்து இல்லை. இந்தச் சூழ்நிலையில் திடீரென இணையத்துக்கு மட்டும் அந்தத் தாக்கம் வந்துவிட்டது என்ற கோட்பாட்டை ஏற்க, நம்ப எந்த முகாந்தரமும் ஆய்வும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
இரண்டாவது: 2011ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதியன்று நடந்த லண்டன் கலகத்தில் ட்விட்டர், ப்ளாக்பெர்ரி (பிபிஎம்) மெசெஞ்சரின் பங்குகள் மிக அதிகமாக இருந்ததாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது. வெறுப்பு செய்திகள், கலகத் தகவல்கள், எந்தக் கடைகளில் கொள்ளையடிக்க எப்போது வசதி என்ற தகவல்கள் உடனடியாகப் பகிரப்பட்டதாக ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அன்றைய பிரதமர் டேவிட் கேமரூன் தனது தலைமையில், ட்விட்டர், பிபிஎம் நிறுவனத்தாரிடம் கூடிப்பேசி கலவர தேதிகளில் பகிரப்பட்ட செய்திகளை அரசு பார்க்க அனுமதி வேண்டும் என்று கூறினார்.
பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸ், தி கார்டியன் நாளிதழ் சேர்ந்து நடத்திய ஆய்வு கலகம் தொடர்பான 25 லட்சம் ட்வீட்டுகளையும்; அக்கலகத்தின் போது ட்வீட் செய்த ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவு: லண்டன் கலகம் பரவியதற்கும் ட்வீட்டுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே ஆகும். ஆனால் கலகத்திற்குப்பின் லண்டனை சுத்தம் செய்ய வருமாறு லண்டன் வாசிகளை ஈடுபடுத்தியதில் ட்விட்டருக்கு பெரும்பங்கு இருந்ததாக அந்த [ஆய்வறிக்கை](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/image_arc/2017/03/16/1489648898.pdf) சொன்னது
கடைசியாக ஜனவரி மாதத்தில் வெளி வந்த ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் [ஆய்வின் முடிவுகள்](https://web.stanford.edu/~gentzkow/research/fakenews.pdf). மிக அதிக அளவில் பகிரப்பட்ட பொய் செய்தி கூட, ஒட்டு மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் “மிகச் சிறிய” அளவினரையே சென்றடைந்ததாக (தாக்கம் என்பது இங்கு கேள்வியே அல்ல) இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பொய் செய்திகளின் ஆரம்பம், பகிரல்களை பல்வேறு தளங்களின் வழியாக சென்று அதன் போக்குவரத்தை இந்த ஆய்வு கவனித்தது. அதன் படி, ட்ரம்புக்கு ஆதரவாக வந்த பொய் செய்திகள், ஃபேஸ்புக்கில் மூன்று கோடி முறையும், ஹிலரிக்கு ஆதரவாக 80 லட்சம் முறையும் பகிரப்பட்டதாக இந்த ஆய்வு தெரிவித்தது. ஆனால் மிகப் பெருவாரியான அமெரிக்க மக்கள் அதிபர் தேர்தலுக்கான அரசியல் செய்திகளை சமூக வலைத்தளங்களிடமிருந்து பெறவில்லை என்றும் மற்ற ஊடகங்களின் வழியாகவே பெற்றனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எனக்குத் தெரிந்து இந்த ஸ்டான்ஃபோர்ட் ஆய்வைத்தவிர வேறு எந்த ஆய்வும் சமூக வலைத்தளங்களின் உண்மையான தாக்கத்தையோ அல்லது அவற்றின் உண்மையான வீச்சையோ தெளிவாக ஆய்வு செய்யவில்லை. அப்படிச் சொல்லாதவரையிலும், எனது ஊடக ஆய்வின் அடிப்படையிலும் – சமூகவலைத்தளங்களின் வலம் வந்த பொய் செய்திகள் தேர்தல் ஜனநாயகத்தைப் புரட்டிப் போடும் வல்லமை கொண்டது என்ற கூற்றில் எனக்கு நம்பிக்கை ஏற்படப்போவதில்லை.
அப்படிச் சொல்லும் தாராளவாதிகளின் ஆய்வெல்லாம் சித்தாந்த விருப்பத்தின் அடிப்படையில் உள்ளன. பொய் செய்திகள் குறித்த பண்டித அலசல்கள், அச்செய்திகள் எவ்வளவு பேரை எவ்வளவு நேரத்துக்குள் சென்றடைந்தனர் (engagement metrics) என்ற வீச்சு பற்றித்தான் உள்ளனவேயன்றி அச்செய்திகளால் மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக இந்த ஆய்வுகள் உறுதியாகக் கூறவில்லை. ஆனால் இணையத்தின் வழியாகப் பரப்பப்படும் பொய் செய்திகளின் தாக்கங்களும் அவற்றின் ஒட்டு மொத்த வீச்சும் மிகக்குறைவு என்பது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வில் உறுதியாகிறது.
இது தவிர மற்றொரு முக்கியமான ஊடகக் கோட்பாடும் இங்கே தகர்ந்து போகிறது என்பதை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
மேற்கண்ட ஆய்வின் படி பெருவாரியான மக்கள் தேர்தல் செய்திகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பெறவில்லை என்பது தெரிகிறது. அப்படியானால் அவர்கள் தங்கள் தகவல்களை அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களின் வழியாகவே பெற்றிருக்கக்கூடும். இந்த ஊடகங்கள் ஹிலரிக்குத்தான் தங்களுடைய பெரும்பான்மையான ஆதரவை அளித்தது குறித்து நாம் இத்தொடரின்ஆரம்பத்தில் பார்த்தோம். ஆக ஊடகங்கள் அனைத்தும் சேர்ந்து ஹிலரி கிளிண்டனே திறமையான அதிபர் என்ற பிம்பத்தை மக்களிடையே உற்பத்தி செய்ய முயன்று, படுதோல்வி அடைந்துள்ளன. ஊடகங்கள் தங்களின் செய்தித் தயாரிப்பின் மூலமாக, தங்களுக்கு இசைவான அரசியல் கருத்துக்களை மக்களின் மனதில் விதைக்க முடியும் (manufacturing consent) என்ற சோம்ஸிகியின் கோட்பாடு இங்கே மண்ணைக் கவ்வியது ஊடக ஆய்வில் ஒரு மைல்கல் என்றால் மிகையல்ல.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
கட்டுரை 8: நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை
கட்டுரை 9: பொய் செய்திகளின் மூலம்