சிவசேனா கட்சியின் உரிமையையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு அளித்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சிவசேனாவுக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு தலைவர் உத்தவ் தாக்கரே, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை அவசர வழக்காக இன்று (பிப்ரவரி 21) உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கை நாளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. பிப்ரவரி 22 மதியம் 3.30க்கு இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று ( பிப்ரவரி 21) உச்ச நீதிமன்றம் காலையில் தொடங்கியவுடன் உத்தவ் தாக்கரேவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் ஆஜராகி, ‘பிப்ரவரி 17 ஆம் தேதி தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியின் உரிமையையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே வசம் கொடுத்ததற்கு இடைக் காலத் தடை விதிக்கவேண்டும்’ என்று முறையீடு செய்தார்.
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை அடுத்து சிவசேனா கட்சியின் வங்கிக் கணக்கையும், சொத்துகளையும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் கைப்பற்றியிருப்பதால் இதுகுறித்து அவசரமாக விசாரித்து இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார் கபில் சிபல்.
தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரத்தை சட்ட விரோதமாக ஒரு சார்பாகவும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும் பயன்படுத்தியிருக்கிறது என்றும் உத்தவ் தாக்கரேவின் சார்பில் கூறப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், ‘நாளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் உத்தவ் தாக்கரே-ஏக்நாத் ஷிண்டே இடையில் ஏற்கனவே நடைபெற்று வரும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. அந்த வழக்கு விசாரணை முடிந்து இந்த விவகாரத்தை விசாரிப்போம்’ என்று கூறினார்.
உத்தவ் தாக்கரேவின் மனுவில், “தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் சட்ட திட்ட விதிகளில் தலையிட முடியாது. ஆனால் பிப்ரவரி 17 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் முடிவு, சிவசேனா கட்சியின் 2018 அரசியலமைப்பு மற்றும் உட்கட்சி தேர்தல் முடிவுகளில் தலையிடுவதாக இருக்கிறது.
சிவசேனா கட்சியில் நடந்த உட்கட்சித் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது என்றால்… உள்கட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஏக்நாத் ஷிண்டே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு அனுமதிக்கிறது. இது உள்கட்சி ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் முதன்மை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள உச்ச பிரதிநிதித்துவ அமைப்பான பிரதிநிதிகள் சபையில் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் 160 உறுப்பினர்களின் ஆதரவை தாக்கரே பெற்றிருக்கிறார். உண்மையில் தாக்கரே சட்ட மேலவையில் (12 இல் 12) மற்றும் ராஜ்யசபாவில் (3 இல் 3) பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எந்த அடிப்படையில் பெரும்பான்மை ஏக்நாத் ஷிண்டேவுக்கு இருப்பதாக கருத முடியும்?” என்றும் உத்தவ் தாக்கரே தரப்பில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “தேர்தல் ஆணையத்தின் சின்னங்கள் ஆணையின் 15 வது பத்தியின் கீழ் ஒரு கட்சிக்குள் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதைத் தீர்மானிக்க சட்டமன்ற, நாடாளுமன்ற பெரும்பான்மை மட்டுமே பாதுகாப்பான வழிகாட்டி அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றும் உத்தவ் தாக்கரேவின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உத்தவ் தாக்கரேவின் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு நாளை வர இருக்கும் நிலையில்… சிவசேனாவின் உட்கட்சி விவகாரங்கள் அதிமுகவிலும் இருப்பதால் இந்த வழக்கு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
–வேந்தன்
“தமிழை நாம் தொலைத்து வருகிறோம்”: ராமதாஸ்
ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!