கப்பல் மீட்பு அகதிகள்: விசாரணையில் வெளியான புதிய தகவல்கள்!

அரசியல்

பழுதடைந்த கப்பலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையிலிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட 317 பேர் ஒரு கப்பலில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி புறப்பட்டுச் சென்றனர். அந்தக் கப்பல், பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று பழுதடைந்தது.

இதனால் கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது. இதையடுத்து அந்த கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரினர். அவரது கோரிக்கையை ஏற்று, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.

கப்பல் அகதிகள் மீட்பு:

அதன்படி, பிலிப்பைன்ஸ் நடுக்கடலில் மூழ்கும் தறுவாயில் இருந்த அந்தக் கப்பலை, சிங்கப்பூர் அதிகாரிகள் கடந்த நவம்பர் 8ஆம் தேதி மீட்டனர்.

இதுதொடர்பாக நம்முடைய மின்னம்பலத்தில் ’இலங்கை அகதி கப்பல்: சிங்கப்பூர் கடற்படையினர் மீட்பு’ என்கிற தலைப்பில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் அந்த அகதிகள், நவம்பர் 9ஆம் தேதி இரவு, வியட்நாம் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக, அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர் பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ship srilankan tamil refugees

அதில், ”இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்து, மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.

புதிய தகவல்கள்:

அமெரிக்க தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தும் தமிழ் மொழி பேசக்கூடிய பிரதான முகவர் ஒருவரின் உதவியுடன், ஏனைய முகவர்களின் ஒத்துழைப்புடனும் இவர்கள் இவ்வாறு அகதிகளாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்துள்ளனர்.

கனடா செல்வதற்காக 5 ஆயிரம் டாலர்கள் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், மியான்மர் நோக்கிச் சென்ற இலங்கை அகதிகள், அங்கிருந்து கடந்த மாதம் 10ம் தேதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த அந்தக் கப்பலில், அண்மையில் துவாரமொன்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில், கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறது” என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ”வியட்நாம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், “தங்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பிவைத்தால், தற்கொலை செய்துக்கொள்வோம்” என கப்பலில் பயணித்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

ஆதாரை புதுப்பிப்பது அவசியம்: மத்திய அரசு அதிரடி!

மோடி வருகை: தனித்தனியே வரவேற்கும் எடப்பாடி, பன்னீர்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *