மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு முடிவு செய்யப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று (நவம்பர் 23) தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு பாஜக தலைமையிலான ‘என்.டி.ஏ’ கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியும் தீவிரமாக பிரச்சாரம் செய்தது.
மேலும், சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்த பின்பு நடக்கும் தேர்தல் என்பதால், இவர்களுள் எந்த பிரிவினருக்கு அதிக வாக்குகள் குவியும் என்று நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்று கொண்டிருக்கிற வாக்கு எண்ணிக்கையில், என்.டி.ஏ கூட்டணியில் உள்ள பாஜக 127, ஷிண்டே தலைமையிலான சிவ சேனா 56, மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 39 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை உள்ளதால், மகாராஷ்டிராவில் மீண்டும் என்.டி.ஏ வின் ஆட்சி அமைய உள்ளது.
இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில் ” எங்களது கூட்டணிக்கு மாபெரும் வெற்றி தந்ததற்கு மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களது இரண்டரை ஆண்டு கால கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது.
குறிப்பாக எங்களுக்கு வாக்களித்த தங்கைகள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் இந்த தீர்ப்பு எங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது. அதை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்” என்றார்.
மேலும், “மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு முடிவு செய்யப்படும்” என்று ஏக்னாத் ஷிண்டே கூறியுள்ளார்.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோரை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்தினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டாய்லட் போயிட்டு வர்றதுக்குள்ள டெல்லி, நியூயார்க் போயிடலாமா?
ஜார்க்கண்ட் தேர்தல்: ஆட்சியைத் தக்கவைக்கும் ஹேமந்த் சோரன்
நயினார் நாகேந்திரனை சந்தித்தது ஏன்? – எஸ்.பி.வேலுமணி விளக்கம்!