காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும் கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுகின்றனர்.
இதற்காக இருவரும் கட்சிக்குள் தங்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவித் தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாநிலமாக சென்று அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பதுதான் இருவரின் திட்டம்.
இந்த வகையில் நேற்று தனது சொந்த மாநிலமான கேரளாவில் வாக்கு சேகரித்த சசி தரூர் இன்று (அக்டோபர் 6) தமிழக காங்கிரஸ் வாக்காளர்களிடம் வாக்கு கேட்பதற்காக சென்னை வருகிறார்.
இதுகுறித்து நேற்றே தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் கூட்டாளிகளே நண்பர்களே நான் நாளை சென்னை வருகிறேன். இரவு 8 மணிக்கு மாநில காங்கிரஸ் அலுவலகத்துக்கு வாருங்கள். சந்திப்போம் உரையாடுவோம்” என்று குறிப்பிட்டிருந்தார் சசி தரூர்.
இன்று பிற்பகல் சென்னைக்கு விமானத்தில் வருகை தரும் சசி தரூர் கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் வழியில் இருக்கும் ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை செய்கிறார்.
அதன் பின் அடையாறில் இருக்கும் காமராஜர் நினைவிடத்துக்கு சென்று காமராஜருக்கு மரியாதை செய்கிறார்.
இதற்குப் பிறகு இன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
தமிழகத்தில் சசி தரூருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் முக்கிய நபராக இருப்பவர் சிவகங்கை எம்பியான கார்த்தி சிதம்பரம்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சசி தரூர் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தபோது 12 மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் சசி தரூரின் வேட்பு மனுவை முன் மொழிந்திருந்தனர்.
அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் கார்த்தி சிதம்பரம், அருள் பெத்தையா, விஜய் இளஞ்செழியன், சுரேஷ் பாபு, மார்த்தாண்டன், கே,.தணிகாசலம் ஆகியோர் முன் மொழிந்திருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் சசி தரூரை ஆதரிக்கும் கார்த்தி சிதம்பரம், அவரது வேட்பு மனுவையும் முன் மொழிந்து, ‘ சசி தரூரின் வேட்பு மனுவை முன் மொழிந்தவர்களில் ஒருவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
நமக்கு இப்போதைய தேவை புதுமையான சிந்தனையும் செயல்பாடும் கொண்ட உறுதியான துடிப்பாக கட்சியை நடத்தக் கூடிய தலைவர்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை வரும் சசி தரூரை வரவேற்க தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் கார்த்தி சிதம்பரம்.
இதற்கிடையில், அவரை எதிர்த்து போட்டியிடும் மல்லிகார்ஜுன் கார்கே இன்று கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கிறார்.
-ஆரா
மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி: மழையை எதிர்கொள்ள தயாராகும் அரசு!
ராகுல்காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்றார் சோனியா காந்தி!