ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
என்சிபி கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக இன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 8 என்சிபி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து மகாராஷ்டிராவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தா பானார்ஜி உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்தனர். என்சிபி கட்சிக்கு யாராவது உரிமை கோரினால் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் மக்களிடம் சென்று ஆதரவு கேட்போம். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறோம்.
இன்று நடைபெற்றதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை முடிவு செய்வது சபாநாயகரின் உரிமை. எங்களது முக்கிய பலம் சாமானிய மக்கள். அவர்கள் தான் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கட்சியை வலுப்படுத்துவதற்கான வேலைகளை நாங்கள் செய்வோம். கட்சிக்கு எதிராக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப்படும்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சிக்கு அஜித் பவார் ஆதரவளித்தது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கொள்ளை. தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்ததாக நான் ஒருபோதும் கூற மாட்டேன். இது என்சிபி பிரச்சனை அல்ல, மக்களின் பிரச்சனை. கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன். பிரதமர் மோடியின் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் தயக்கம் காட்டி ஷிண்டே ஆட்சியில் இணைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்