குடும்பத்தில் நடந்த பவர் யுத்தம்: முடிவை  வாபஸ் பெற்ற சரத் பவார்

Published On:

| By Aara

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் பதவியை கடந்த செவ்வாய் கிழமை (மே 2) ராஜினாமா செய்த சரத் பவார், கட்சி உறுப்பினர்களின் உணர்ச்சிகரமான எதிர்ப்பை அடுத்து  இப்போது பதவி விலகும் முடிவை திரும்பப் பெற்றுள்ளார். 

மே 2 ஆம் தேதி மும்பையில்,  தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான லோக் மாசே சங்கதி என்ற புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு விழாவில்  பேசினார்.

அப்போது, “நான் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். கட்சியின் தலைவர் பதவியில் இருந்துதான் விலகுகிறேனே தவிர, அரசியல், சமூக, கலாச்சார செயல்பாடுகளில் இருந்து விலகப் போவதில்லை. என் உயிர் இருக்கும் வரை  மக்களுக்காக செயல்பட்டுக் கொண்டுதான் இருப்பேன்” என்று பேசினார்.

அதுமட்டுமல்ல, “தற்போது நான் வகிக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இருக்கிறது. அதன் பின் நான் தேர்தல்களிலும் போட்டியிடப் போவதில்லை” என்றும் அறிவித்தார் சரத் பவார்.

sharad pawar revoke his decision

அந்த விழா மேடையில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகளும்,  எதிரே கூடியிருந்த கட்சி தொண்டர்களும் பவாரின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்து கண் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டனர். அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து, ‘வேண்டாம் வேண்டாம்… சாஹேப்… நீங்கள்தான் தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும்” என்று முழக்கம் எழுப்பினர். ஆனாலும் பவார் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று அறிவித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டார்.

தேசிய அரசியலிலே சரத் பவாரின் இந்த அறிவிப்பு ஆச்சரியத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியது. வரும் 2024  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வாய்ப்புள்ள சில தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் சரத் பவார்.

சமீபத்தில்  பவாரை அவரது மும்பை இல்லத்தில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானி சந்தித்து இரண்டரை மணி நேரம் பேசினார்.  சாவக்கர் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் சரத் பவார். இவ்வாறு சமீப காலமாக பவாரின் அரசியல் போக்கில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்திருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசியல் நோக்கர்கள் கருதினர்.  இந்த  அரசியல்  சூழலில்தான்  பவார் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

sharad pawar revoke his decision

ஒரு பக்கம் 82 வயதான சரத் பவாரை தலைவர் பதவியில் தொடருமாறு சீனியர்கள், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினாலும் இன்னொரு பக்கம் அடுத்த தலைவர் யார்  என்ற கேள்வியும் எழுந்தது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே பக்கம்தான் திரண்டனர்.

ஆயினும் சரத் பவாரின் அண்ணன் மகனும் தற்போதைய மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவாரும் கட்சியின் தலைமையை அடைய முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அஜித் பவார் ஏற்கனவே திடீரென தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பாஜகவுடன் கூட்டணி  அமைக்க முயற்சித்து சர்ச்சைக்குள்ளானார்.  அவ்வப்போது அவருக்கும், பவாருக்கும்  பிரச்சினைகள் வந்து செல்வதும் கட்சியில் வழக்கமாய் இருந்தது. 

இந்த நிலையில் சரத் பவாரோ தனது மகளே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றும், அஜித் பவார் மகாராஷ்டிர மாநில அரசியலை கவனிக்கலாம் என்று விரும்பினார். இதையே தன் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தார். ஆனால் குடும்பத்துக்குள் இது புகைச்சலை ஏற்படுத்தி வந்தது. 

“சுலேவை தனது அரசியல் வாரிசாக பவார் விரும்புகிறார் என்பது கட்சிக்குள் தெரியும். இருப்பினும், கணிசமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களை அஜித் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், இருவருக்கும் இடையே ஒரு ஏற்பாட்டை உருவாக்குவதே சிறந்த தீர்வு. அந்தவகையில், இருவரையும் பவார் வழிநடத்த முடியும்” என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

இந்த நிலையில்தான்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டக் குழு  இன்று (மே 5) மும்பையில் கூடியது. இந்நிலையில்  சரத் பவார் மேற்கொண்ட முடிவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினும் வேண்டுகோள் வைத்திருந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சீனியர்களும் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில்  கட்சிக்குள் சுலேவுக்கும், அஜித் பவாருக்கும் இடையில் நேரடியான மோதல் ஏற்பட சரத் பவாரின் முடிவு காரணமாக இருந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினர்.

sharad pawar revoke his decision

இந்த நிலையில் இன்று (மே 5)  கூடிய கட்சியின் உயர் மட்டக் குழுவில் சரத் பவாரின் ராஜினாமா  முடிவு நிராகரிக்கப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார்

“நான் எனது முடிவை திரும்பப் பெறுகிறேன்.  கட்சித் தொண்டர்களின், நிர்வாகிகளின்  உணர்வுகளை என்னால் மதிக்காமல் இருக்க முடியாது. உங்கள் அன்பின் காரணமாக, எனது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும், மூத்த தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் நான் மதிக்கிறேன். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுகிறேன்” என்று சரத் பவார் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அஜித் பவார் வரவில்லை. இது குறித்து கேட்டதற்கு,  “அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்றார் சரத் பவார்.

அடுத்த வாரிசு யார் என்பதில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பவர் யுத்தம் காரணமாகத்தான் 82 வயது மூத்த அரசியல்வாதியான பவார் தன் முடிவை திரும்பப் பெற்று, அக்கட்சியின் தலைவராகத் தொடர்கிறார்.

-வேந்தன்

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை” : ஆளுநர் குற்றச்சாட்டு!- காவல்துறை சொல்வது என்ன?

கள்ளழகரும் பச்சைப் பட்டும்… நிறத்தின் பின்னால் இருக்கும் நம்பிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment