ரூ.2000 நோட்டுகள்: பொதுமக்களுக்கு சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவுரை!

அரசியல்

ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற மக்கள் அவசரம் காட்ட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 19-ஆம் தேதி புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. நாளை முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் நாள் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் வரை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாணய தேவையை பூர்த்தி செய்ய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்று போதுமான அளவு ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. அதனால் ரூ.2000 நோட்டுகளின் தேவை மற்றும் அதன் ஆயுட்காலம் நிறைவடைந்துவிட்டது. இதனால் ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.

ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டது ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை கொள்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி சுத்தமான நோட்டுக்கொள்கையை பின்பற்றி வருகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் ரிசர்வ் வங்கி இதுபோன்று நாணயங்களை திரும்ப பெறும் அல்லது புதிய நாணயங்களை வெளியிடும். அதுபோல தான் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஆனால் அவை சட்டப்பூர்வமான டெண்டராகவே தற்போது வரை தொடர்கிறது.

ரூ.2000 நோட்டுகள் புழக்கம் ரூ.6,73,000 கோடியிலிருந்து ரூ.3,62,000 கோடியாக குறைந்துள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை விரைவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதற்காக தான் நான்கு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலும் இந்தியாவிலும் இருப்பவர்கள் சந்திக்கும் சிரமங்களை நாங்கள் உணர்ந்து செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறேன்.

ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்றால் மக்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அதனால் தான் செப்டம்பர் 30 என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.2000 நோட்டுகளை ஈடுசெய்யும் வகையில் ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவு ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். அனைத்து கடைகளிலும் ரூ.2000 நோட்டுகளை வாங்க மறுக்கக்கூடாது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் புழக்கத்தில் உள்ள அனைத்து 2000 ரூபாய் நோட்டுகளும் மீண்டும் அரசாங்கத்திற்கு திரும்ப வரும் என்று நம்புகிறோம்.

ரூ.2000 நோட்டுகளை மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு அழுக்கடைந்த அல்லது கிழிந்த மாற்று ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வழங்க வேண்டாம். கோடை வெப்பத்தை சமாளிக்கும் பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை வங்கிகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *