மே 1 முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு: நிழல் பட்ஜெட்டில் பாமக  

அரசியல்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி தானே தயாரித்த நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறது. கடந்த 21  ஆண்டுகளாக இந்த நிழல் பட்ஜெட் வெளியிடும் பணியை செய்து வருகிறது. 

இந்த வகையில் இன்று (மார்ச் 13) சென்னையில்  பாமகவின் 21 ஆவது நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த நிழல் பட்ஜெட்டில் 131 தலைப்புகளில் 514 கருத்துகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

”2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ.6,53,348.73 கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 2023-24ஆம் ஆண்டின் நிறைவில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருக்கும்.

தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஆகிய இரண்டும் சேர்த்து, 2023-24ஆம் ஆண்டின் நிறைவில் ரூ.12.53 லட்சம் கோடியாக இருக்கக்கூடும்.  இதற்கான ஒட்டுமொத்த வட்டி ரூ.1.02 லட்சம் கோடி” என நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”தமிழ்நாடு அரசு வட்டிக்காக மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.281.47 கோடியை செலுத்த வேண்டியிருக்கும்” என்று தமிழ்நாட்டின் கடன் சுமை பற்றி குறிப்பிட்டிருக்கும் இந்த நிதி நிலை அறிக்கையில்  2023-24 ஆம் ஆண்டை  போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பாண்டு என கூறியுள்ளனர்.

இதற்காக சில கனவு அறிவிப்புகளையும் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார்.

”போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக காவல்துறை டிஜிபி நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படும். மண்டலத்திற்கு ஒரு டிஐஜியும், இரு மாவட்டங்களுக்கு ஒரு கண்காணிப்பாளரும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.

போதைப் பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள், ஒருமுறைக்கு மேல் அக்குற்றத்தை செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். மே 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறைபடுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.  குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்” என்று நிழல் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது. 

இட ஒதுக்கீடு விவகாரத்திலும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

“மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பரிந்துரை அறிக்கையை, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.  சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

விஸ்வகர்மாக்கள், யாதவர்கள், முத்தரையர்கள், ஆகியோருக்கு மக்கள் தொகை அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும்.  நாவிதர், வண்ணார், பருவதராசகுலம், ஒட்டர், வலையர், அம்பலக்காரர், குரும்பர், குயவர், வேட்டுவக்கவுண்டர், ஊராளி கவுண்டர் ஆகிய 10 சமுதாயங்களும் ஒரு பிரிவாக உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள மற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உள்ஒதுக்கீடு / தொகுப்பு ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று பாமகவின் நிழல் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் முக்கியமான யோசனைகளையும் முன் வைத்துள்ளது பாமக

”தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.  அண்ணா பல்கலைக் கழகம் உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக (Anna University Institute of Eminence (IoE))  மாற்றப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் இடஒதுக்கீட்டில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும்.

பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க அண்ணா பல்கலைக் கழகம் – இணைப்பு (Anna University Affiliation) என்ற புதிய பல்கலைக் கழகம் உருவாக்கப்படும். சென்னைப் பல்கலைக் கழகம் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology – TIT) ஏற்படுத்தப்படும்” என்று முக்கியமான கனவுத் திட்டங்கள் பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருக்கின்றன.

வேந்தன்

தொடர் அமளி: மக்களவை மாநிலங்களவை ஒத்திவைப்பு!

சீமான் மீது வழக்குப்பதிவு: நன்றி தெரிவித்த பிரசாந்த் கிஷோர்

Shadow Budget of PMK Dr Ramadoss
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *