nirmala sitharaman vs su.venkatesan

பாஜக நிர்வாகி கைது: நிர்மலா சீதாராமன் vs சு.வெங்கடேசன்

அரசியல்

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், எம்.பி. சு.வெங்கடேசனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை அவதூறாக விமர்சித்ததாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் நேற்று (ஜூன் 16) இரவு சென்னையில் அவர் கைது செய்யப்பட்டார்.

nirmala sitharaman vs su.venkatesan

சட்ட ரீதியாக போராடுவோம்

இதற்கு பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றுக்காக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது கண்டனத்துக்குரியது.

மலக்குழி மரணங்களின் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல், அதைப் பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்துப் போராடுவோம்” என தெரிவித்திருந்தார்.

பொய்யை உண்மையாக்க களமிறங்கி உள்ளனர்

இதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர்.

மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி.

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய ஒன்றிய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைத் தளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.

பிரச்சினை என்ன?

மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு. வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் என்பது தான்.

ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துகூற முடியாதா?

இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை “பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்” என்று மாற்றி விடலாமா?

முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்சினை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது.

இதில் வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரம் பற்றி ஒன்றிய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் “இணையதள முடக்கம்” செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள்.

கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் இரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண். பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்” என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பொய்யா? பீதியை பரப்புவதா?

இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “எஸ்,ஜி.சூர்யா கைதானது பொய்யா? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழ்நாடு முதல்வர் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’?

ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை” என தெரிவித்துள்ளார்.

நீங்கள் கண்டிக்க வேண்டாமா?

நிர்மலா சீதாராமனின் மேற்கண்ட பதிவிற்கு எம்.பி. சு.வெங்கடேசன் அவரது ட்விட்டர் பதிவில், “மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா நிதியமைச்சரே.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையைக் கடப்பதும் பொய்யின் மாறுவேடமே” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இரண்டு பேருமே தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோனிஷா

அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி: எடப்பாடி கண்டனம்!

ஸ்குவாஷ் உலகக்கோப்பை: எகிப்து அணி மீண்டும் சாம்பியன்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *