கடந்த சில நாட்களாக செய்யாதுரை என்பவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அதேபோல கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரான வடவள்ளி சந்திரசேகரை குறிவைத்தும் ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ரெய்டுகள் குறித்து வருமான வரித்துறை நேற்று (ஜூலை 12) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கட்டுமான ஒப்பந்ததாரர், ரியல்எஸ்டேட், மற்றும் விளம்பரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள 2 தொழில் குழுமங்களில் வருமான வரித்துறையினர் 06.07.2022 அன்று சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோயம்புத்தூர், மதுரை நகரங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது, முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான, பல்வேறு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் இந்த இரு நிறுவனங்களும், கடந்த சில ஆண்டுகளாக போலியான கொள்முதல் மற்றும் செலவு கணக்குகளை காண்பித்து, வரிவிதிக்கத்தக்க வருமானத்தை மறைத்தது, ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் ஒன்று மேற்கொண்டதாக கூறப்படும் போலியான கொள்முதலுக்கு வழங்கப்பட்ட பணத்தை, ரொக்கமாக திரும்ப பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. கூட்டு முயற்சிகளில் லாப பகிர்வு செய்து கொண்டதாக கூறியும், பெருமளவு வருவாய் மறைக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இரண்டாவது நிறுவனம், பல்வேறு போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் போலி கொள்முதல் துணை ஒப்பந்த செலவுகளை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. முக்கியமான ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆவணங்களை பதுக்கி வைப்பதற்காக, இந்த நிறுவனம் ரகசிய மறைவிடங்களை பயன்படுத்தியதும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும், ரூ. 500 கோடிக்கு மேற்பட்ட கணக்கில் காட்டாத வருமானத்தை வைத்திருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தனது வழக்கப்படி பெயர் குறிப்பிடாமல் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது வருமான வரித்துறை.

செய்யாதுரை என்ற பெயர் அரசியல் வட்டாரங்களுக்கு புதிதல்ல. சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு 2018 இதே ஜூலை மாதம் செய்யாதுரை என்ற பெயர் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களை கலக்கியது. காரணம் அப்போதும் வருமான வரித்துறை செய்யாதுரையின் நிறுவனங்களைக் குறிவைத்து நடத்திய ரெய்டுதான். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அதாவது அவர் ஆட்சிக்கு வந்து அப்போது சுமார் ஒன்றரை வருடங்கள்தான் ஆகியிருந்தன. அன்று செய்யாதுரையின் எஸ்கேபி நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டின் அடிப்படையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், பாமகவின் அன்புமணி உள்ளிட்டோர் எடப்பாடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.
யார் இந்த செய்யாதுரை? அவர் அப்படி என்ன செய்துவிட்டார்?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாதுரை. இவரும் இவரது மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமம், தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. கடந்த 2018 ஜூலை 16, 17 தேதிகளில் இக்குழுமத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், குழுமத்தின் உரிமையாளர்கள், பங்குதாரர்களின் வீடுகளில் வருமானவரித் துறையைச் சேர்ந்த 40 அதிகாரிகள் 5 குழுக்களாகப் பிரிந்து 4 நாட்கள் சோதனை நடத்தினர்.
இந்த செய்யாதுரைக்கும் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி- அவரது சம்பந்தி ஆகியோருக்கு என்ன தொடர்பு என்பதை 2018 ஆம் ஆண்டிலேயே ஊழலுக்கு எதிராக போராடி வரும் அறப்போர் இயக்கம் வெளியிட்டது.
அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில்…
“நாகராஜன், செய்யாதுரை ஆகியோரின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இவர்கள் யார், முதல்வருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து கப்பலூர் வரையுள்ள இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்காக ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த பாலாஜி டோல்வேஸின் உரிமையாளர்கள் யார் என்றால் சுப்ரமணியன் பழனிசாமி மற்றும் நாகராஜன் செய்யாதுரை ஆகியோர். இந்த சுப்ரமணியன் பழனிசாமி யார் தெரியுமா? அவர்தான் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி.
2016ஆம் ஆண்டு தேர்தலில்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அஃபிடவிட்டில் தனது மருமகள் திவ்யா, ஆண்டாள் பேப்பர் மில்ஸ் யூனிட் 2-ல் ரூ.1 கோடியே 12 லட்சம் வரை பங்குகள் வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆண்டாள் பேப்பர் மில்ஸ் வருடாந்திர அறிக்கையில், சுப்ரமணியன் பழனிசாமியின் மகள்தான் திவ்யா என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சம்பந்திக்கே ஒப்பந்தங்களை அளித்து வருகிறார். பாலாஜி டோல்வேஸ், எஸ்.பி.கே. நிறுவனங்களுக்குப் பல ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன” என்று தகவல்களை அப்போதே வெளியிட்டார்கள் அறப்போர் இயக்கத்தினர்.
இதன் அடிப்படையில் அப்போதைய திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக இருக்கும் ஒரு ஒப்பந்ததாரர், அதே முதலமைச்சரின் சம்பந்தியுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் ஊழல் கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை வருமான வரித்துறை சோதனை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இவ்வளவு தகவல்கள் வெளிவந்த பிறகும் முதலமைச்சர் வாய்மூடி மௌனியாக அமைதி காக்கிறார்; முதலமைச்சர் கனத்த அமைதி காப்பதைப் பார்க்கும் போது “ஊழல் ராஜ்யம்” பற்றி மக்களுக்குப் பதில் சொல்ல முதலமைச்சரிடம் ஏதுமில்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது” என்றும் விமர்சித்தார்.
அப்போதைய பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸும், “வருமானவரிச் சோதனையில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலருக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் இந்த சோதனையில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த வருமான வரி சோதனைகளைப் போல
, இந்த சோதனையையும் முடித்துக் கொள்ளாமல் இந்த நிறுவனத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ள தொடர்பு, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் நடந்த ஊழல்கள், கருப்புப் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்து வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளைக் கொண்ட பல்முனை விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க மத்திய ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் செய்யாதுரை நிறுவனத்தின் மீதான ரெய்டு மேற்கொண்டதோடு சரி… வருமான வரித்துறை அது தொடர்பான உறுதியான மேல் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
இது ஒருபக்கம் என்றால் எடப்பாடி பழனிசாமி டெண்டர்களில் முறைகேடு செய்திருப்பதாகவும், உலக வங்கி விதிகளை மீறியிருப்பதாகவும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் திமுக சார்பில் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி. உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில் ஆர்.எஸ்.பாரதிக்கு 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், எடப்பாடிக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்திருந்தது.
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கை கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு தினத்தன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கப் போகிறது என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்னமும் விசாரணைக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் தற்போதைய அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியுடைய பார்ட்னரான செய்யாதுரை மீது மீண்டும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இதே ஜூலை மாதம் நடத்திய ரெய்டுக்குப் பின் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் செய்யாதுரையை நோக்கி ரெய்டும் நடந்து முடிந்துவிட்டது. இதனால் எடப்பாடி டென்ஷனில்தான் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை தங்கள் வசம் கொண்டுவருவதற்காக பாஜக மீண்டும் நடத்தும் விளையாட்டு இது என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த விளையாட்டுகளை பாஜக தீவிரமாக்கும் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
–வேந்தன்