மருத்துவ மாணவிகள் பகீர் புகார்: பாலியல் டாக்டரைக் காப்பாற்றும் பாலிடிக்ஸ் டாக்டர்கள்?

அரசியல்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத சக மாணவர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து கல்லூரி டீனிடம் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தர்மபுரியில் சேலம் ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த அரசு மருத்துவக்கல்லூரியில் 400 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

அதில் நூறு மாணவர்கள் பயிற்சியில்  இருந்துவருகிறார்கள், 500 இருக்கைகள் வசதியுள்ள மருத்துவமனையில் நாள் தோறும் சுமார் 1500 பேர் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று போகிறார்கள்.

அப்படிப்பட்ட மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளைத் தான் பேராசிரியரான டாக்டர் சதீஷ்குமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்துள்ளார்.

பொறுத்துக்கொள்ள முடியாத மாணவிகள் ஒன்று சேர்ந்து மாணவர்களுடனும் கலந்து ஆலோசனைகள் செய்துவிட்டு மருத்துவக் கல்லூரி டீனிடம் புகார் கொடுத்துள்ளார்கள்.

மருத்துவக் கல்லூரி உதவிப்  பேராசிரியர் டாக்டர் சதீஷ்குமார் மீது பாலியல் புகார் கொடுத்ததைப் பற்றி மாணவிகளிடம் விசாரித்தோம்.

”மாணவிகளைப் பார்த்தாலே, அந்த டாக்டர் பார்வை கொடூரமாக இருக்கும். அருகில் வந்து உரசுவார், தலையில் கை வைத்துத் தடவுவார், பிடித்த மாணவியை அழைத்து பாட்டு பாடச்சொல்லுவார்.

அந்த மாணவியை சுற்றிச் சுற்றி வந்து உடலைச் சீண்டிப் பார்ப்பார்.  நாங்களும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். ஆனால் நிலைமை மோசமாகியது.

கடந்த  ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு மாணவியிடம் மிகவும் அருவருப்பான முறையில் நடந்துகொண்டார். மறுநாள் ஆகஸ்ட் 23ஆம் தேதியும் டாக்டர் சதீஷ் நடவடிக்கை தொடரவே  மாணவிகள் தங்கள் சக மாணவர்களிடம் இதுபற்றி பேசி ஆலோசனை நடத்தினார்கள்.

அந்த மாணவிக்கு  ஆதரவாக 53 மாணவர்கள் ஒன்று சேர்ந்து  பேராசிரியர் சதீஷ் மீது புகார் எழுதி அதில்  கையெழுத்து போட்டு கல்லூரி டீன் அமுதவல்லியிடம் கொடுத்தோம்” என்றார்கள் மாணவிகள்.

sexual complaint against doctor

மாணவர்கள் கொடுத்த புகார் என்னாச்சு என்று கல்லூரி பேராசிரியர்களில் சிலரிடம் கேட்டோம். “புகார் கொடுத்த மாணவியின் பெற்றோர்கள் நிர்வாகத்திடம் நெருக்கடிகள் கொடுத்ததும், டீன் அமுதவல்லி  மூவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார். அந்த குழுவில் பேராசிரியர்கள் கண்மணி கார்த்திகேயன், தண்டர் சீப், சாந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டீன் அலுவலகத்திலிருந்து விசாரணை அழைப்பாணை 2022 செப்டம்பர் 2ஆம் தேதி, டாக்டர் ஆர் சதீஷ்குமார் உதவி பேராசிரியருக்கு அனுப்பப்பட்டது.

அந்த அழைப்பாணையில் செப்டம்பர் 6ஆம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் இரண்டாம் தளத்தில் உள்ள கல்லூரி கூட்டரங்கிற்கு வந்து விசாரணை அலுவலர்கள் முன் தவறாமல் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

sexual complaint against doctor

அதன்படியே 6ஆம் தேதி டாக்டர் சதீஷ்குமார் ஆஜரானார்.  விசாரணையில் சிரித்தபடியே அலட்சியமான பதில்களைச் சொல்லி விசாரணைக் குழுவினரிடம், ’பார்த்து முடியுங்கள்’ என்று சொல்லிவிட்டு கேஷுவலாக போயிருக்கிறார் சதீஷ்குமார்.

அதே நாளில் புகார் கொடுத்த மாணவி மற்றும் மூன்று மாணவிகளைச் சாட்சியாக அழைத்து விசாரித்தார்கள். அதில் டாக்டர் சதீஷ்குமார், மாணவிகளிடம் நடந்துகொண்ட விதங்களை பற்றியும் பாலியல் சீண்டல்கள் பற்றியும் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களிடம்  மறைமுகமாக மிரட்டலாகவும் அக்கறையாகவும்  அட்வைஸ் செய்துள்ளனர் விசாரணைக் குழுவினர். விசாரணை, கோர்ட், கேஸ்  என்று போனால் உங்கள் படிப்பு வீணாய் போகும்.

அதைவிட்டுவிடுங்க அவரை உன்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள் விசாரணைக் குழுவினர்.

இதை ஏற்காமல்  மாணவிகள் தைரியமாக நின்றிருக்கிறார்கள். அப்படியும் டாக்டர் சதீஷை காப்பாற்றும் நோக்கில் விசாரணைக் குழு உறுப்பினர்  டாக்டர் சாந்தி, சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரை அழைத்து சமரசமாகப் போங்க பிரச்சனைகள் வேண்டாம், உங்கள் பொண்ணும்  நல்லபடியாகப் படிப்பை முடித்துவிட்டு டாக்டராக வரவேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார்.

ஆனால் மாணவியின் தந்தையோ, ‘எங்கள் புகாருக்கு என்ன நடவடிக்கை  எடுத்தீங்க?’ என்று கேட்டுள்ளார். இப்போது வரை இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவில்லை” என்றனர்.

sexual complaint against doctor

அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் பாலியல் தொல்லை புகார் பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  டீன் அமுதவல்லியிடம் கேட்டோம்.

”செக்ஸ் டார்ச்சர் என்று சொல்லமுடியாது.  தலையில் கை வெச்சாரு, சீண்டினார், பாட சொன்னாருனுதான் சொல்கிறார்கள்.  அதை விசாரித்து எங்கள் மேல் அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

தற்போது புகாருக்குள்ளான டாக்டர் சதீஷ்குமாரை அந்த வகுப்புக்குப் பாடம் எடுக்கப் போகக் கூடாது என்று நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.

உதவிப் பேராசிரியர் டாக்டர் சதீஷ் மீது ஏற்கனவே செக்‌ஸ் புகார்  காவல் நிலையம் வரையில் சென்றுள்ளது.

அப்போதும் இப்போதும் டாக்டர் சதீஷ்குமாரை   பாமக எம்பியும் திமுக எம்பியும்  காப்பாற்றப் போராடிவருகிறார்கள் என்கிறார்கள் மருத்துவக் கல்லூரி ஊழியர்களே.

ma subramanian

மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொல்லை செய்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான், நாளை செப்டம்பர் 13ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் நம்மாண்டஹள்ளி, நல்லம்பள்ளி, ஒகேனக்கல் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

அமைச்சரின் கவனத்துக்கும் இந்த பிரச்சினையை எடுத்துச் செல்ல முயன்று வருகிறார்கள் மருத்துவ மாணவிகள்.

பாலியல் தொல்லை டாக்டருக்கு பாலிடிக்ஸ் டாக்டர்கள் ஆதரவு தருவது கொடுமையிலும் கொடுமை!

-வணங்காமுடி

மறுதலிக்கப்படுமாம் தற்கொலைகள் ! 

+1
0
+1
0
+1
6
+1
3
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *