முதல்வர் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத் தீர்மானத்தின்போது சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சர் சட்டப்பேரவையில் இன்று (ஜனவரி 12) தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப் பெருந்தகை, வரலாற்று சிறப்புமிக்க திட்டமான சேது சமுத்திர திட்டம் குறித்து, முதலமைச்சர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை வழிமொழிந்து ஏக மனதாக வரவேற்கின்றோம்.
இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
1986 முதல் 2016 வரை என்னென்ன அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நடந்தது அரசியல் கட்சிகள் என்னென்ன நிலைப்பாடுகள் எடுத்தார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம்.
அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க திட்டம் தமிழகத்தில் குறிப்பாக தென்தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கான மகுடமாக இருக்கக்கூடிய திட்டத்தை,
பிரிட்டிஷ்கரர் காலத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் என அனைவரும் கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்தார்கள்.

ஏற்கனவே இதை ஆதரிக்கிறோம் என்று சொன்னவர்கள், தமிழகத்தின் மேல் அக்கறை இருப்பது போல் பேசியவர்கள் எல்லாம் சில நேரம் மாற்றியும் பேசியிருக்கின்றனர்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் பேரியக்கம் தான் இத்திட்டம் கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டியது என்று பேசி இருக்கின்றார்கள்.
காங்கிரஸ் இதை கொண்டு வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர், அவர்கள் உயிரோடும் இல்லை என்றார்.
இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்எல்ஏ செங்கோட்டையன், ஜெயலலிதாவை வேண்டுமென்றே செல்வப்பெருந்தகை கொச்சைப்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
அதற்கு சபாநாயகர் அவைக்குறிப்பில் உள்ளதைதான் சுட்டிக்காட்டுகிறார், இதில் கோவப்படவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
அப்போது செல்வப் பெருந்தகை, அவைக்குறிப்பில் உள்ளதை எல்லாம் பேசினால் இந்த இடத்தில் யாருமே உட்கார முடியாது என்றார்.
அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, சேது சமுத்திரத்திட்டம் வரவேற்கக்கூடிய ஒன்றுதான்.
ஆனால் அதில் உள்ள சாதக, பாதகங்களை மட்டுமே பேசவேண்டும். அதைவிட்டு முன்னாள் முதலமைச்சர் பற்றி கூறுவதை ஏற்க முடியாது என்றார்.
அதற்கு சபாநாயகர் சேது சமுத்திர தீர்மானத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டார், ஓ.பன்னீர்செல்வமோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார்.
அப்போது முதலமைச்சர் குறுக்கிட்டு, இந்த தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றித் தர விரும்புகிறேன். தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் வேண்டாம் என்றுக் கேட்டுக்கொண்டார்.
கலை.ரா