வைஃபை ஆன் செய்ததும் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் பற்றிய தேசிய அளவிலான செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அதே நேரம் மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த வீடியோ காட்சிகளும் இன்பாக்ஸில் வந்தன.
அவற்றை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மேற்கு வங்காளத்தில் தனித்தே போட்டியிடப் போவதாக திருணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று (ஜனவரி 25) அறிவித்துவிட்டார். அதேபோல பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதலமைச்சர் மான் அறிவித்துள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முக்கியமான மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவல் மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்க திறப்பு விழாவுக்கு சென்றிருந்த ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் வருத்தம் அடைந்திருக்கிறார். ஏனெனில் இந்தியா கூட்டணி என்று பெயரிடப்படுவதற்கு முன்பாகவே இந்த கூட்டணி உருவாக்கத்திற்காக கடுமையாக காய் நகர்த்தியவர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் கடந்த 2023 மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலினுடைய பிறந்தநாள் விழா பல தேசியத் தலைவர்கள் முன்னிலையில் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஸ்டாலின், ’காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்பது கரை சேர உதவாது. எனவே நமக்குள் இருக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்றாக ஒரு வலிமையான அணியை கட்டி எழுப்ப வேண்டும்’ என்று தனது பிறந்தநாள் செய்தியாக தெரிவித்து இருந்தார்.
அதற்குப் பிறகு தொடர்ந்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு பொது அணியை அமைப்பதற்கு ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இதன் விளைவாக இந்தியா கூட்டணி உருவானது. தொகுதிப் பங்கீடு பற்றி இந்தியா கூட்டணி விரைவில் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு பற்றி பேச இருக்கிறோம் என்று டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் பேசியிருந்தார்.
அதுமட்டுமல்ல சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியா கூட்டணியின் ஒற்றுமைக்காகவே பொது வெளியிலும் தனிப்பட்ட முறையிலும் பேசி வந்தார் ஸ்டாலின்.
கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சென்னையில் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவுக்காக உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சென்னை வந்திருந்தார். அப்போது அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசிய ஸ்டாலின், ‘இந்தியாவில் ஆட்சி மாற்றம் வர வேண்டுமென்றால் உங்கள் உபி மாநிலம்தான் முக்கியமான வேலைகளை செய்ய வேண்டும். 80 எம்பி தொகுதிகள் இருக்கும் உங்களது மாநிலத்தில் பாஜக கடுமையான சரிவை சந்தித்தால்தான் ஆட்சி அமைப்பதில் இருந்து அவர்களைத் தடுக்க முடியும். அதற்கு நீங்கள் காங்கிரஸோடு கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அப்போது அகிலேஷ், ‘காங்கிரஸுக்கு உபியில் இப்போது வேட்பாளர் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அமேதியிலேயே ராகுல் தோற்றுவிட்டார். அதனால் காங்கிரசும் எங்களோடு அனுசரித்து சென்றால் நன்றாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார்.
இதேபோல அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி ஆகியோரோடும் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் மேற்கு வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் இன்று இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மதுரையில் இருந்த ஸ்டாலினுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் சக அமைச்சர்களிடம் தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார் முதல்வர்.
வெளிநாடு செல்வதற்கு முன்பாக இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரைத் தொடர்புகொண்டு ஸ்டாலின் பேச இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 மார்ச் 1 தனது பிறந்தநாளன்று ஸ்டாலின் வெளியிட்ட செய்தியின்படியே காங்கிரசை உள்ளடக்கிய தேசிய அளவிலான கூட்டணி தொடர்வதற்கு தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் எடுக்க ஸ்டாலின் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இந்த நிலையில்தான், இன்று மம்தா பானர்ஜிக்கு விபத்து ஏற்பட்டு அவரது தலையில் காயமடைந்தார். இதுகுறித்து அதிர்ச்சி அடைந்ததாக தனது சமூக தளத்தில் பதிவிட்டிருக்கும் ஸ்டாலின், விரைவில் முழு குணம் அடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் உடல் நலம் பற்றி போன் செய்து விசாரிக்கும் ஸ்டாலின் அப்படியே இந்தியா கூட்டணியின் நலம் பற்றியும் மம்தாவிடம் விசாரிப்பார் என்கிறார்கள் திமுக சீனியர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தொப்பூர் பாலத்தில் கோர விபத்து: தொடரும் கொடூரங்கள்!
‘இந்தியா’ கூட்டணி போல இல்லறம்’: அப்டேட் குமாரு
நம்ப கையை வச்சி எது விளங்கி இருக்கு!
போகாத ஊருக்கு வழி எதற்கு?
கிடைக்கிற 5 பத்துக்கு இந்த வெட்டி பந்தா தேவையா!
மத்தியரசை அனுசரிச்சி ஆக வேண்டியதை மக்களுக்கு செஞ்சிட்டு காலத்தை ஓட்டுவது விட்டுட்டு..