செப்டம்பர் 15 – 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : ஸ்டாலின்

Published On:

| By Kavi

திமுக அளித்த வாக்குறுதிகளில் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது, இன்னும் 1 சதவிகிதம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நிறைவேற்றப்பட்டுவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழா இன்று (செப்டம்பர் 13) சென்னையில் நடைபெற்றது, இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மணமக்களையும், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியனையும் வாழ்த்தி பேசிய முதல்வர் ஸ்டாலின், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மிகப் பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள். அதற்குப் பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி உருவாக்கித் தருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அந்த உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். அதற்குப்பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய இடைத்தேர்தல்கள். அந்த இடைத்தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

தொடர்ந்து வெற்றியை பெறுவதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப் போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை தந்தோம்.

அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அப்படிப்பட்ட உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறோம்.

இன்னும் சொல்கிறேன். 100-க்கு 99 சதவீதம் இதுவரையில் நாம் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். மீதம் இருக்கிற 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிறைவேற்றக்கூடிய திட்டமாகத்தான் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதையும் நான் இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவை காப்பாற்றியாக வேண்டும் என்று சொன்னால், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். எப்படி சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தீர்களோ, அதேபோல், இந்தியா முழுவதும் அந்த வெற்றியை தேடித் தரவேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையை சேர்த்து 40 இடங்களிலும், மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தாருங்கள்” என கூறினார்.  .

பிரியா

Asia Cup: வரலாற்று சாதனை படைத்த ஜடேஜா

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டமா? -அமைச்சர் துரைமுருகன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel