காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துக்கட்சி ஆதரவுடன் தனித்தீர்மானம் கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
டெல்டா விவசாயிகளின் தண்ணீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் உத்தரவையும் மதிக்காமல், காவிரி நீரை திறந்து விடுவதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் கர்நாடகா அரசு தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.
காவிரி ஆணைய உத்தரவுப்படி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 15 வரை தமிழகத்திற்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு குடிக்கவே போதுமான தண்ணீர் இல்லை என்று கூறி, காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில், காவிரி நீரை திறந்து விடக்கோரி தமிழக விவசாய அமைப்புகளும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளும் கடந்த சில மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வரும் 11ஆம் தேதி காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (அக்டோபர் 7) காலை 154 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 32.25 அடியாக குறைந்துள்ளதை அடுத்து நாளை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராகி வரும் டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வரும் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தனித்தீர்மானம் கொண்டுவர உள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜிகர்தண்டா Double X : ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!
போர் மூண்ட இஸ்ரேலில் சிக்கிய தமிழர்கள்… உதவி எண்கள் அறிவிப்பு!