வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்டோபர் 8) காலை நடந்தது.
கடந்த மாதம் தமிழக அமைச்சரவை மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் புதிய அமைச்சர்களான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன் ஆகியோரும், செந்தில் பாலாஜி, ஆவடி நாசர் ஆகியோரும் அமைச்சரவை கூட்டத்தில் இன்று பங்கேற்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி – கே.என்.நேரு
தேனி – ஐ.பெரியசாமி
திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி – எ.வ. வேலு
தருமபுரி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தென்காசி – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
கன்னியாகுமரி – தங்கம் தென்னரசு
நீலகிரி – மு.பெ. சாமிநாதன்
கிருஷ்ணகிரி – அர. சக்கரபாணி
கோயம்புத்தூர் – வி. செந்தில் பாலாஜி
காஞ்சிபுரம் – ஆர். காந்தி
பெரம்பலூர் – எஸ்.எஸ். சிவசங்கர்
நாகப்பட்டினம் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மயிலாடுதுறை – சிவ.வீ. மெய்யநாதன்
சேலம் மாவட்டத்துக்கு இதுவரை கே.என்.நேரு பொறுப்பு அமைச்சராக இருந்தார். அம்மாவட்டத்துக்கு பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் அமைச்சராக பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டதால்… நேரு, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல அன்பில் மகேஸ் இதுவரை தஞ்சை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தார். தஞ்சாவூருக்கு கோவி செழியன் அமைச்சரவை பிரதிநித்துவம் பெற்றுவிட்டதால், அன்பில் மகேஸ் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் நீக்கப்பட்டதால், அம்மாவட்டத்துக்கு நெல்லை பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் அகற்றப்பட்டதால்… மு.பெ.சாமிநாதன் இப்போது நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தார் செந்தில்பாலாஜி. அவர் சிறைக்கு சென்றதும் முத்துசாமி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்பட்டார். செந்தில்பாலாஜி அமைச்சரவைக்குள் வந்ததும் மீண்டும் இப்போது கோவை பொறுப்பில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடந்த மாதம் நடந்த அமைச்சரவை மாற்றங்களின் அடிப்படையில் பொறுப்பு அமைச்சர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹரியானா: சுற்றுகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் ஏன் தாமதம்? காங்கிரஸ் கேள்வி!
”கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் ரொம்ப அதிகம்” : அன்புமணி