வைஃபை ஆன் செய்ததும் திமுகவில் மாவட்ட பொறுப்பாளர்கள் மாற்றம், அமைச்சரவை துறை மாற்றம் ஆகிய அறிவிப்புகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Senthilbalaji Stalin serious discussion
“திமுகவில் பல மாதங்களாக நிர்வாகிகள் எதிர்பார்த்து காத்திருந்த தொகுதி மறு சீரமைப்போடு கூடிய மாவட்ட செயலாளர்கள் மாற்றம் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுகவில் அதிரடி மாற்றம்!
இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தினந்தோறும் வந்து தேர்தல் பணியாற்றிய தோப்பு வெங்கடாசலம் தனது ஒரே வழியாக செந்தில் பாலாஜியை மட்டுமே நம்பி இருந்தார். செந்தில்பாலாஜியின் அறிவுரைப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் தினந்தோறும் இடைத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் இந்த மாற்றத்தில் செந்தில் பாலாஜி மூலம் தோப்பு வெங்கடாசலத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து வந்த முத்துசாமி மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருக்கும் நிலையில், அதே வகையில் தோப்பு வெங்கடாசலமும் பதவி பெற்றிருக்கிறார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கே தெரியாமல் ரகசியமாக வைத்திருந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். Senthilbalaji Stalin serious discussion
இதே நேரம் இன்னொரு ரகசிய ஆலோசனையையும் சீரியஸாக மேற்கொண்டு வருகிறார் முதல்வர்.
செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி… உச்ச நீதிமன்ற கேள்விகள்!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்து பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2024 செப்டம்பர் 26ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.
வந்த அடுத்த நாளே அவர் மீண்டும் அமைச்சராகிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் எப்போதோ செய்ய வேண்டிய அமைச்சரவை மாற்றத்தையும், உதயநிதியின் துணை முதல்வர் அறிவிப்பையும் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்காகவே தள்ளிப்போட்டுக் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அந்த அளவுக்கு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின்.
இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் கேட்ட சில கடுமையான கேள்விகள் திமுக தலைமையில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.
செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்து அமைச்சராக பதவி ஏற்று கொண்ட நிலையில், அவரது அதிகார பலத்தால் அவர் மீதான வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 12ஆம் தேதி வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி ஏ. எஸ். ஓகா, அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்களான முக்குல் ரோத்தகி, அபிஷேக் மனு சிங்கி ஆகியோரிடம், ‘இந்தக் கேள்வி உங்களுக்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனாலும் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் செந்தில் பாலாஜி மீது இருக்கும் நிலையில், அவர் இன்னமும் அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா? ஆம், இல்லை என நேரடியாக பதில் சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பினார்.

தடம்புரண்டதா செந்தில்பாலாஜி வழக்கு?
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மற்றும் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகி விட்டதால் அவர் மீதான வழக்கு விசாரணை தடம் புரண்ட ரயில் போல் ஆகிவிட்டது’ என்று கூறினார்கள்.
இன்னும் குறிப்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘விசாரணையில் தொடர்ந்து சாட்சியம் அளித்து வந்த ஒரு தடயவியல் நிபுணர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானதிலிருந்து சாட்சி சொல்லத் தயங்குகிறார். இவரைப் போல இன்னும் பல அரசு ஊழியர்கள் எவ்வாறு அமைச்சருக்கு எதிராக சாட்சி சொல்வார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்து மார்ச் 4ஆம் தேதி பதில் சொல்லுங்கள் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி. Senthilbalaji Stalin serious discussion
சட்ட முடிவுகளும், அரசியல் முடிவுகளும்!

வழக்கு விசாரணை முடிந்த உடனேயே மூத்த வழக்கறிஞர்கள் முக்குல் ரோத்தகி, அபிஷேக் சிங்கி ஆகியோர் செந்தில் பாலாஜி தரப்பினரை தொடர்பு கொண்டு… ‘இந்த விஷயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி மிகுந்த சீரியஸாக இருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்த நீதிபதியான ஓகாவே இப்போது கேள்வி எழுப்பி இருக்கிறார் என்றால் இதன் தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இனி இந்த வழக்கு சட்டரீதியான முடிவுகளை விட அரசியல் ரீதியான முடிவுகளை தான் எதிர்பார்க்கிறது’ என்று தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற விசாரணை விவரங்கள் இன்ச் பை இஞ்சாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று தெரியப்படுத்தப்பட்டது.
ஸ்டாலின் ஆலோசனை!
மார்ச் 4ஆம் தேதிக்குள் அதாவது அடுத்த விசாரணை தேதிக்குள் இது பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழல் முதலமைச்சருக்கு இருக்கிறது.
அமைச்சரவையில் தொடர விரும்புகிறேன் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பதிலளித்தால் என்ன செய்ய முடியும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அப்போது சில வழக்கறிஞர்கள், ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி மிகுந்த சீரியஸாக இருக்கிறார் என நமக்கு வாதாடிய வழக்கறிஞர்களே தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அப்படி ஒரு பதிலை உச்சநீதிமன்றத்தில் நாம் சொல்லும் பட்சத்தில்… சிம்பிளாக ஜாமீனை ரத்து செய்துவிட்டால் என்ன ஆகும்? மீண்டும் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அரசியல் ரீதியாக நமக்கு பெரும் பின்னடைவாகவும் ஆகிவிடும்’ என்று கூறியிருக்கிறார்கள்.
இதைத் தவிர வேறு என்னென்ன சட்டரீதியான வழிகள் இருக்கின்றன என்ற ஆலோசனையில் முதல்வர் சீரியஸாக ஈடுபட்டுள்ளார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.