அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை எப்போது என்று இன்று (ஜூன் 20) சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 20) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எப்போது இதய அறுவை சிகிச்சை நடைபெற போகிறது?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது பதிலளித்த அமைச்சர், “காவேரி மருத்துவமனையிடம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறோம். நாளை அதிகாலை ஓபன் கார்ட் சர்ஜரி செய்யப்படும். செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் மூன்று ரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்தது ஓமந்தூரார் மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த அடைப்புகளால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க பிளட் தின்னர் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை நிறுத்திவிட்டு 5 அல்லது 6 நாட்களுக்குப் பிறகு தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
இல்லை என்றால் அதிகளவு ரத்தம் வெளியேற (bleeding complications) வாய்ப்பு ஏற்பட்டுவிடும். எனவே அறுவை சிகிச்சை செய்வதை ஒத்தி வைத்தார்கள். நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்வதற்கான தகுதியைச் செந்தில் பாலாஜி பெற்றிருக்கிறார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ நிர்வாகத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம், அதன்படி நாளை அதிகாலையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்படும்” என்றார் மா.சுப்பிரமணியன்.
மின்னம்பலம் இணைய இதழில், ஜூன் 16 ஆம் தேதி, ‘ஓமந்தூரார் டு காவேரி…. செந்தில்பாலாஜிக்கு நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் விரிவான புலனாய்வுச் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியின் முடிவில், “ ஜூன் 15 ஆம் தேதி இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜி நன்றாக தூங்குவதற்கு சில மருந்துகளைக் கொடுத்திருக்கிறார்கள். சில நாட்களுக்குப் பின் நன்றாக தூங்கினார்.
ஜூன் 16 காலையில் நன்றாக தூங்கி எழுந்த செந்தில்பாலாஜி டிவி பார்க்க வேண்டும், செய்தித் தாள்கள் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு மருத்துவர்கள், ‘ஏற்கனவே நீங்க டென்ஷனா இருக்கீங்க. இப்போதைக்கு அதெல்லாம் உங்களுக்கு எதுவும் வேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.
’நான் கொஞ்சம் வாக்கிங் போகணுமே’ என்று கேட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. ஆனால் அவரது அறையே பரந்து விரிந்திருக்கும் நிலையில் அறைக்குள்ளேயே கொஞ்ச நேரம் வாக்கிங் போகச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
வரும் புதன் கிழமை செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்கள் காவேரி மருத்துவமனைக் குழுவினர்” என்று தெரிவித்திருந்தோம்.
மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்தும்படி தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனே, ‘செந்தில்பாலாஜிக்கு நாளை (புதன் கிழமை) அதிகாலை இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
–வேந்தன்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!