வைஃபை ஆன் செய்ததும் கரூரில் மீண்டும் வருமானவரி துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை செய்திருப்பது பற்றி இன்பாக்ஸில் தகவல் வந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“துறையில்லாத அமைச்சராக தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி… இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு இன்று ஜூன் 24ஆம் தேதி தனி அறைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
அவரை ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்த போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது. பிறகு எட்டு நாட்கள் அமலாக்கத்துறை கஸ்டடியும் வழங்கியது. ஆனால் அந்த இடத்தில் எந்த எட்டு நாட்களும் அவர் காவேரி மருத்துவமனையில் இருந்ததால் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்து விசாரிக்க முடியவில்லை. உச்சநீதிமன்றம் வரை அமலாக்கத்துறை சென்றும் இதில் வெற்றி பெற முடியவில்லை.
செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு இன்னும் 10 முதல் 15 நாட்கள் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில்… அவரை இப்போது விசாரிக்க முடியாத சூழலில் இருக்கிறது அமலாக்கத்துறை.
இந்த நிலையில்தான் தற்போது வரை தலைமறைவாகவே இருக்கும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரை கைது செய்ய தீவிரமாக களம் இறங்கி இருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடந்த மாதம் கரூரில் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் நடந்த ஐடி ரெய்டுகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் தொகுத்து வருகிறார்கள். அந்த ரைடின்போது சீல் வைக்கப்பட்ட லாக்கர்களை ஜூன் 23, 24 தேதிகளில் மீண்டும் திறந்து ஆவணங்களை கைப்பற்றி இருக்கிறார்கள் வருமானவரித்துறையினர்.
மேலும் ஐ டி ரெய்டின்போது செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைத்த ஆவணங்களை வைத்து அடுத்த கட்ட நகர்வுகளை கூர்மைப்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக செந்தில்பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் என்பவரைக் குறிவைத்தும் அப்போது ரெய்டு நடந்தது. அவரது அலுவலகத்தில் வரவு செலவு கணக்கு பார்க்கும் நம்பிக்கையான பெண் ஊழியர் ஷோபனா. இவர் திறமையானவர் என்பதால் செந்தில்பாலாஜியும், அசோக்கும் இவர் மூலமாக பல பரிவர்த்தனைகளை நடத்தியதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் சங்கர் ஆனந்த் நிறுவனத்தில் செந்தில்பாலாஜி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார். ஷோபனாவின் அலுவலகத்தில் சிக்கிய ஆதாரங்களில் செந்தில்பாலாஜி திமுகவின் கூட்டணிக் கட்சியினருக்கு கொடுத்த பணத்தின் கணக்கு வழக்கு உட்பட பல கணக்கு வழக்குகள் சிக்கியிருக்கின்றன.
அதன் அடிப்படையில் ஷோபனாவிடம் அப்போது விசாரித்தபோது, ‘நான் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அவ்வளவுதான். வேறு எதுவும் எனக்குத் தெரியாது’ என்று கூறியிருக்கிறார். இதுபோன்று செந்தில்பாலாஜி, அசோக் ஆகியோருக்கு வேண்டப்பட்டவர்கள் என்று நீண்ட பட்டியலை வைத்துக் கொண்டு அவர்களை அமலாக்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கண்காணிப்பதை அறிந்துகொண்ட பலரும் தங்களது தொடர்புகளை எல்லாம் முடக்கிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார்கள்.
இப்படி அமலாக்கத்துறை ஒருபக்கம் செந்தில்பாலாஜியின் நெட்வொர்க்குகளை கண்டறிந்து ஒவ்வொருவராக விசாரணை செய்ய முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கை வேட்டையாடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களோ, ‘அண்ணன் இப்போது மருத்துவமனையில் இருக்கும் நிலையில், தம்பி அவ்வளவு சீக்கிரம் சிக்க மாட்டார். அவர் டெல்லியில் மிகத் தீவிரமாக லாபி செய்துகொண்டிருக்கிறார்.
விரைவில் அமலாக்கத்துறையின் வேகம் குறையும் பாருங்கள்’ என்கிறார்கள். ஆனால் அமலாக்கத்துறையோ செந்தில்பாலாஜியை கைது செய்தும் அவரை எங்களால் விசாரிக்க முடியவில்லை. இந்த நிலையில் இப்போது அமைதியாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், செந்தில்பாலாஜி முழு உடல் நலம் பெற்று வருவதற்குள் எங்கள் சம்மனை மதிக்காமல் தலைமறைவாக இருக்கும் அசோக்கை தூக்கிவிடுவோம்’ என்கிறார்கள் உறுதியான குரலில்.
செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை செஷன்ஸ், உயர் நீதிமன்றங்களில் ஜூன் கடைசி வாரத்திலும் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்திலும் வருகிறது. அதற்குள் இரு தரப்புமே தங்களது இலக்கை அடைய தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
வாஸ்து காரணமாக மூடப்பட்ட கதவு: சித்தராமையா அதிரடி!
துப்புரவு பணி செய்த பாகிஸ்தான் வீரர்: வைரல் வீடியோ!