“என்னால் தலைவருக்கு தர்ம சங்கடம்” -செந்தில்பாலாஜி உருக்கம்!

அரசியல்

ஆளுநரால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதன் பின் அவராலேயே அந்த பரிந்துரை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்னமும் சட்ட ரீதியாக ‘துறை இல்லாத அமைச்சர்’ ஆக காவேரி மருத்துவமனையில் இருக்கிறார் செந்தில்பாலாஜி.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி செந்தில்பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின்னர் அன்றே காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது ஹீமோடைனமிக் ரீதியாக நிலையாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

அதன் பின் செந்தில்பாலாஜி ஆபரேஷன் அறையில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். செந்தில்பாலாஜிக்கு நடைபயிற்சியில் ஈடுபட மருத்துவர்கள் உதவியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்ற விசாரணைக்காக காணொலி மூலமாக நீதிபதி அல்லி முன்னிலையில் மருத்துவமனையில் இருந்தபடியே ஆஜரானார் செந்தில்பாலாஜி. அப்போது, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று நீதிபதி அல்லி கேட்க, ‘வலியோடுதான் இருக்கிறேன்’ என்று பதிலளித்தார் செந்தில்பாலாஜி. இவைதான் செந்தில்பாலாஜி பற்றி பொதுவெளியில் வெளிவந்த தகவல்களாக இருக்கின்றன.

அதேநேரம் தன்னை மையமாக வைத்து கடந்த மூன்று வாரங்களாக நடக்கும் அரசியல் சர்ச்சைகள் பற்றி செந்தில்பாலாஜி என்ன நினைக்கிறார் என்பது பற்றிய விஷயங்கள் எதுவும் வெளிவரவில்லை.

Senthilbalaji Meltdown on the Activities of MK Stalin

இந்த நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், காவேரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரும், செந்தில்பாலாஜியின் குடும்ப மருத்துவருமான டாக்டர் எழிலன் அவ்வப்போது காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜியை பார்த்து வருகிறார்.

செந்தில்பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதி என்பதால் புழல் சிறை அதிகாரிகள் காவேரி மருத்துவமனையில் கண்காணிப்புப் பணியில் இருக்கிறார்கள்.

மருத்துவர்களைத் தவிர வேறு யாரும் செந்தில்பாலாஜியை பார்க்க முடியாது என்பதே நிலைமை. டாக்டர் எழிலன் காவேரி மருத்துவமனை மருத்துவர் என்பதாலும், செந்தில்பாலாஜியின் குடும்ப மருத்துவர் என்பதாலும் சீரிய இடைவெளியில் செந்தில்பாலாஜியை அவரால் சந்திக்க முடிகிறது.

ஜூன் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க சென்றார் டாக்டர் எழிலன். அதன் பின் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்று செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக தனது கருத்துகளையும் தெரிவித்து… காவேரி நிர்வாக இயக்குனர் அரவிந்தனிடம் முதல்வர் முன்னிலையிலேயே அலைபேசியில் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது தொடர்பாக பேசினார்.

அதன் பிறகுதான் காவேரி மருத்துவமனைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனைவி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. உயர் நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியது. இது தொடர்பாக ஓமந்தூரார்-டு காவேரி: செந்தில்பாலாஜிக்கு நடந்தது என்ன,? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த பின்னணியில் அரசியல்வாதியாக திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் காவேரி மருத்துவமனை டாக்டர் என்ற முறையிலும் செந்தில்பாலாஜியின் குடும்ப டாக்டர் என்ற முறையிலும் அவ்வபோது செந்தில்பாலாஜியை சந்தித்துப் பேசி வருகிறார் டாக்டர் எழிலன்.

அப்போது, ‘முதலமைச்சர் உங்கள் நலனில் அக்கறையாக இருக்கிறார். உங்கள் ஹெல்த் பற்றி என்கிட்ட கேட்டு தெரிந்துகொள்கிறார்.

உங்களை தைரியமாக இருக்கச் சொன்னார். உங்களுக்காக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர். விரைவில் உங்களை வெளியே கொண்டுவந்துவிடுவார். அதேநேரம் உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ளச் சொன்னார். நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார்’ என்று செந்தில்பாலாஜியிடம் தெரிவித்துள்ளார் எழிலன்.

அதற்கு மிக மெதுவான குரலில் செந்தில்பாலாஜி, “தலைவரையும் தலைவர் குடும்பத்தையும் எப்போதும் மறக்கமாட்டேன். என்னால் தலைவருக்கு பல வகையிலும் தர்மசங்கடம் ஏற்பட்டுவிட்டது. அதுதான் கஷ்டமாக இருக்கு’ என்று சொல்லியுள்ளார். டாக்டர் எழிலனோ, ‘அப்படியெல்லாம் நினைக்காதீங்க. அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நம் தலைவர் உங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார், மருத்துவ ரீதியாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்க டென்ஷன் இல்லாமல் ரெஸ்ட் எடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

இப்படித்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன செந்தில்பாலாஜியின் மருத்துவமனை நாட்கள் என்கிறார்கள் காவேரி வட்டாரங்களில்.

வணங்காமுடி

கிச்சன் கீர்த்தனா: எல்லோரும் குடிக்கலாமா… ஏ.பி.சி. ஜூஸை?

முடங்கிய ட்விட்டர்: கட்டுப்பாடுகளை விதித்த எலோன் மஸ்க்

கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள்!

சதுரகிரிக்குச் செல்ல அனுமதி!

+1
1
+1
1
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *