முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22வது முறையாக நீட்டித்து, சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 20) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமலாக்கத் துறை விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதனை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி அல்லி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கக்கூடாது என செந்தில் பாலாஜி கோருவதில் எந்த அடிப்படையும் இல்லை என்று தெரிவித்த நீதிபதி அல்லி, குற்றச்சாட்டுப் பதிவுக்காக நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி அல்லிக்கு இன்று விடுமுறை என்பதால் சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் இன்று எந்தவொரு வாதங்களும் முன் வைக்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செந்தில்பாலாஜி மனு குறித்து அதற்குள் அமலாக்கத்துறை விரிவான பதிலை தாக்கல் செய்யவும் சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் 22வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் : முழு விபரம்!