செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஹேபியஸ் கார்ப்பஸ் மனுவில்… மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று செந்தில்பாலாஜியின் மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர். இளங்கோ ஆகியோர் வாதாடிய நிலையில் இன்று (ஜூலை 12) காலை விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்று அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை வைக்கத் தொடங்கியுள்ளார்.
நேற்று நடந்த விசாரணையில் கபில் சிபல், “ செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும்.
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம். அதுதான் அமலாக்கத் துறையின் பணி.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலனாய்வு மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சோதனை செய்வது, கைப்பற்றுவது, முடக்குவது ஆகியவைதான் அமலாக்கத்துறையின் வேலை என்றும் அதற்கு மேல் அமலாக்கத்துறை எதுவும் செய்ய முடியாது” என்று வாதிட்டார்.
மேலும், “ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை? அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதை எதிர்த்து அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாமே?” என்று கேட்டார். காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில், காவலில் எடுக்காததால், முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை கோர முடியாது என்றார்.
இந்த வழக்கில் ஆரம்பம் முதலே அமலாக்கத் துறை அதிகார வரம்பை மீறியுள்ளார். சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளார்” என்று வாதிட்டார் கபில் சிபல். அவரைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவும் வாதிட்டார்.
இந்நிலையில் நேற்று நீதிபதி கார்த்திகேயன் எழுப்பிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
”அவர்களை நோக்கி விரல் நீட்டும் முன் உங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அமலாக்கத்துறை கைது தொடர்பாக தகவலை தந்தபோது ஏன் ஏற்க மறுத்தீர்கள்? உங்களுக்கும் கடமை இருக்கிறது. நீதிபதி சக்கரவர்த்தி ’நாடகம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அமலாக்கத்துறை தெரிவிக்கும்போது, அதை நீங்கள் கேட்க விரும்பவில்லை. கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாமே?” என்று நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த என்.ஆர். இளங்கோ, “கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டுள்ளன எனவும், இது முறைகேடு என வாதிட்டார். ஜூன் 13ம் தேதி சோதனை துவங்கியது முதல் செந்தில் பாலாஜி ஒத்துழைத்தார். வாக்குமூலமும் அளித்தார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கப் பிரிவினர் குற்றம் சாட்டுகின்றனர்” என்று கூறினார்.
இந்த நிலையில் கபில் சிபல் முன் வைத்த, “அமலாக்கத்துறை விசாரணை செய்ய முடியுமே தவிர புலனாய்வு செய்ய முடியாது” என்ற வாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று காலை 10.30 மணிக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னை வழக்கறிஞர்களும் தமிழ்நாட்டின் பிற பகுதியிலுள்ள வழக்கறிஞர்களும் இன்று இந்த வழக்கு விசாரணையை கவனிக்க உயர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார்கள்.
வேந்தன்