சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அளித்த பேட்டியில், “இது பதினைந்து மாதக்கால, சமரசமற்ற கடுமையான சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த பதினைந்து மாதக் காலகட்டத்தில் தனிமையான, துயரமான நாட்களை அவர் அனுபவித்திருப்பார்.
இவை அனைத்தையும் மனவுறுதியுடன் எதிர்க்கொண்டு, இன்று செந்தில் பாலாஜி வெளிவந்திருக்கிறார். பாஜகவின் பிடியில் உள்ள அமலாக்கத்துறை இந்தியா கூட்டணி தலைவர்களை தொடர்ச்சியாக கைது செய்வதும், அவர்களுக்கு இருக்கும் அடிப்படை சட்ட உரிமைகளை மதிக்காமல் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காதபடி செய்து வருகிறது.
ஆனால், இவை அனைத்தையும் கடந்து, கைது செய்யப்பட்டுள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் சட்டப்பூர்வமாக போராடி வெற்றிப்பெற்றுள்ளார்கள். இதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு எதிராக இந்தியா கூட்டணி தலைவர்கள் வெற்றிப்பெற்றுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.
அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன்” – ஸ்டாலின் மகிழ்ச்சி!
“செந்தில் பாலாஜி இன்று மாலை சிறையில் இருந்து வெளியே வருவார்”: என்.ஆர்.இளங்கோ பேட்டி!