செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறையின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஓராண்டாக அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, மற்றொரு நீதிமன்ற விசாரணையை சுட்டிக்காட்டி வழக்கை ஒத்திவைக்க கோரிய அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற விசாரணையில், அமைச்சர் மற்றும் அதிகாரத்தில் இல்லாததால் ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரினார்.
அப்போது செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளது என நீதிபதி ஓகா தெரிவித்தார்.
அத்துடன் அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
குறிப்பாக முன்கணிப்பு குற்றம் நிரூபிக்கப்படாத போது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு என்னவாகும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் வாதிட்ட சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்க திணறிய நிலையில் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
தொடர்ந்து செந்தில்பாலாஜி மீதான வழக்கு ஆதாரமின்றி ஜோடிக்கப்பட்டது என்றும், ஆவணங்கள் அனைத்து திருத்தப்பட்ட, போலியானவையாக உள்ளன. அவற்றை நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்காமல் அமலாக்கத்துறை பயன்படுத்தி வருகிறார்கள் என செந்தில்பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து 13 மாதங்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் எப்போது தான் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் 3 மாதங்களில் விசாரணை முடிவடையும் என்றும் தமிழ்நாடு அரசு வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறது என்றும் கூற, அதனை உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஏற்க மறுத்து நிராகரித்தார்.
தொடர்ந்து சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட மனிஷ் சிசோடியாவின் வழக்கின் தீர்ப்பு செந்தில்பாலாஜிக்கு பொருந்துமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதிட, செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் வாதிட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “ஜாமீன் கோரி ஒருவர் தாக்கல் செய்கிறார் என்றால் அதற்கான முகாந்திரங்களை பார்க்க வேண்டி உள்ளது. விசாரணை நிறைவு பெறும் வரை ஒருவரை சிறையில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் கூறி உள்ளது. அதை சுட்டிக்காட்டிதான் நான் பிணை கேட்கின்றேன். மற்றபடி வழக்கு விசாரணை நடைபெறுவதை வேறு ஒரு தனி வழக்காகதான் பார்க்க வேண்டும். மனுதாரர் 300 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவர் இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார் என்பதையும் கவனித்தில் கொள்ள வேண்டும். அமைச்சர் மற்றும் அதிகாரத்தில் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.
இவ்வாறு இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு : சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!