செந்தில்பாலாஜி அதிகாலை கைது, நெஞ்சுவலியால் கதறல்- மருத்துவமனையில் அனுமதி! 

Published On:

| By Aara

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

நேற்று ஜூன் 13 காலை முதல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னையில் இருக்கிற அரசு இல்லம், தலைமைச் செயலகத்தில் இருக்கிற அவரது அமைச்சர் அலுவலகம்  உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்த நிலையில்…  நேற்று காலை வாக்கிங் சென்ற பிறகு தனது வீட்டுக்கு திரும்பிய செந்தில் பாலாஜி அதுவரை வெளியே வரவில்லை.

அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் இருக்கிற அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சை பிடித்துக் கொண்டு திடீரென கதறினார். நெஞ்சு வலிக்கிறது என்று அவர் கதறியதால் அதிர்ந்துபோன அதிகாரிகள், இந்த நிலையில் அவரை உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தகவல் கிடைத்ததும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் எ.வ. வேலு, உதயநிதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விரைந்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel