சென்னை உயர் நீதிமன்றம் இன்று(அக்டோபர் 19) ஜாமீன் மறுத்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி 4 மாதங்களாக புழல் சிறையில் உள்ளார்.
அவரது தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி செந்தில்பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்களுக்கு பின் இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், ”மருத்துவ காரணங்கள் ஏற்கும் வகையில் இல்லாததால் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது என்றும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் சரணடையாத அவரது தம்பி அசோக் குமாரை கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து உடனடியாக செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ராம் சங்கர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மேலும் செந்தில் பாலாஜியின் இதய அறுவை சிகிச்சையைக் கருத்தில் கொண்டு மேல்முறையீட்டை அவசர வழக்காக நாளையே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், செந்தில்பாலாஜி மேல்முறையீட்டு மனு அக்டோபர் 30ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சிவண்ணாவின் ’கோஸ்ட்’ – ட்விட்டர் விமர்சனம்!