செந்தில்பாலாஜியின் புதிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றம் இன்று (மார்ச் 28) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக செந்தில் பாலாஜியை பிப்ரவரி 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுக்கக்கோரி செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி மனு மீதி இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் கிடைத்த பின் அந்த ஆவணங்களின் அடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் என்றும், வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விடுமுறை என்பதால், சென்னை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில், செந்தில் பாலாஜியின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் உயர்வு!
டைட்டானிக் படத்தின் மரக்கதவு இத்தனை கோடிக்கு ஏலமா?