அமைச்சர் பதவி ராஜினாமா : சிறையில் இருந்து செந்தில் பாலாஜி கடிதம்!

Published On:

| By christopher

Senthil Balaji's Resigning Letter

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தமிழக முதல்வருக்கு உருக்கமான கடிதம் அனுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைக் கடந்த ஜனவரி 30 தேதி விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “கடைநிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையிலிருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிப்பது ஏன்? இதன்மூலம் மக்களுக்கு அரசு என்ன சொல்ல வருகிறது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நேற்று (பிப்ரவரி 12) இரவு அனுப்பியுள்ளார்.

அதில், ‘உங்கள் (முதல்வர் மு.க.ஸ்டாலின்) மதிப்பிற்கு உட்பட்ட தமிழக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், சில தீய சக்திகள் என் மீது பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர். நான் நிரபராதி, உண்மை நிலைபெற சட்டப்பூர்வமாக தொடர்ந்து போராடுவேன். நமது நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, விரைவில் நீதி வழங்கப்படும்.

நீதிக்கான எனது போராட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட காரணங்களால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதை தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji's Resigning Letter

இந்தக் கடிதம், ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.

வழக்கின் பின்னணி!

அதிமுக ஆட்சி காலத்தில் 2011 – 2015-ம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தப்போது போக்குவரத்துக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கை  விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 13 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கேட்டு அவரது தரப்பில் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை முதன்மை மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது 19ஆவது முறையாகச் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு நாளை (பிப்ரவரி 14) விசாரணைக்கு வரவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஹெல்த் டிப்ஸ்: படுத்ததும் தூங்க வேண்டுமா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share