அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்தது.
கடந்த 2023 ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி, ‘அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் திட்டவட்டமானவை’ என்று கூறி ஜாமீன் வழங்க மறுத்தார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்டு மாதம் சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் செந்தில்பாலாஜி. அதையும் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது முதன்மை அமர்வு நீதிமன்றம்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கின் மெரிட் அடிப்படையில் அல்லாமல் முழுக்க முழுக்க மருத்துவ காரணங்களின் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் செந்தில்பாலாஜி. அதை அமலாக்கத்துறை கடுமையாக எதிர்த்தது. செந்தில்பாலாஜி ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.
இந்த ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்றும் மருத்துவ காரணத்துக்காக ஜாமீன் வழங்குமாறு செந்தில்பாலாஜி வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. ‘மீண்டும் செஷன்ஸ் கோர்ட்டை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தான் விடா முயற்சியின் அடுத்த கட்டமாக அமைச்சர் செந்தில்பாலாஜி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு முறையும் ஜாமீன் மனுவின் மீது, “செந்தில்பாலாஜி இப்போது சிறையில் இருந்தாலும் அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஜாமீன் அளித்தால் வழக்கின் முக்கிய சாட்சிகளை தனது செல்வாக்கால் கலைத்துவிடுவார்’ என்று அமலாக்கத்துறை காரணம் சொல்லிவந்தது.
இந்த அடிப்படையில் தனது மூன்றாவது ஜாமீன் மனுவில், “ இந்த வழக்கில் ஆவணங்கள் அமலாக்கத்துறையால் திருத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு 180 நாட்களுக்கும் மேலாக சிறைக்குள் உள்ளேன். இருதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறேன். நான் ஓர் அப்பாவி.
நீண்ட நேரம் நிற்கவோ அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருக்கவோ கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் கலைக்க எந்த வாய்ப்பும் கிடையாது. நானோ அல்லது எனது குடும்பத்தினரோ சாட்சிகளை மிரட்டியதாகவோ அல்லது அவர்களுக்கு நிர்பந்தம் கொடுத்ததாகவோ இதுவரையிலும் எந்த புகாரும் இல்லை. கூடுதல் விசாரணை தேவை என அமலாக்கத்துறையும் கோரவில்லை.
தொடர்ந்து சட்டத்தை மதித்து நடப்பவன். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று தனது மூன்றாவது ஜாமீன் மனுவில் கோரியுள்ளார் செந்தில்பாலாஜி.
ஜாமீன் மனு மீதான வழக்கில் வாதாடிய செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “விசாரணைக் காலமே தண்டனைக் காலம் போல அமையக் கூடாது. செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் தண்டனை வழங்கப்பட்டதைப் போல ஆறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.
வழக்கம்போல அமலாக்கத்துறை, ‘செந்தில்பாலாஜி வெளியே வந்தால் அவரது செல்வாக்கை வைத்து வழக்கை திசை திருப்புவார்’ என்ற காரணத்தையே கூறியது.
இந்த வாதங்களைக் கேட்டு இன்று தீர்ப்பளிப்பதாக தெரிவித்திருந்தார் நீதிபதி அல்லி.
அதன்படி இன்று (ஜனவரி 12) தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். மூன்றாவது முறையாக செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எதற்கு இத்தனை வழக்கறிஞர்கள்?: பொன்முடி வழக்கில் நீதிபதி கேள்வி!