செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். நேற்று அவருக்கு பைபாஸ் சர்ஜரியும் செய்யப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று (ஜூன் 22) மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு விசாரணை தொடங்கிய உடனேயே யார் தரப்பில் வாதத்தை முன்வைப்பது என்பதிலேயே பரபரப்பு தொடங்கிவிட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் தான் முதல் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ இந்த மனு விசாரணைக்கு உகந்தது என்றும் எனவே தங்கள் தரப்பில் தான் வாதத்தை முன்வைக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள் செந்தில் பாலாஜி தரப்பு முதலில் வாதத்தை முன்வைக்க அனுமதி அளித்தனர். தொடர்ந்து இரு தரப்பும் காரசாரமாக வாதங்களை முன்வைத்தனர்.
இறுதியாக, “அமலாக்கப்பிரிவு பதில் அளிக்க வேறு நாளில் வழக்கை தள்ளி வைக்க வேண்டும். சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலத்துடன் சேர்க்கக் கூடாது” என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை வைத்தார்.
அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மோனிஷா