செந்தில் பாலாஜி மனைவி கேவியட் மனு தாக்கல்!
செந்தில் பாலாஜியின் மனைவி இன்று (ஜூன் 20) உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை ஜூன் 23ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கக் கடந்த ஜூன் 16ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
ஆனால் செந்தில் பாலாஜி, இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இதனால் அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராக நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு முன் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அதில், ஏற்கனவே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முதலில் மறுப்புத் தெரிவித்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு கூறியது.
இதையடுத்து செந்தில் பாலாஜி செல்வாக்கு மிக்க அமைச்சர் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்ததை அமலாக்கத்துறை சுட்டிக் காட்டிய நிலையில், நாளை (ஜூன் 21) விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தச்சூழலில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்த வழக்கில் செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதி அல்லி முன்பு முறையீடு
இதனிடையே இன்று அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு முறையீடு செய்துள்ளனர்.
“உடல்நிலையைக் கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியைக் காவலில் எடுக்க முடியவில்லை.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது” என்று அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான அவகாசம் இன்னும் 3 தினங்களே இருக்கும் நிலையிலும், நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கும் நிலையிலும் இன்று முறையீடு செய்துள்ளது அமலாக்கத் துறை.
பிரியா
மீண்டும் கிழக்கையும் மேற்கையும் இணைக்குமா தமிழகம்? பகுதி 13
நிதிஷ் குமார் திருவாரூர் வருகை ரத்து?