Jyotimani victory : Senthil Balaji who did successful election works from jail

ஜோதிமணி வெற்றி: சிறையில் இருந்தே சம்பவம் செய்த செந்தில் பாலாஜி

அரசியல்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  தமிழகம், புதுச்சேரியில் இருக்கும்  பிற 39 தொகுதிகளை விட சற்று வித்தியாசமான  சூழலில் தேர்தலை எதிர்கொண்டது கரூர் தொகுதி.

காரணம்  கரூர் மக்களவைத் தொகுதியின்  3  சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய  கரூர் மாவட்டத்தின்  அமைச்சராக இருந்த  கரூர்  திமுகவின் மாவட்ட செயலாளராக இருக்கிற செந்தில்பாலாஜி சிறையில் இருந்து இந்த தேர்தலை எதிர்கொண்டது தான்.

செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு முழுமையாக ஒரு வருடம் ஆகப் போகிற நிலையில் கரூர் மாவட்ட திமுக செயலாளராக அவருக்கு பதில் வேறு யாரையும் திமுக தலைமை நியமிக்கவில்லை.

இந்த நிலையில் புழல் சிறையில் இருந்தபடியே திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் அறிவுரைகளை வழங்கி தேர்தலை கட்சி நிர்வாகிகள் எதிர்கொள்ள வழிகாட்டி இருக்கிறார் செந்தில் பாலாஜி.

இந்த அடிப்படையில்  கரூர்  மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி  சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Image

கரூர் மக்களவைத் தொகுதியில்  இருக்கும்  ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிகள் கரூர் மாவட்டத்துக்குள் வருகின்றன. மணப்பாறை, விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் திருச்சி மாவட்டத்திலும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும் வருகிறது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவு தொடர்பான புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும்போது செந்தில்பாலாஜியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட  சட்டமன்றத் தொகுதிகளில்…. திமுக கூட்டணியில் காங்கிரசின் வெற்றி வித்தியாசம் அதிகமாகவும் பிற மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வித்தியாசம் சற்றே குறைவாகவும்  இருக்கிறது.

கரூர் சட்டமன்றத் தொகுதியில்  காங்கிரஸ் கட்சி 90 ஆயிரத்து 149 வாக்குகளைப் பெற்றுள்ளது. இங்கே அதிமுக 62 ஆயிரத்து 577 வாக்குகள் பெற்றிருக்கிறது. இங்கே வெற்றி வித்தியாசம் சுமார் 28 ஆயிரம்,
இதேபோல அரவக்குறிச்சியில் காங்கிரஸ் 87 ஆயிரத்து 390 வாக்குகளைப் பெற்றிருக்க, எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக 44, 342 வாக்குகளையே பெற்றது.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 89,520 வாக்குகள் பெற்றார். இங்கே அதிமுக வேட்பாளர் 50 ஆயிரத்து 577 வாக்குகளையே பெற்றார்.

மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் பெருமளவு வாக்குகள் பெற்றிருந்தாலும் அதிமுக வேட்பாளருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையிலான வித்தியாசம் செந்தில்பாலாஜியின் தொகுதிகளில் சற்றே அதிகரித்து காணப்படுவது ரிசல்ட்டில் தெரிகிறது.

செந்தில்பாலாஜி தொகுதிகளில் (கரூர் மாவட்டம்) வித்தியாச எண்ணிக்கை!
அரவக்குறிச்சி 43 ஆயிரத்து 48
கரூர் 27 ஆயிரத்து 572
கிருஷ்ணராயபுரம் 38 ஆயிரத்து 943

திருச்சி 
மணப்பாறை 25,428

புதுக்கோட்டை 
விராலிமலை 6, 723

திண்டுக்கல்
வேடசந்தூர் 23,906

செந்தில்பாலாஜியின் சிறை ஸ்கெட்ச்
கரூர் தொகுதியின் நிலவரம் பற்றி மின்னம்பலத்தில் தொடர்ந்து எழுதி வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக ஜோதிமணிக்கும் செந்தில்பாலாஜிக்கும் இடையே முரண்பாடுகள் பெரிதாயின.

அதன் விளைவாக… தேர்தலுக்கு முன்னர், சிறையில் இருந்த செந்தில்பாலாஜி திமுக தலைமைக்கு, ‘இம்முறை கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் திமுகவில் இருந்து தனது ஆதரவாளர் ஒருவரையும் வேட்பாளருக்காக பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் கரூர் தொகுதியை கேட்டு திமுக தலைவருக்கு அழுத்தம் கொடுத்தது. ராகுல் காந்தி வரைக்கும் பேசி கரூர் தொகுதியை தனக்கு உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சித்தார் ஜோதிமணி.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்…. ‘செந்தில்பாலாஜி சிபாரிசா, ராகுல் சிபாரிசா என்றால் ராகுல் சிபாரிசுதான்’ என்ற முடிவுக்கு வந்தார். இதனை சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியிடமும் தெரியப்படுத்தினார். அதன் பின் ஜோதிமணியும் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு தன் தரப்பில் இருந்து சில தகவல்களை அனுப்பினார்.

இந்த சூழலில்தான் செந்தில்பாலாஜி சிறையில் இருந்து வழக்கறிஞர்கள் மூலம் தனது பி.ஏ.க்களுக்கு, கரூர் மாவட்டத்தில் இருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கிய தகவலை அனுப்பினார்.

“நான் வெளியே இருந்தால் எப்படி வேலை செய்வீர்களோ, அதேபோல வேலை செய்து ஜோதிமணியை வெற்றி பெற வைக்க வேண்டும். கரூர் எம்பி தொகுதிக்கு உட்பட்ட மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளை விட, நமது மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வித்தியாசம் அதிகமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டார்.

அதன்படியே செந்தில்பாலாஜி டீம் கரூரில் வேலை செய்து ஜோதிமணிக்கு செந்தில்பாலாஜி மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வித்தியாசத்தை பெற்றுத் தந்திருக்கிறது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்பி ஜோதிமணி, “நமக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய்பிரச்சாரங்களை முறியடித்து ,மீண்டும் ஒரு மகத்தான வெற்றியைப் பரிசளித்த, எமது கரூர் நாடாளுமன்ற தொகுதி சொந்தங்களின் மகத்தான அன்பிற்கும்,ஆதரவிற்கும் தலைவணங்குகிறேன். மகத்தான வெற்றியைப் பரிசளித்த எமது மக்களுக்கும், இந்த வெற்றிக்காக அயராது அர்ப்பணிப்போடு உழைத்த இந்தியா கூட்டணியின் தலைவர்கள், கருர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி, அமைச்சர்கள் சக்கரபாணி, அன்பில் மகேஷ் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து அதே  அர்ப்பணிப்போடும், நேர்மையோடும் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுப்போம். சிறப்பான எதிர்காலத்தை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்” என்று நன்றி சொல்லியிருக்கிறார்.

தனது எம்பி தொகுதியில் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

’தலைவரின் உத்தரவுக்காக சிறையில் இருந்து கொண்டே தனது மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அதிக லீடிங் பெற வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கரூர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்க்ள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

”முடிஞ்சா பாகிஸ்தானுக்கு எதிரா அடிச்சி பாரு” : இந்திய வீரரை வம்பிழுக்கும் பாக். முன்னாள் வீரர்!

விமர்சனம்: சத்யபாமா!

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *