”செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏழு மாதங்களுக்கு மேலாக அனுமதி வழங்காமல் தமிழ்நாடு ஆளுநர் தாமதம் செய்தது ஏன்?” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
தொடர்ந்து சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஒய்.பாலாஜி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போது வரையில் நிலுவையில் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக நடைபெறும் ஊழல் வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் தமிழக அரசு செய்து வரும் தாமதத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணையின் போது, செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோப்பின் நகல், அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்ட விவரத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘இந்த வழக்கில் தொடர்புடைய 73 அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வாஷிங்டன் தனசேகரன் நியமனம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு தான் செந்தில்பாலாஜி மீதான நடவடிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்” என கூறப்பட்டுள்ளது. மேலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் இந்த பதில் மனுவில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு முன்பு இந்த வழக்கானது இன்று(செப்டம்பர் 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கின் விசாரணையை மேற்கொள்ள அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கொடுத்த கோப்புகளின் மீது ஏழு மாதங்களுக்கு மேலாக எந்த முடிவும் எடுக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தாமதம் செய்தது ஏன்?” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும் ஆளுநரின் செயல்பாடுகள் தங்களுக்கு ஆச்சரியம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில், ”இந்த வழக்கு மிக முக்கியமானது என்பதால் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும். எனவே தனி நீதிபதி அமர்வு நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
அதற்கு, “ஏற்கெனவே எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் உள்ள நிலையில், எதற்கு இந்த வழக்கில் மட்டும் தனி நீதிபதி கேட்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம் ஆத்மி எம்எல்ஏ அமலாக்கத் துறையால் கைது!
உருவக்கேலி எல்லாவற்றையும் தாண்டி திருமண நாள் கொண்டாடுறோம் – விமர்சித்தவர்களுக்கு ரவீந்தர் பதிலடி