அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனால் இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆஜராகி “அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் அல்ல. அவர்களால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது” என்ற வாதங்களை முன்வைத்தனர்.
அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அவரை விசாரிப்பது அமலாக்கத்துறையின் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட” என்று வாதம் செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நிறைவுபெற்ற நிலையில் ஆட்கொணர்வு வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, எம்எம் சுந்தரேஷ் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. அதனால் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும். சட்டப்பிரிவு 19-ன் படி காவல்துறை மட்டுமல்ல மற்ற அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க வழிவகை செய்கிறது.
செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை ஐந்து நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம். காவலில் வைக்கப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு விசாரணை மேற்கொள்ள முடியாது என்ற அனுபம் குல்கர்னி தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேறு அமர்விற்கு அனுப்பப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
செல்வம்
13-வது நாளாக முடக்கம்: மக்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு!
“செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரிக்கலாம்” – உச்சநீதிமன்றம்